இந்தியத் தொல்லியல் துறையின் இயக்குநராக 1902 இல் பதவியேற்ற ஜோன் மார்ஷல், ஹரப்பாவில் பரந்த அளவில் அகழாய்வு நடத்த உத்தரவிட்டார். அங்கிருந்து 680 கிமீ தொலைவில் உள்ள மொகஞ்சதாரோவிலும் அகழாய்வு நடந்தது.
சிந்துவெளி நாகரிகத்தின் ராவி ஆற்றங்கரையில் கண்டறியப்பட்ட முதல் நகரம் ஹரப்பா. அதனால், இந்த நாகரிகத்தையே ஹரப்பா நாகரிகம் என வரலாற்று ஆய்வாளர்கள் அழைக்கிறார்கள். அதேநேரம், பரவலான பகுதியைக் கொண்டிருப்பதாலும், இந்த நாகரிகத்தின் பெருநதியாகச் சிந்துநதி இருந்ததாலும், ‘சிந்துவெளி நாகரிகம்’ எனப்பட்டது.
வெண்கலக் காலத்தைச் சேர்ந்த இந்தப் பகுதியில் பெரிய நெற்களஞ்சியம், மக்கள் கூடும் அரங்கம் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. இந்திய வரலாற்றின் திசையையே திருப்பிய பிரதேசம் இது.
மொகஞ்சதாரோ என்பது சிந்துவெளி நாகரிகத்தில் கண்டறியப்பட்ட மிகப் பெரிய ஊர். ‘இறந்தவர்களின் புதைமேடு’ என்பதே இந்தப் பெயருக்கு அர்த்தம். பெரிய கிணறுகள், தாய் தெய்வச் சிற்பங்கள் இந்த ஊரில் கண்டறியப்பட்டுள்ளன. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்த நகரத்தில் இந்தியக் கிராமங்களில் இருப்பதுபோல் மேடான பகுதிக் குடியிருப்பு, தாழ்வான பகுதிக் குடியிருப்புகள் இருந்துள்ளன. இந்திய விடுதலைக்குப்பின் மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டன.
சிந்துவெளிப் பண்பாடு பற்றிய பொதுவெளி உரையாடல்கள் கடந்த சில ஆண்டுகளில் பெரிதும் அதிகரித்திருக்கின்றன. 1924 செப்டம்பர் 20ஆம் திகதி (நேற்றுமுன்தினம்) சிந்துவெளிப் பண்பாடு அறிவிக்கப்பட்டுச் சரியாக நூறு ஆண்டுகள் ஆகியுள்ளன.
இந்திய வரலாற்றை வேதங்கள், இதிகாசங்கள், புராணங்களோடு மட்டும் தொடர்புபடுத்திக் காலவரையறை செய்யப்பட்டு வந்த காலகட்டத்தில், இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு அதற்கும் முந்தியது என்பது தெரியவந்தது. அது நகர்மய வரலாறு, அறிவியல் சார்ந்த, வணிகம் சார்ந்த, மக்கள் மைய வரலாறு என்று அனைவருக்கும் அறிவித்த பெருமை இந்தியத் தொல்லியல் துறையின் தலைவராகப் பணியாற்றிய ஜோன் மார்ஷலையே சாரும். “சிந்து, பஞ்சாப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் முதிர்ந்த பண்பாட்டோடு, அருமையாகக் கட்டியெழுப்பப்பட்ட நகரங்களில் உயர்தரமான கலை, கைவினைத் திறன்களோடும், வளமான எழுத்தறிவோடும் வாழ்ந்துள்ளனர்” என்ற ஜோன் மார்ஷலின் கருத்து இந்தியத் துணைக்கண்ட வரலாற்று எழுத்தியலின் போக்கைப் புரட்டிப்போட்டது. இந்திய வரலாற்றுக்குப் புதிய முகவரி அளித்த ஜோன் மார்ஷலுக்கு முழு உருவச்சிலை திறப்பதென்று தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
பரந்து விரிந்த ஹரப்பா பண்பாட்டு நிலப்பகுதியில் ஒரே வகையான மக்கள் வாழவில்லை. அதில் உள்ள பொறிப்புகளைப் பார்த்தாலே தெரியும். அழகான பின்னலாடையை உடுத்திய நகர மனிதர்கள், அணிகலன்களை அணிந்தவர்கள், எருமையுடன் சண்டையிடுபவர்கள், எருமை மாட்டின் கொம்பை வைத்து நடனமாடுபவர்கள், பலி கொடுப்பவர்கள், தாய்த் தெய்வங்கள், கடலில் பயணிப்பவர்கள் என்று இந்தப் பொறிப்புகள், முத்திரைகள் பன்முகத்தன்மையைக் கொண்டிருப்பதைக் காணலாம்.
