நான் பிரியம் கொள்கையில்
உனக்குப் பிரியம் இல்லை
நீ பிரியம் கொள்கையில்
நேரத்துக்குப் பிரியம் இல்லை
நேரம் எடுத்து மையல் கொள்ள
சூழல் விடுவதாக இல்லை
சூழல் விட்டும் வெளியேறித்
தொலைகையில் வெறுமையின்
தொல்லை
வெறுமையை நிரப்பி
விரைகையில் பொறுமை
இற்றுப்போய் விட்டது
பொறுமை கொண்டு
பொத்தல்கள் சரிசெய்து
காத்திருக்கையில்
மனங்கள் பொருந்துவதாகவில்லை
அப்படியென்றால்
எப்போதுதான் நேசிப்பது?
ஆயுள் கரைந்து தீர்ந்து
போன பிறகா?
ஆன்மா அழிந்து
அரூபமான பின்னரா?
நேசிப்பதற்கென்று
நேரம் ஒதுக்கும்
ஒரே உயிரினம்
மனிதன் மட்டும்தான்
அதையும் கொன்று
கூறு போட்டு
நூறாய்ப் பகுப்பவனும் அவன்தான்
காலில் மிதிபட்டு
காலச்சுழிக்குள் சிக்கிக்
காணாமலே போய்விட்டது
நேசத்துமி!!
நேசத்துமி
32