Home » 300 கிலோமீற்றர்களை தன்னந்தனியாக கடந்த சயோஜிதாவின் கதை!

300 கிலோமீற்றர்களை தன்னந்தனியாக கடந்த சயோஜிதாவின் கதை!

by Damith Pushpika
September 22, 2024 6:54 am 0 comment

நடக்கும் கால்கள் ஆயிரங்கள் பெறுமதியானது என முன்னோர்கள் கூறியிருப்பது பல காரணங்களினாலாகும். நடைப்பயிற்சி உடலுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல நன்மைகளைத் தருகிறது. 11 நாட்களில் 300 கிலோமீட்டர் தூரம் நடந்த இளம் பெண்ணைப் பற்றியே நாம் இங்கு கூறப்போகிறோம். அவளது பெயர் சயோஜிதா விஜேகுமாராகும். அவளுடைய இந்த அற்புதமான பயணத்தின் கதை சிலருக்கு கொஞ்சம் விசித்திரமாக இருக்கலாம்.

ஆசியாவின் மிக அழகான சாலைகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நாட்டின் மத்திய மலைநாட்டின் ஊடாக 300 கிலோமீட்டர் நீளமுள்ள அழகிய சாலையான Pekoe Trail வழியாகவே அவர் இவ்வாறு தனியாகப் பயணித்துள்ளார். ஹந்தானையில் இருந்து ஆரம்பிக்கும் இந்தப் பயணம் நுவரெலியா பேத்ரோ தோட்டத்தில் நிறைவடைகிறது. இலக்கை அடையும் வரை இந்த பயணத்தில் 22 சிறப்பு இடங்கள் கடக்கப்பட்டுள்ளன. மேலும் பல மலைப்பாங்கான நிலப்பரப்புகள் இங்கு குறுக்கிட்டன. பல மலைகள் ஏற வேண்டும். மலைகளின் குளிர்ச்சியான மற்றும் சில சமயங்களில் மேகமூட்டமான மற்றும் பனிமூட்டமான சூழல் மற்றும் அழகிய மலைக் காட்சிகளுடன், புல்வெளிகள் முதல் வெப்பமண்டல காடுகள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளும் இந்தப் பயணத்தில் காணப்படுகின்றன. சயோஜிதா விஜேகுமார் என்ற 23 வயது அழகான பெண், தனியாக பயணித்தமைதான் இந்தப் பயணத்தில் சிறப்பு.

“இது ஒரு ஆபத்தான பயணம் என்று ஒருவர் நினைக்கலாம். ஆனால் நான் இந்தப் பயணத்தை மேற்கொண்டேன்” என சயோஜிதா புன்னகையுடன் கூறினார். சயோஜிதாவின் இந்தப் பயணம் சோலோ ட்ரவல் என்ற வகையைச் சேர்ந்ததாகும். சோலோ ட்ரவல் எனும் தனிமையான பயணத்தில் கிடைக்கும் நன்மைகள் ஏராளமானதாகும். இவ்வாறான பயணங்கள் தனியாக புதிய இடங்கள் மற்றும் மனிதர்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு சுதந்திரத்தை வழங்குவதோடு, தான் விரும்பிய இடத்திற்குச் செல்லவும், விரும்பும்போது சாப்பிடவும், இயற்கையை விரும்பியவாறு ரசிக்கவும் சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. இவ்வகையான தனிப் பயணங்கள் இலங்கையர்களுக்கு மிகவும் பரிச்சயமற்றவை என்றாலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் இவ்வகையான பயணங்கள் மிகவும் பிரபலமானவையாகும். எவ்வாறாயினும், சயோஜிதாவின் பயணத்தின் மூலம், தனியாகப் பயணம் செய்யும் எண்ணம் எவ்வளவு அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

கண்டி அலவத்துகொட பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட சயோஜிதா விஜேகுமார் கண்டி உயர்தர பெண்கள் பாடசாலையின் பழைய மாணவியாவார். 2019ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த பின்னர் தனியார் பல்கலைக்கழகமொன்றில் சர்வதேச உறவுகளில் பட்டம் பெற்று அதன் பின்னர் பல தொழில்களில் ஈடுபட்டார்.

