தேர்தல் பரபரப்புக்கு மத்தியில், கடந்த சில நாட்களாக அதிகரித்திருந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்த செய்திகள் ஊடகங்களில் அதிகம் இடம்பெற்றிருந்தன.
கடந்த ஓரிரு நாட்களில் மாத்திரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐந்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தெஹிவளை பிரதேசத்தில் மாத்திரம் 2 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
தெஹிவளை பொலிஸ் பிரிவில் கடவத்தை வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். தெஹிவளை, கல்கிசை மாநகரசபையின் ஊழியர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதற்கு முதல் நாள் தெஹிவளை சரணங்கர வீதியில் சாப்பாட்டுக் கடையொன்றின் உரிமையாளரும் ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட படவோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கும் இந்த இரு படுகொலைகளுக்கும் தொடர்பு இருப்பதாகப் பொலிஸ் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதாள உலகக் குழுவினருக்கு இடையிலான முரண்பாடே இதற்குக் காரணம் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தவிரவும், தங்காலை பகுதியில் 32 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் துப்பாக்கிக் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டிருந்தது. அதேநேரம், மாத்தறை பகுதியில் 38 வயதுடைய மீன்கடை உரிமையாளர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அதேபோல, நமுவாவ பிரதேசத்தில் 30 வயது ஆண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்தப் படுகொலைகள் யாவும் பெரும்பாலும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களாகவே பதிவாகியுள்ளன. பாதாள உலகக் குழுக்களுடன் காணப்படும் தொடர்புகள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களில 50 இற்கும் அதிகமானவர்கள் இதுபோன்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸ் புள்ளிவிபரங்களுக்கு அமைய 2023ஆம் ஆண்டில் 120 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதுடன், இவற்றில் பெரும்பாலானவற்றுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களே காரணம் என்றும் தெரியவந்துள்ளது. சட்டவிரோத ஆயுதங்களின் பயன்பாடு தென்பகுதியில் அதிகரித்திருப்பதன் வெளிப்பாடாகவே இதனைப் பார்க்க முடிகின்றது.
பாதாள உலகக் குழுவினரின் செயற்பாடுகள் கடந்த காலங்களில் குறிப்பாக இந்த வருட ஆரம்பம் முதல் அதிகரித்திருந்த நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தது. குறிப்பாக போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ‘யுக்திய’ என்ற செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
2023ஆம் ஆண்டு டிசம்பர் ஆரம்பிக்கப்பட்ட யுக்திய செயற்றிட்டத்தின் கீழ் போதைப்பொருடன் தொடர்புபட்ட 130,000 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருப்பதுடன், அவர்களிடமிருந்து பல கிலோ போதைப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன. போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் பதாள உலகக் குழுவினரின் வலையமைப்பைத் தேடியறிந்து அதனை இல்லாமல் ஒழிக்கும் நோக்கிலேயே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் இந்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இத்திட்டம் செயற்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் குற்றச்செயல்கள் ஒப்பீட்டளவில் குறைந்திருந்தபோதும், இவை மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளனவா என்ற சந்தேகம் இப்போது தோன்றியுள்ளது.
போதைப்பொருள் வியாபாரத்தில் இலங்கையை முக்கிய இடமாகப் பயன்படுத்துவதற்கு பாதாள உலகக் குழுக்கள் எடுக்கும் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும். வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்குக் கடத்தப்படும் போதைப்பொருட்கள் இங்கிருந்து வெவ்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுவதாகப் பல குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன. அது மாத்திரமன்றி நாட்டுக்குள் கொண்டுவரப்படும் போதைப்பொருட்கள் காரணமாக எதிர்கால சந்ததியினர் கடுமையாகப் பாதிக்கப்படுவதற்கான ஆபத்தும் காணப்படுகின்றது.
எனவே, போதைப்பொருள் மற்றும் அது தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபடும் பாதாள உலகக் குழுவினர் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பமாகும். இது தொடர்பான தேவையை உணர்ந்தே போதைப்பொருள் ஒழிப்புத் தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்காகப் பாராளுமன்ற விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் செயற்பட்ட இந்தக் குழு தனது அறிக்கையை அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. போதைப்பொருள் கடத்தல்களைக் கட்டுப்படுத்துவது, அதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் குழுவின் அறிக்கையில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்புகளை அழைத்து நடத்திய தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் பின்னரே இந்தக் குழுவின் அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
விசேடமாகப் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவது கட்டாய தேவையாக உள்ளது.
அதேநேரம், போதைப்பொருள் ஒழிப்புத் தொடர்பான நடவடிக்கையில் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டிய அவசியமும் காணப்படுகின்றது. கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்தி அதிகபட்ச தண்டனைகளை வழங்கும்போது இவற்றை கணிசமானளவு குறைக்க முடியும்.
யுக்திய போன்ற நடவடிக்கைகளின் மூலம் பெருமளவிலான போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நபர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள். எனினும், அவர்களுக்கு மேல் உள்ள புள்ளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியமும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
நாட்டில் அதிகரித்துள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கும், போதைப்பொருள் வியாபாரத்திற்கும் இடையில் தொடர்புகள் இருப்பதால் இவற்றைக் கட்டுப்படுத்த உடனடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
பி.மகேஸ்வரன்