மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடி, உப்போடை பேச்சி அம்மன் ஆலயம் நேற்றுமுன்தினம் (20) இரவு முற்றாக தீக்கிரையானது. மேற்படி ஆலயத்தில் பூஜைக்காக ஏற்றப்பட்டிருந்த விளக்கு, ஆலயத்தின் ஓலைக் குடிலில் பட்டு தீப்பிடித்து எரிந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
திடீரென ஓலைக் குடிலில் ஏற்பட்ட தீ, பெரும் சுவாலையாக எரிய தொடங்கியதை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு படையினர் ஒன்றிணைந்து தீயை சில மணி நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்த போதும் ஆலயத்தின் மூலஸ்தானம் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது
பேச்சி அம்மனின் சிலை ஆரம்ப காலந்தொட்டு ஓலைக் குடிலில் வைக்கப்பட்டு மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக பிரதேச மக்களால் போற்றப்படுகின்றது.
இவ்வாறு தீப்பிடித்ததை அவதானித்த அப்பகுதி மக்கள் படையெடுத்து வந்து ஆலயத்தை சூழ்ந்து கொண்டனர். இதனை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், ஆலயத்தின் மூலஸ்தானம் தீப்பிடித்ததை அவதானித்த பக்தர்கள் கத்தி அழுது புலம்பியதுடன், பெரும் கவலையடைந்தனர்.