அதேநேரத்தில் செங்கற்கள், எடைக்கற்கள், உலோகக் கலவை, ஒரே மாதிரியான பொறிப்புகள் என்கின்ற தரம் சார்ந்த ஒழுங்கும் காணப்படுகிறது. வெளிநாட்டு வணிகமும் செழித்திருந்தது. அத்தகைய சூழலில் பொதுவான தொடர்புமொழி என்பது தவிர்க்க முடியாத வளர்ச்சிப் படிநிலை. ஆனாலும் அம்மொழியை இதுவரை வாசிக்க இயலவில்லை. அதனால், சிந்துவெளி மொழிப் புதிர் தொடர்கிறது.
சிந்துவெளி மக்கள் எங்கே போனார்கள்? சிந்துவெளியின் வாழ்க்கைமுறையில், பொருளாதாரத்தில் ஏதோ ஒரு பெரிய நலிவு ஏற்பட்டுள்ளது. ஒரு பகுதியில் வாழ்க்கை சிரமம் என்றால், வேறோர் இடத்துக்குப் புலம்பெயர்வது மனித இயல்பு. அதுதான் சிந்துவெளியிலும் நடந்திருக்கக்கூடும். நீண்ட வரட்சி, பஞ்சம் – பட்டினி, பெருவெள்ளம், நிலநடுக்கம், வணிகச்சரிவு, புதிய மொழி/ பண்பாட்டினரின் வருகை என்று காரணம் எதுவாகவும் இருக்கலாம். அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டுக்காரணிகள் இருக்கலாம். காரணம், எதுவாகினும் அவர்களில் ஏராளமானோர் புலம்பெயர்ந்தார்கள் என்பதில் ஐயமில்லை. குறிப்பாகத் தெற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் நகர்ந்துள்ளார்கள்.
சிந்துவெளி மக்கள் தெற்கு நோக்கி நகர்ந்தனர் என்பதற்குத் தொடர்ச்சியான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. குஜராத், லோத்தல், தோலாவிரா, ராஜஸ்தான் முதலிய இடங்களில் முதிர்ந்த ஹரப்பா பண்பாட்டுக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. பிந்திய கால ஹரப்பா பண்பாட்டின் தடயங்கள் மகாராஷ்டிரத்தில் உள்ள தைமாபாத்தில் உள்ளன.
சிந்துவெளி மக்களின் புலப்பெயர்வை ஆராய்வதில் மட்பாண்டங்கள் உதவுகின்றன. சிந்துவெளியில் அதிகமாக இருப்பது செந்நிறப் பாண்டம். தெளிவாகக் கறுப்பு -சிவப்புநிறப் பாண்டம் குஜராத் சூழலில் காணப்படுகிறது. குஜராத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட நிலையில், சிந்துவெளி மக்கள் கிழக்கு நோக்கி தபதி நதியை ஒட்டியே நகர்ந்திருக்க வேண்டும் என்று அனுமானிக்கவும் போதிய தடயங்கள் உள்ளன.
தொல்லியல், மொழியியலைவிட மரபணு ஆய்வுகள் துல்லியமானவை என்கிற கருத்து பரவலாக நிலவுகிறது. இந்தியத் துணைக்கண்ட மக்களின் ஆகத் தொன்மையான மரபணுத்தொகுதி தொல் தென்னிந்திய மூதாதையர் (AASI) என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.
இதைப் போலவே ஹரப்பா பண்பாட்டு மக்களுடன் ஸ்டெப்பி (புல்வெளி) மேய்ச்சல் பண்பாட்டினர் கலந்து, தொல் வட இந்திய மூதாதையர்கள் தோன்றினார்கள். இன்றைய தெற்காசிய மக்கள்தொகை இந்த இரண்டு மக்கள்தொகையும் கலந்து உருவானதே. இன்னொரு வகையில் சொல்வதெனில், இன்றைய தெற்காசிய மக்களில் பெரும்பாலானோர் ஏதோ ஒருவகையில் ஹரப்பா பண்பாட்டு மக்கள்தொகையோடு தொடர்புடையவர்களே.
