பௌண்டரி இன்றி அதிக ஓட்டம்
இந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக்கில் ஷிம்ரோன் ஹெட்மியர் ஒரு பௌண்டரி கூட பெறாது 91 ஓட்டங்களைக் குவித்தார். சென் கீட்ஸ் அணிக்கு எதிராக கயானா அமசோன் வொர்ரியஸ் அணிக்காகவே அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றார். இதன்போது அவர் ஒரு பௌண்டரி கூட பெறாததற்கு என்ன 39 பந்துகளில் 11 சிக்ஸர்களை விளாசியே 91 ஓட்டங்களைப் பெற்றார்.
அதாவது டி20 கிரிகெட்டில் ஒரு பௌண்டரி கூட பெறாது பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் இதுதான். முன்னதாக 2022 ஜூனில் கொழும்பில் நடந்த பொலிஸ் அணிக்கு எதிரான போட்டியில் செபஸ்டியன் அணி சார்பில் ஷஷ்ரிக புஸ்ஸேகொள்ள ஒரு பௌண்டரி கூட பெறாது 78 ஓட்டங்களைக் குவித்தது சாதனையாக இருந்தது. இதன்போது ஷஷ்ரிக 40 பந்துகளில் 7 சிக்ஸர்களை விளாசி இருந்தார். ஆனால் டி20 போட்டி ஒன்றில் ஒரு பௌண்டரி அல்லது ஒரு சிக்ஸர் கூட பெறாது அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற சாதனை ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த நவ்தீப் பூயாவையே சாரும். 2008 ஓகஸ்ட் மாதம் பெல்பெஸ்டில் நடந்த பெர்முடா அணிக்கு எதிரான போட்டியில் அவர் 54 பந்துகளில் 38 ஓட்டங்களைப் பெற்றதோடு அனைத்து ஓட்டங்களையும் ஓடியே பெற்றார். நல்லவேளை ஸ்கொட்லாந்து அந்தப் போட்டியில் வெற்றி பெற்றது.
டெண்டுல்கரின் விசித்திர சாதனை
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சக வீரர்களுடன் ஆடியவர் யார் தெரியுமா?அது இங்கிலாந்தின் கிராஹம் கூச் தான். அவர் டெஸ்ட் ஆடிய காலத்தில் மொத்தமாக 113 சக வீரர்களுடன் ஆடி இருக்கிறார். இந்த வரிசையில் மற்றொரு இங்கிலாந்து வீரரான பிரான்க் வூல்லி 111 சக வீரர்களுடன் ஆடி இரண்டாவது இடத்திலும் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 110 சக வீரர்களுடன் ஆடி மூன்றாம் இடத்திலும் உள்ளனர். ஆனால் தம்முன் விளையாடிய எதிரணி வீரர்களையும் சேர்த்துப் பார்த்தால் டெண்டுல்கரை விஞ்ச ஆளில்லை. அவர் எதிரணி வீரர்கள் உட்பட மொத்தம் 492 வீரர்களுடன் டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கிறார். இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கு ஷவ்னாரின் சந்தர்போல் எதிரணி வீரர்கள் உட்பட 426 வீரர்களுடன் ஆடியிருக்கிறார்.
ஒருநாள் சர்வதேச போட்டிகளைப் பொறுத்தவரை அதிக சக அணி வீரர்களுடன் ஆடிய சாதனை மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெயில் வசமே இருக்கிறது. அவர் மொத்தம் 128 சக அணி வீரர்களுடன் ஆடியிருக்கிறார். மேற்கிந்திய தீவுகள் அண்மைக் காலத்தில் ஸ்திரமற்ற நிலையில் இருப்பதால் அணிக்கு மாறி மாறி புதிய வீரர்கள் வருவது கெயில் இந்த சாதனையை படைக்க உதவி இருக்கிறது.
ஆனால் டெண்டுல்கர் சக வீரர்கள் மற்றும் எதிரண வீரர்கள் என்று மொத்த 743 வீரர்களுடன் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடி முன்னிலையில் இருப்பதோடு ஜயவர்தன இவ்வாறு மொத்தம் 725 வீரர்களுடனும், ஜயசூரிய மொத்தம் 714 வீரர்களுடனும் ஆடியுள்ளனர்.
லாராவின் அசாத்திய சாதனை
ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அணித் தலைவராக அதிகூடிய ஓட்டங்களை பெற்றவர் என்ற சாதனையில் இந்திய வீரர்களை அசைக்க முடியாது. விரேந்திர செஹ்வாக் 2011 ஆம் ஆண்டு இந்தோரில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் 219 ஓட்டங்களை விளாசினார். அந்தப் போட்டியில் அவர் இந்திய அணித் தலைவராகவும் இருந்தார்.
இந்த வரிசையில் இரண்டாவது இடத்திலும் இந்திய வீரரே இருக்கிறார். அது ரோஹித் ஷர்மா. 2017 டிசம்பரில் மொஹாலியில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணித் தலைவராக அவர் ஆட்டமிழக்காது 208 ஓட்டங்களைப் பெற்றார். ஆனால் இவர்களுக்கு முன்னாள் ஒருநாள் சர்வதேச போட்டியில் அணித் தலைவராக அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற சாதனை இலங்கையின் சனத் ஜயசூரியவே படைத்திருந்தார். 2000 ஆம் ஒக்டோபரில் ஷார்ஜாவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஜயசூரிய 189 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
என்றாலும் டெஸ்ட் போட்டிகளில் பிரையன் லாராவை யாராலும் நெருங்கக் கூட முடியாது. 2004 ஆம் ஆண்டு அன்டிகுவாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லாரா ஆட்டமிழக்காது 400 ஓட்டங்களைப் பெற்றார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அணித் தலைவராக பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் இது தான். இதற்கு அடுத்த இடத்தில் 2018 ஜூலையில் ஹராரேயில் நடந்த சிம்பாப்வேயுக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணித் தலைவர் அரோன் பின்ச் ஆட்டமிழக்காது பெற்ற 172 ஓட்டங்கள் உள்ளன.