அண்மையில் நிதியமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கை மற்றும் சிங்கப்பூர் சந்தை வெளியிட்டுள்ள அறிக்கை, இலங்கை சர்வதேச கடன் பத்திரம் வைத்திருப்பவர்களுடன் கொள்கையளவில் உடன்பாட்டை எட்டியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. இதில் சர்வதேச நாணய நிதியத்துடன் அமுல்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ், 17 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான கடன் நிவாரணம் வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2033ஆம் ஆண்டின் இறுதியில், நாட்டின் வெளிநாட்டு வணிகக் கடனின் சுமார் 17.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை மறுசீரமைப்பது குறித்த கொள்கை ரீதியான இணக்கப்பாடு எட்டப்பட்டது.
சர்வதேச முதலீட்டாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிணைப்பத்திர உரிமையாளர்களின் தற்காலிக குழு (Ad Hoc Group of Bondholders (AHGB) மற்றும் உள்ளூர் நிதி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையின் உள்ளூர் கூட்டமைப்பு (Local Consortium of Sri Lanka – LCSL) ஆகியவற்றுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் ஊடாக, இந்த சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்களுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்நாட்டு இறையாண்மை பிணைப்பத்திரங்களில் 50 வீதத்திற்கும் அதிகமானவற்றை இந்த இரண்டு குழுக்களும் கொண்டுள்ளன.
இந்த இணக்கப்பாடுகளின் கீழ், 11 சதவீத தள்ளுபடி விகிதத்தின் அடிப்படையில் 40.3 சதவீத தற்போதைய மதிப்புக்கு (Net Present Value) நிவாரணங்களை வழங்க பிணைப்பத்திரதாரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இந்த இணக்கப்பாட்டின் மூலம் ஜூலை 2024ல் நிறுவப்பட்ட கூட்டு நடவடிக்கை கட்டமைப்பை விட இந்த ஒப்பந்தத்தினால் இலங்கைக்கு அதிக கடன் நிவாரணம் கிடைப்பதோடு, புதிய விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ளதைப் போன்று வட்டி செலுத்தல்களிலும் குறைப்பு இடம்பெறவுள்ளது. இலங்கை அண்ணளவாக 3.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இறையாண்மைக் கடனை மறுசீரமைப்பது தொடர்பான முக்கிய நிதி விதிமுறைகள் தொடர்பில் சீனா அபிவிருத்தி வங்கியுடன் (CDB) இலங்கை கொள்கையளவில் இணக்கப்பாட்டை எட்டியுள்ளது. சீனாவின் எக்சிம் வங்கி, இலங்கையின் உத்தியோகபூர்வ கடனாளிகள் குழு (OCC), சீனா அபிவிருத்தி வங்கி (CDB) மற்றும் கடன் பத்திரதாரர்களுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தங்களின் விளைவாக, சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்ட காலத்தினுள் இலங்கைக்கு 17 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் நிவாரணம் கிடைத்துள்ளது.
இதில் சீனாவின் எக்சிம் வங்கியிடமிருந்து அண்ணளவாக 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களும், உத்தியோகபூர்வ கடன் வழங்குபவர்கள் குழுவிடமிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களும், சீனா அபிவிருத்தி வங்கியிடமிருந்து (CDB) 2.5 பில்லியன் டொலர்களும் பிணைப்பத்திரதாரர்களிடமிருந்து 9.5 பில்லியன் டொலர்களும் அடங்கும்.
இங்கு விசேடமாக பெரும்பான்மை பிணைப்பத்திர உரிமையாளர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தி, அதேபோன்று இலங்கையின் நிதி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட அமைப்பு என்ற இந்த இரண்டு குழுக்களும் சீனாவின் எக்சிம் வங்கியுடன் இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடு தொடர்பில் கொள்கையளவிலான இணக்கப்பாட்டிற்கு வந்திருப்பது தெளிவாகின்றது.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர், பத்திரப்பதிவுதாரர்களிடமிருந்து ஒரு இறுதி முன்மொழிவு வந்ததுள்ளதோடு, இலங்கை அந்த முன்மொழிவை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பித்துள்ளது.