“பட்டப்படிப்பை மேற்கொள்ளும் போதே நான்கு வருடங்கள் தொடர்ந்து தொழிலில் ஈடுபட்டதன் பின்னர் களைப்பை உணர்ந்தேன். இதற்கிடையில் பட்டத்தையும் பெற்றுக் கொண்டேன். வாழ்க்கையில் ஒரு மாற்றம் தேவை என்பதை உணர்ந்தேன். அதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்தபோது தனிமைப் பயணம் எனக்கு நினைவுக்கு வந்தது. சின்ன வயதிலிருந்தே எனக்கு சாகச செயல்கள் ரொம்பப் பிடிக்கும். பாடசாலை பருவத்திலிருந்தே மலை ஏறுவது, சைக்கிள் ஓட்டுவது, நடப்பது போன்றவற்றைச் செய்து வருகிறேன். எனக்கு மிகவும் பிடித்த ஒன்றைச் செய்ய விரும்பினேன், அதற்காகத்தான் Pekoe Trail ஐ தெரிவு செய்தேன். முதலில் இந்தப் பயணத்தை 12 நாட்கள் மேற்கொள்ளவே திட்டமிடப்பட்டிருந்த போதிலும் 11 நாட்களில் என்னால் இந்தப் பயணத்தை முடிக்க முடிந்துள்ளது. 300 கிலோமீட்டரில் 215 கிலோமீட்டர் நடந்தேன். சுமார் 45 கிலோமீட்டர் மலை ஏறவேண்டும். நான் இந்த பயணத்தின் போது சந்தித்த அனைத்து சிறப்புக்குரிய இடங்களுக்கும் சென்றேன்”.

இதற்காக தான் ஆயத்தமான விதத்தை அவர் இவ்வாறு விபரித்தார்.a“பயணத்தைத் திட்டமிடும் போது, ​​நான் முதலில் நினைத்தது, இலங்கை மக்களுடன் தங்கி அவர்களைச் சந்திப்பேன் என்றுதான். நான் மலையில் வசித்தாலும், பெரும்பாலும் நகரத்திற்கு அருகிலேயே வாழ்ந்திருக்கிறேன். அதனால்தான் மலையகத்தில் வாழும் நம் மக்களின் வாழ்க்கையைப் பற்றி அறிய விரும்பினேன். அவர்களும் தமிழர்களே. நானும் தமிழன் தான். ஆனால் நான் அவர்களிடம் சென்று அவர்களின் வாழ்க்கையைப் பற்றி கேட்டால், அவர்கள் அதைப் பற்றி பேச விரும்பவில்லை. அதனால் அவர்களிடம் சென்று அவர்களுடன் இருந்து அந்த வாழ்க்கையை அறிந்து கொள்ள விரும்பினேன். அதனால் இந்தப் பயணத்திற்கு நான் ஹோட்டல் முன்பதிவு செய்யவில்லை. எனது நண்பர்களிடமிருந்து கிடைத்த தகவலின் மூலம் தங்குவதற்கு சில இடங்களைக் கண்டுபிடித்தேன். சாகசச் செயல்களில் ஈடுபடும் எனது நண்பர் சஞ்சீவன், என் சகோதரி மற்றும் குடும்பத்தினரும் எனக்கு அதற்கு உதவினார்கள். முதலில் ஒரு நாளைக்கு சுமார் 30 கிலோமீட்டர் நடக்க வேண்டும் என்று நினைத்தேன். நான் வழக்கமாக தினமும் காலையில் கொஞ்சம் ஓடுவேன். ஆனால் இந்தப் பயணத்திற்குத் தயாராக வேண்டும் என்பதால், ஒரு மாத காலம் தினமும் காலையில் சுமார் 7 கிலோமீட்டர் ஓடினேன். அந்த நாட்களில் நான் கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்தேன். மேலும், ஊரில் இருந்து வீட்டுக்கு வந்த நாட்களில் மலை ஏறி பயிற்சி செய்து வந்தேன். இதுபோன்ற பயணத்திற்கு அந்த மாதிரியான தயாரிப்பு தேவை என்று நான் நினைக்கிறேன்.”

