உன் அலைபேசியாய்
நானும் ஆகிடல் வேண்டும்
யாராய் நீ ஆகிட வேண்டும்?
எனக் கேட்கும் கேள்விக்கு
உன்னை தொல்லை செய்தினும்
தொலைக்காது துணையென
நொடியின் சிமிட்டலில்
தொட்டுக்கொள்ளும் வேகத்தில்
தொடும் தூரத்தில்
இரக்குமோ என அஞ்சி
உயிர்பித்துக் கொண்டே
அவ்வப்போது தடவியும்
வருடியும் கொடுத்து
கைக்குள் பாந்தமாய்
அடங்கும் வகையில்
அடங்கலும் அடங்கியதாய்
தன் பிரதி என
தன்மொத்தம் சேமித்த
தனக்கு மட்டும் உரித்தான
எவரும் தொட விரும்பாத
எவரிடமும் பகிர விரும்பாத
உடன் உறங்கி
உடன் எழுந்து
ஒன்றாய் உண்டு பருகி என
எல்லாமுமாய் இருக்கும்
உன் அலைபேசியாய்
நானும் ஆகிடல் வேண்டும்
சில நிமிடங்களாய் ஏனும்
உன் அலைபேசியாய்
நானும் ஆகிடல் வேண்டும்
நச்சரிக்கும் என்று தூக்கி
போட்டதும் இல்லை
பேசாது நீ அணைத்ததும் இல்லை
விழி மூடச் செய்யும் மோகனமாய்
உறக்கம் களைய முன்னே
அரைக்கண் தேடும் அழகியாய்
யாவரும் இருக்க
துணை என நீ அடைக்கலம் ஆகும்
தனிமை என நட்புக்கு
கரம் கோர்க்கும்
எப்போதும்
நீ விட்டுப்பிரிய மறுக்கும் ஒன்றாய்
அதுமட்டுமே அதுவும் இருக்க
எனக்கும் வேண்டியதெல்லாம்
உன் அலைபேசியாய்
நானும் ஆகிடல் மட்டுமேதான்
இயந்திரங்கள் எப்போதும்
உயிர்ப்பதில்லை
உயிர் கொண்டவளை ஏனோ
இயந்திரமாய் ஆக்கிவிட்டாய்
கேட்பதெல்லாம் ஒன்றுமில்லை
உன் நேசத்தினை தவிர
எனக்காய் எனக்கு மட்டும்
என்னது என்னுடையதாய்
மட்டும் வேண்டும்
நீ வேண்டும்
அவ்வளவுதான்
–