தமிழ்நாட்டின் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, பொற்பனைக்கோட்டை, வெம்பக்கோட்டை ஆகிய இடங்களில் நடைபெறும் அகழாய்வுகள் புதிய வெளிச்சம் தருகின்றன. சிந்துவெளித் தடயங்கள், சங்க இலக்கிய மீள்நினைவுப் பதிவுகள், தமிழ்நாடு அகழாய்வுத் தடயங்கள் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் உள்ளன.
சிந்துவெளி அகழாய்வில் கிடைத்த முதல் தொல்பொருள் செங்கற்கள்தான். சுடப்பட்ட, நவீன வடிவிலான இந்தச் செங்கற்கள் அனைத்தும் ஒரே அளவில் கிடைத்தன. சுமார் அரையடி நீளம், அதில் பாதி அகலம், அதிலும் பாதித் தடிமனை இவை கொண்டிருந்தன. சிந்துவெளி நாகரிகம் பரவியிருந்த பகுதி முழுவதும் இதுபோன்ற செங்கற்களே கிடைத்தன. எனவே, அவை ஒரு குழுவால் தரப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
மொகஞ்சதாரோவில் மிகப் பெரிய குளம் ஒன்று இருந்திருக்கிறது. உடை மாற்றும் இடங்கள், படிக்கட்டுகள், கரைப்பகுதிகள் ஆகியவை இதில் உள்ளன. சிந்துவெளி நாகரிகத்திலும், பண்பாட்டிலும் நீர் முதன்மை இடம்பிடித்ததற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க சான்று. திராவிடச் சடங்குகள் நீரை மையமாகக் கொண்டு நடப்பதை வைத்துப் பார்க்கும்போது, இந்தப் பெருங்குளம் உருவாக்கப்பட்டதன் தொடர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும்.
சிந்து சமவெளி, திராவிடப் பண்பாட்டோடு இணைக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது. இதற்கான விதையை விதைத்தவர் வங்காளத்தைச் சேர்ந்த மொழியியல் அறிஞரான சுனிதி குமார் சாட்டர்ஜி.
சிந்துவெளிப் பண்பாடு கண்டறியப்பட்ட சில ஆண்டுகளிலேயே, இந்தப் பண்பாட்டைக் குறிப்பிட ‘ஆரியர் அல்லாத’, ‘ஆரியர் காலத்திற்கு முற்பட்ட’ என்ற சொற்கள் பயன்பாட்டிற்கு வர ஆரம்பித்தன.
சிந்துவெளி மக்கள் பேசியது திராவிட மொழியே என்று வரலாற்று ஆய்வாளர்கள் பலர் கூறியுள்ளனர்.
இராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களில் காட்டப்படும் வாழ்க்கை சிந்து சமவெளியில் இருந்த வாழ்க்கையல்ல. ஆனால், சங்க இலக்கியங்களில் காட்டப்படும் வாழ்க்கை சிந்து சமவெளி வாழ்க்கைக்கு நெருக்கமாக இருக்கிறது. சிந்து சமவெளி ஒரு புதிர் என்றால், தமிழ்நாடு அதன் சாவி.
தமது கலாசாரத்திற்கு பங்களிப்பு செய்த ஜோன் மார்ஷலை நினைவுகூர்வதன் மூலம் இந்திய துணைக்கண்ட வரலாற்றின் மீது தனக்குள்ள உரிமையை தமிழ்நாடு உறுதி செய்கிறது.
சிந்து சமவெளி கண்டுபிடிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் கடந்துவிட்டாலும், இன்னும் சில தீராத புதிர்கள் இருக்கின்றன. அதாவது, சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் என்ன மொழி பேசினார்கள் என்பதில் விவாதம் நீடிக்கிறது.
அதேபோல, சிந்து சமவெளியில் கிடைத்த குறியீடுகள், ஒரு மொழியின் எழுத்துகளா அல்லது சித்திர எழுத்துகளா அல்லது வெறும் குறியீடுகளா என்ற கேள்விகள் இன்னமும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அங்கு பேசப்பட்ட மொழி தொல் திராவிட மொழி என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.