“நான் முதலாவது நாளின் பயணத்தை ஆரம்பித்தது ஹந்தானவிலாகும். அன்று எனது தோழி ஒருத்தி என்னோடு வந்தார். அவர் முதலாவது பொயிண்ட்டுக்கு 14 கிலோ மீற்றர் தூரம் என்னோடு வந்தார். அதற்கு அப்பால் அவரால் நடக்க முடியாது என பஸ் ஒன்றில் ஏறி லுல் மலைக்குச் சென்றார். நான் அங்கிருந்து நடந்தே லுல் மலைக்குச் சென்றேன். அங்கு சென்ற போது அங்கு நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது. நான் தனியாகவே இரவு 8 மணியளவில் லுல் மலையின் மேலே சென்றேன். எனது நண்பி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் யுவதியாகும். அவளால் சிங்களம் பேச முடியாது. இதனால் பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. நான் லுல் மலையின் மேலே இருந்த போது அவள் கீழே சிறிய கடை ஒன்றுக்கருகில் தங்கி நின்றாள். இரண்டு இளம் பெண்கள் தனியாக இந்த இரவில் என்ன செய்கிறீர்கள் என அந்நேரம் அக்கடையில் இருந்தவர் கேள்வி கேட்டுள்ளார். அவர் எம்மைப் பற்றி பொலிஸாரிடமும் கூறியுள்ளார். என் நண்பி இது தொடர்பில் எனக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு கூறிய போது நானும் கலவரமடைந்தேன். நான் மேலே இருந்து கொண்டு அழுதேன். நான் கீழே வருவதற்கான வழியை அறிந்திருந்தாலும் அந்நேரம் நானும் கலவரமடைந்திருந்தேன். எம்மிடம் பாஸ் இருந்தது. பயப்பட வேண்டிய தேவையும் இல்லைதான். என்றாலும் அந்நேரத்தில் நான் கலவரமடைந்தேன். எவ்வாறாயினும் நான் இரவு 9, 9.30 மணியளவில் கீழே வந்தேன். அங்கிருந்த ஒருவர் எம்மை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவு வழங்கி எமக்கு தங்குவதற்கு இடம் வழங்கினார். அந்நேரம் பொலிஸாரும் அங்கு வந்து எம்மோடு நட்புறவுடன் உரையாடியதால் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. இரண்டாவது நாளில் நான் தனியாகவே எனது பயணத்தை ஆரம்பித்தேன்”

இரண்டாவது நாளில் சயோஜிதா மற்றொரு புதிய அனுபவத்திற்கு முகங்கொடுத்தார். அன்றைய நாள் அவள் லுல் மலையிலிருந்து தவலம் தென்ன திசையில் 18 கிலோ மீற்றர் அளவில் நடந்து சென்றாள்.

“நான் அந்த தூரத்தின் அரைவாசி தூரத்தைக் கடந்த போது ஊரார் சிலரைச் சந்தித்தேன். நான் செல்லும் வழியில் சிறுத்தைகள் இருப்பதால் தாம் கூறும் வழியில் செல்லுமாறு அவர்கள் என்னிடம் கூறினார்கள். அவர்கள் கூறிய வழியில் செல்வதே எனக்குப் பாதுகாப்பானது என்பதால் நானும் அவ்வழியிலேயே சென்றேன். வெகுதூரம் சென்றதன் பின்னர் பார்த்த போது அதற்கப்பால் வீதி இருக்கவில்லை. அப்போது நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது. கீழே பாதாளம். வழியில்லாமல் நான் எங்கு செல்வது என நன்றாகப் பயந்து போனேன். சுமார் மூன்று மணிநேரம் முன்னாலும், பின்னாலும் பயணிக்க முடியாமல் நான் ஓரே இடத்தில் சுற்றிக் கொண்டிருந்தேன். நன்றாக மழை பெய்து கொண்டிருந்ததால் ஒரு தடவை நான் வழுக்கி விழுந்து விட்டேன். அந்நேரம் நான் நன்றாகவே பயந்து போனேன். அந்நேரம் எனக்கு கோயில் மணி ஒன்றின் சப்தம் கேட்டது. கோயில் இருந்தால் அவ்விடத்தில் மக்கள் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு நான் அந்த வழியைத் தேடிக் கொண்டு சென்றேன். அவ்வாறு செல்லும் போது எனக்கு வழி தெரிந்தது. தங்குமிடமும் கிடைத்தது. சில நாட்களில் நான் ஏற்கனவே பேசி புக் பண்ணிய இடங்களில் தங்கினேன். அதேபோன்று எதேச்சையாகச் சந்தித்தவர்கள் அவர்களது வீடுகளுக்கு என்னை அழைத்துச் சென்று எனக்கு உணவு பானங்களை வழங்கி தங்க வைத்து என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். இவ்வாறான அபூர்வமான அனுபவங்கள் எனக்கு இந்தப் பயணத்தில் கிடைத்தது. இது எனது முதலாவது சோலோ டுவர் என்பதால் நான் 20 கிலோ பேக் ஒன்றை எடுத்துச் சென்றிருந்தேன். ஹப்புத்தளையில் நான் மழையில் நன்றாக நனைத்து விட்டேன். இதனால் இடைவழியில் பேக்கின் எடையைக் குறைத்துக் கொண்டேன்”.