இந்த இணக்கப்பாடுகளின் கீழ், சுமார் 17 பில்லியன் டொலர் அளவிலான சர்வதேச கடன் பத்திரங்கள் மறுசீரமைக்கப்படும். இந்த மறுசீரமைப்பினுள் தொழில்நுட்ப விடயங்கள் பாரியளவில் உள்ளன. இது தொடர்பிலான அடிப்படை அறிவு இல்லாத சாமானிய மக்களால் இதனைப் புரிந்துகொள்வது கடினமான விடயமாகும். என்றாலும் நாம் இந்த பிணைப்பத்திர மறுசீரமைப்பினுள் இலங்கை பெற்றுக் கொண்ட முன்னேற்றம் தொடர்பில் கவனத்தைச் செலுத்தினால் பல விடயங்களின் காரணமாக இவ்வாறு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளமை இலங்கை அடைந்த வெற்றியாகக் குறிப்பிடப்பட முடியும்.
நாம் அறிந்த முதல் விடயம் என்னவென்றால், நாம் ஒரு நாடாக முன்னோக்கிச் செல்லும்போது, கடன் பத்திரங்களை முடிவுக்குக் கொண்டுவருவது மிகவும் அவசியமான ஒன்று என்பதில் நாம் அக்கறை கொள்ள வேண்டும்.
உலக அளவில் மிகப்பெரிய நிச்சயமற்ற தன்மை நிலவுவதால், நாம் அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு யுத்தம் இடம்பெற்று வருகிறது. அதேபோன்று மறுபுறம், ரஷ்ய உக்ரைன் யுத்தம் இடம்பெற்று வருகின்றது. அத்துடன் உலக அளவிலான அரசியல் மாற்றங்கள் குறிப்பாக தெற்காசிய பிராந்தியத்தில் பெரும் சமூக மற்றும் அரசியல் எழுச்சிகள் இடம்பெற்று வருகின்றன. வங்கதேசம் மற்றும் மாலைதீவுகள் தொடர்பாகவும், மறுபுறம் பாகிஸ்தான் தொடர்பாகவும் நிச்சயமற்ற நிலை இருப்பதாகத் தெரிகிறது.
மொத்தத்தில் எடுத்துக் கொண்டால், தற்போதைய வெளிநாட்டுச் செலாவணி இலங்கைக்கு வரும் சுற்றுலாத் துறை வீழ்ச்சியடைந்தால், வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து கிடைக்கும் பணம் தொடர்பில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டால், ஏற்றுமதித் துறை வீழ்ச்சியடைந்தால், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அந்த நிலை, இலங்கையின் சுற்றுலாத் துறையில், ஏற்றுமதித் துறையில், வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம் அனுப்புதலில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தலாம், இவ்வாறான நிலையில் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளாவிட்டால் எம்மால் அதன் காரணமாக சர்வதேச கடனைப் பெற முடியாது.
அதேபோன்று, மற்ற நாடுகளுடன் பரிமாற்றக் கொடுக்கல் வாங்கல்களிலும் ஈடுபட முடியாது. வெளிநாட்டுக் கடன் சந்தையில் கடன்களைப் பெறவும் முடியாது. இதனுள் எமது நாடு குறுகிய கால கடன் நெருக்கடிக்குள் சிக்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும்.
இதற்கு உலகில் பல உதாரணங்கள் உள்ளன. மீளக் கட்டியெழுப்ப மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகளால் பல நாடுகள் மீண்டும் ஒருமுறை சரிவடைந்த சந்தர்ப்பங்கள் உள்ளன. குறிப்பாக குறுகிய காலத்திற்கு நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் ஏற்படும் அதிர்ச்சிகளால் இது ஏற்படுகிறது. 2022ம் ஆண்டு அரசியல் குழப்பங்கள் ஏற்பட்ட போது இலங்கைக்குள் கூட ஒரு நெருக்கடி ஏற்பட்டது. அதேபோன்று, நாட்டில் பல்வேறு அதிர்ச்சிகள் ஏற்படும். குறிப்பாக வானிலை மற்றும் காலநிலை அதிர்ச்சிகள் ஏற்படலாம்.
எவ்வாறாயினும், எவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டாலும், ஒரு நாடு என்ற வகையில் கடன் மறுசீரமைப்பு முடிவடையும் போது, மீண்டும் சில நிதி வசதிகளைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும். குறிப்பாக குறுகிய காலத்திற்கு ஏற்படும் நெருக்கடிகளில் நாம் கடனைச் செலுத்த தவறும் சந்தர்ப்பங்களில் சர்வதேச நிதிச் சந்தையினால் கூட கடன் வசதியை வழங்க முடியாது.
