சென்னையில் நடந்த 4ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டி இலங்கையின் இளம் வீரர்கள் பற்றிய நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது. இந்தப் போட்டியில் இலங்கையால் 9 தங்கப்பதக்கங்களுடன் 35 பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தைப் பிடிக்க முடிந்தது.
என்றாலும் முப்பாய்ச்சல் வீராங்கனை மதுஷானி ஹேரத் உபாதைக்கு உள்ளாகாது இருந்தால் இன்னும் இரண்டு தங்கப் பதக்கங்களை எதிர்பார்த்திருக்கலாம். அதாவது மதுஷானி நீளம் பாய்தலில் பெற்ற சிறந்த பாய்ச்சல் என்பது 6.30 மீற்றராக இருக்கும் நிலையில் சென்னையில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பிரதிஷா யமுனாவின் சிறந்த தூரம் 5.79 ஆகும். இதுவே முப்பாய்ச்சலில் மதூஷானி 13.13 மீற்றர் தூரம் பாய்ந்தது சிறந்ததாகும். ஆனால் தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் தங்கம் வென்ற இந்தியாவின் ரிஷாகா அவஸ்தி பாய்ந்த தூரம் 12.76 மீற்றர்.
அதேபோன்று 100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை தங்கத்தைத் தவறவிட்டது நூலிழையில்.
தெற்காசிய கனிஷ்ட விளையாட்டுப் போட்டியில் இலங்கை 9 தங்கப்பதக்கங்கள் தவிர 9 வெள்ளி மற்றும் 17 வெண்கலப் பதக்கங்களை வென்றது. இதில் இலங்கை வீரர்கள் 5 புதிய தெற்காசிய சாதனையை படைத்தனர். அது 100 மீற்றர், 100 மீற்றர் அஞ்சலோட்டம், 200 மீற்றர், 800 மீற்றர் மற்றும் உயரம் பாய்தல் போட்டிகளிலாகும்.
குறிப்பாக ஆனந்தா கல்லூரியைச் சேர்ந்த டெரோன் விஜேசிங்க 100 மீற்றரில் தங்கம் வென்று ஆசியாவின் அதிவேக இளம் வீரராக பதிவானார். 100 மீற்றர் அஞ்சலோட்டத்திலும் இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் சாதனையை முறியடித்து தங்கம் வெல்ல முடிந்தது.
கனிஷ்ட விளையாட்டுப் போட்டி என்பது ஓர் ஆரம்பக் கட்டம் தான், இவர்கள் சர்வதேச மட்டத்தில் சாதனைகள் புரிய இவர்களை கவனமாக பராமரிக்க வேண்டியது அவசியம்.
தற்போது ஆண்களுக்கான 100 மீற்றர் 200 மீற்றர் போட்டிகளில் இலங்கை சாதனைக்கு (முறையே 9.96 விநாடி மற்றும் 20.13 விநாடி) சொந்தம் கொண்டாடு யுபுன் அபேகோன் முதல் முறை சர்வதேச போட்டியில் பங்கேற்றது 2013 ஆம் ஆண்டு நடந்த தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியிலாகும். அந்தப் போட்டியில் முப்பாய்ச்சலிலும் பங்கேற்ற அவர் நான்காம் இடத்தைப் பெற்றார். என்றாலும் தனது திறமை எதுவென்று புரிந்துகொண்ட யுபுன் குறுந்தூர ஓட்டத்தில் உச்சத்தைத் தொட்டார். இன்று அவர் தெற்காசியாவின் அதிவேக வீரராக மாறியிருக்கிறார்.
என்றாலும் தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டி என்பது திறமைகளை அடையாளம் காண்பதற்கான ஆரம்பப் படியாகவே இருக்கும். சர்வதேச மட்டத்துடன் ஒப்பிடுகையில் தெற்காசியாவில் இலங்கை மெய்வல்லுனர்கள் எப்போதுமே சாதித்து வருவதோடு, அதிலும் ஓட்டப்போட்டிகளில் இந்தியா மாத்திரமே இலங்கைக்கு சவாலாக இருக்கும்.
எனவே தற்போது பதக்கம் வென்றிருக்கும் வீரர்களை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவதற்கு இதனை சிறந்த தருணமாக எடுத்துக் கொள்வது அவசியமாகும். தங்கம் மற்றும் வெள்ளி வென்றவர்களுக்கு அதிக வாய்ப்பு இருக்கும். அவர்களால் எப்படியேனும் முன்னேற முடியும். ஆனால் இலங்கை சார்பில் வெண்கலம் வென்றிருக்கும் 17 பேர் தொடர்பிலும் பிரத்தியேக அவதானம் செலுத்தினாலேயே அவர்களை தங்கம் வரை அழைத்துச் செல்ல முடியும். இல்லாவிட்டால் அவர்களின் தடகள வாழ்க்கை என்பது தெற்காசியாவுடன் சுருங்கிவிட அதிக வாய்ப்பு இருக்கிறது.