சயோஜிதா நுவரெலியாவில் உள்ள பேத்ரோ தோட்டத்தில் இந்த அழகான மற்றும் சிலிர்ப்பான பயணத்தை முடித்தார்.

“அனைவருமே இவ்வாறான சோலோ டுவர் ஒன்றை மேற்கொண்டால், சாகச அனுபவத்தினைப் பெற்றுக் கொண்டால் அது வாழ்நாளில் மிகவும் பயனுள்ளதாக அமையும் என நினைக்கின்றேன். அதன் மூலம் எம்மால் வாழ்க்கையைப் பற்றிய நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்ளலாம். நான் இதற்கு முன்னர் மலை ஏறியிருந்தாலும், சமீபகாலமாக அதுபோன்ற எந்த ஒரு செயலையும் செய்யாததாலும், உடல் வலிமை இல்லாததாலும் முதலில் நான் அசௌகரியமாக உணர்ந்தேன். இந்தப் பயணத்தில் அதுதான் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. பயணத்திற்குப் பிறகு நான் 5 நாட்கள் ஓய்வெடுத்தேன். நான் அனுராதபுரத்தில் உள்ள விபஸ்ஸனா தியான மையத்தில் 10 நாட்கள் தங்கியிருந்தேன்”

இவ்வாறு தெரிவு செய்ததற்கான காரணத்தையும் சயோஜிதாவிடம் கேட்டோம்.

“சோலோ ட்ரவலின் போது தொடர்ந்து நடக்க வேண்டுமே தவிர, ஒரு இடத்தில் நிற்க முடியாது. மனதை அமைதிப்படுத்த வேண்டுமானால் இப்படி ஒரு நிறுத்தம் அவசியம் என்று உணர்ந்தேன். அதனால் தான் நான் அந்த தியான மையத்திற்குச் சென்றேன். அது மிகவும் சுதந்திரமான இடம். அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து இரவு 9.30 மணிக்கு உறங்கச் சென்றேன். கைபேசியைப் பயன்படுத்தாமல், எவருடனும் பேசாமல் தனியாக எனக்கே உரிய நேரத்தை கழித்தேன். புத்த தத்துவம் மற்றும் தியானத்தின் மூலம் வாழ்க்கையைப் பற்றி ஒரு புதிய சிந்தனையை உருவாக்கினேன்.

என்றாலும் இந்த அனுபவம் சயோஜிதாவுக்கு எளிதாக அமையவில்லை. அதற்கு காரணம் சிலரது சமூக மனப்பான்மையே தவிர வேறெதுமில்லை.

“சிறு வயதிலிருந்தே, பொண்களுக்கு அது கூடாது, இது கூடாது என்ற பேச்சுக்களையே கேட்டு வந்துள்ளோம். அங்கு போகக் கூடாது இங்கு போகக் கூடாது, மக்கள் ஆபத்தானவர்கள். அவர்களை நம்பக்கூடாது இப்படியான கதைகளையே கேட்டு வந்துள்ளோம். இப்படி ஒரு பயணத்தை மேற்கொள்ளப் போகிறேன் என்று சொன்னதும் என் குடும்பத்திற்கு அது பிடிக்கவில்லை. காடு, மலைகளில் பல நாட்கள் தனிமையில் பயணம் செய்வது பெண்ணுக்கு ஏற்றதல்ல என பலரும் கூறினர்.

என் தாய் ஒரு திறந்த மனதுடைய பெண்ணாகும், ஒரு ஆசிரியையும் கூட. அதனால், என் பயணத்தை அவர் அனுமதித்தாலும், சமூகம் என்ன சொல்லுமோ என்ற பயமும் அவருக்கு இருந்தது. ஆனால் நான் பயணத்தை முடித்துக்கொண்டு வந்ததன் பிறகு தாயின் அணுகுமுறை மாறியது. உண்மையில் அந்த பயணத்தின் போது நான் மக்களைப் பற்றி நிறைய கற்றுக்கொண்டேன். கெட்டவர்கள் இல்லாமல் இல்லை. அப்படிப்பட்டவர்களையும் இந்தப் பயணத்தில் நான் சந்தித்தேன். எனினும் அதிகமாக நல்லவர்களையே சந்தித்தேன். நம் சமூகத்தில் மக்களிடையே அன்பும், கருணையும், பாசமும் இன்னும் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். என்றாலும், நமது பாதுகாப்பிற்கு நாமே பொறுப்பு என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது”.