நாம் திருப்பிச் செலுத்துவதற்கான இணக்கப்பாட்டிற்கு வந்து அது தொடர்பில் செயற்பட்டால், நாம் மீண்டும் நெருக்கடியில் சிக்கினாலும் எம்மால் மீண்டும் கடன் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
உலக வரலாற்றில் குறிப்பாக கடன் நெருக்கடியில் சிக்கிய நாடுகளை பார்க்கும் போது பல்வேறு காரணங்களால் அந்த கடன் நெருக்கடிகள் மீண்டும் நெருக்கடிக்குள் சென்றுள்ளது. அதேபோன்று, நமது நாட்டைப் பொறுத்தவரை, கடன் மறுசீரமைப்பு மூலம், இதுவரை நிறுத்தப்பட்டுள்ள சில அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்க முடிந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள், நிறுத்தப்பட்ட வர்த்தகங்களினால் முதலீடுகள் இடம்பெறவில்லை. இது ஒரு குறுகிய கால நெருக்கடியாகத் தெரியாவிட்டாலும், நீண்ட காலத்திற்குப் பொருளாதாரத்தை மிக விரைவாக சரிவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். தடைப்பட்ட திட்டங்களால் இலங்கையில் மூலதனக் குவிப்பும் இடம்பெறவில்லை. அரச துறையின் ஊக்குவிப்பில்லாமல் தனியார் துறை முதலீட்டை ஊக்குவிப்பது இல்லை. இந்த இடத்தில், நாடு அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்கவும், புதிய அபிவிருத்தித் திட்டங்களைத் திட்டமிடவும் முடியும்.
நாட்டில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைக்கப் போவதாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், கடனைத் திருப்பிச் செலுத்தாத நாட்டிற்கு முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள் என்பது நாம் அறிந்த விடயமாகும். குறிப்பாக வங்கிகளின் மூலம் கடனைப் பெற்று இந்த முதலீட்டாளர்களும் கூட முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அங்கு சர்வதேச வங்கிகள் கடன் வழங்கும் போது, இலங்கை போன்ற நாடுகளுக்கு கடன் வழங்கும்போது அது அபாயகரமான சூழ்நிலையாகவே கருதப்படுகிறது. அவர்கள் சாதாரண வட்டி 1 சதவிகிதத்தில் வழங்கக் கூடியதாக இருந்தாலும் எம்மைப் போன்ற நாட்டில், வட்டி விகிதம் 5 சதவிகிதம் வரை அதிகமாக உள்ளது. பொருளாதாரத்தில் உள்ள நிச்சயமற்ற தன்மையும், கடனைத் திருப்பிச் செலுத்தாத சர்வதேச சூழ்நிலையும் இங்கு தெளிவாகிறது. எனவே, வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வருவதை குறுகிய காலத்தில் செய்ய முடியாவிட்டாலும், அதற்கு தேவையான சூழலை உருவாக்குவது எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் முக்கியமான விடயமாகும்.
எமது நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை குறுகிய கால எல்லைக்குள் நெருங்க முடிந்திருப்பமை மிகவும் முக்கியமானதாகும். கானா மற்றும் சாம்பியா போன்ற நாடுகளின் மறுசீரமைப்பு செயல்முறைக்கு நான்கு வருடங்கள் எடுத்தன.
அந்த நாடு 2020ம் ஆண்டில் கடன் நெருக்கடிக்குள் சென்றதோடு, 2024ம் ஆண்டு வரை இந்த நிலையை சமப்படுத்தி மறுசீரமைப்புச் செயற்பாட்டை முடிப்பதற்கு எடுத்தது. அதனடிப்படையில் இலங்கை முதல் முறையாக கடன் நெருக்கடிக்குள் சென்றதோடு, மிகவும் குறுகிய காலத்தினுள் ஒரு நிலையான தன்மையைக் கொண் வருவதற்கு இலங்கையால் முடிந்திருக்கின்றது. தொடர்ந்தும் முறையாகப் பயணிப்பது மிகவும் முக்கியமாகும்.
சுபத்ரா தேசப்பிரிய தமிழில் - எம். எஸ். முஸப்பிர்