23 வயதான சயோஜிதா தற்போது முதுகலை பட்டப்படிப்புக்கு தயாராகி வருகிறார். தனது குடும்பம் இந்துவாக இருந்தாலும், ஒரு மதத்துக்கு மட்டும் தான் தன்னை சிறை படுத்திக் கொள்ள விரும்பவில்லை என இந்த அழகிய கருத்துக்களைக் கொண்ட இந்த இளம்பெண் கூறுகின்றார்.

“நான் நம்பிக்கை கொண்டிருப்பது மதத்தில் அல்ல, இயற்கையின் மீதாகும். மூன்று வருடங்களுக்கு முன்னர் எனக்கு மதம் இல்லை என்று என் தாயிடம் கூறினேன். அன்று என் தாய், தம்பி, தங்கை அனைவரும் இது தொடர்பில் என்னோடு தர்க்கம் புரிந்தார்கள். இப்போது யாரும் அதைப் பற்றி என்னோடு பேசுவதில்லை. ஆனால் நான் சொல்லும் செய்யும் விடயங்களுக்கு எனது தாய் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகிறார். என் தாயின் புரிதல் என் வாழ்க்கையை இலகுவாக்கியது”.

பதினொரு நாள் பயணத்தில் மலைகளின் அழகை ரசித்தவள், அந்த அழகு சில சமயங்களில் தன்னை ஆச்சரியப்படுத்துவதாகவும் கூறினார்.

“இலங்கை என்பது மிகவும் அழகான ஒரு நாடு. அதேபோன்று இலங்கையின் காலநிலையும் ஆச்சரியமானது. நுவரெலியாவில் எமக்கு குளிரான காலநிலை நிலவினாலும் கண்டியில் வெப்பமான காலநிலையை எம்மால் அனுபவிக்க முடியும். எமது நாட்டின் கலாசாரம் மற்றும் இயற்கை அழகு எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் பயணத்தில் நான் நிறைய பேரைப் பார்த்தேன். சந்தித்தித்தேன். அவர்களின் வாழ்க்கை முறையை பார்த்தேன். இப்போது முன்னரைப் போல் இன ரீதியாக மக்களுக்குள் பிளவுகள் இல்லை என்று நினைக்கிறேன். அவ்வப்போது அவ்வாறான இடங்களைச் சந்திக்க நேர்ந்தாலும் அவற்றால் எனக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. மாறாக, எங்கள் மக்களிடையே விருந்தோம்பல், அன்பு மற்றும் ஒற்றுமையை நான் அதிகம் கண்டேன். அதனால்தான் நான் இலங்கையை மிகவும் நேசிக்கிறேன்.

பட்டப் பின் படிப்பிற்காக வெளிநாடு சென்றாலும், மீண்டும் இலங்கைக்கு வந்து இலங்கைக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்” என்றார். அவளுடைய கருத்துக்கள் நெகிழ்வானவை, மென்மையானவை, அழகானவை. படித்த, புத்திசாலி, அழகான இந்த பெண்ணின் வார்த்தைகள் சுயநலத்திற்காக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கனவு காணும் சிலருக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

“தாம் விரும்பியதைச் செய்வதற்கு பெண்ணாக இருப்பதைத் தடையாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். ஆனால் அது யாரையும் புண்படுத்திவிடக் கூடாது” என்பது அவரது எண்ணங்களில் இருப்பது ஒரு விசித்திரமான வசீகரமாகும்.

“நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் வெளி நபர்களுடன் பேசி வெளி உலகத்திலிருந்தே அனைத்தையும் தேட முயற்சிக்கிறோம். தமது மகிழ்ச்சி, ஆறுதல் இவை அனைத்தையும் நாம் வெளி உலகத்திலிருந்து அல்லது வெளி ஆட்களிடமிருந்ததே தேடிக் கொள்ள முயற்சிக்கிறோம். இப்படியான ஒரு சாகசச் செயல், தனியான சுற்றுப் பயணத்தில் ஈடுபடுவதன் மூலம், தனக்கு தன்னுடன் அதிக நேரம் செலவழிக்க வாய்ப்பு கிடைக்கிறது. தனக்கு தனக்கான ஒரு நேரம் கிடைக்கிறது. அதன் மூலம், தன்னைத் தேடிக் கொள்வதற்கும், தான் உண்மையிலேயே நேசிக்கும் விடயங்களைக் தேடிக் கொள்வதற்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. எனக்கு அந்த அனுபவம் கிடைத்ததோடு, நான் அதனை அனுபவித்தேன். அந்தப் பயணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாகும் . அந்த அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் நம்புகிறேன். எனவே, அந்தப் பயணத்தின் அனுபவத்தில் ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கின்றேன்”.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division