இலங்கை மக்கள் மாத்திரமன்றி முழுஉலகுமே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த ஜனாதிபதித் தேர்தல் நேற்று நடந்து முடிந்துள்ளது. நாட்டின் தலைமைத்துவத்தை எவரிடம் கையளிக்க வேண்டுமென்ற தீர்ப்பை மக்கள் தமது வாக்குச்சீட்டுகள் மூலமாக வழங்கி விட்டனர்.
உலகில் ஜனநாயக அரசியலை உயர்வாகப் பேணுகின்ற நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். பிரித்தானிய காலனித்துவத்தின் போது ஆங்கிலேய ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பாராளுமன்ற ஆட்சிமுறைமையை அடிப்படையாக வைத்து இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு முறையானது தொடர்ந்தும் வழுவாது கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் ஜனநாயக விழுமியங்களுக்கு அமைய நேற்று ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டிருக்கின்றது. தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து ஒவ்வொரு வேட்பாளரும் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். வேட்பாளர்களிடமிருந்து அனல் பறக்கும் வார்த்தைப் பிரயோகங்கள் வெளிப்பட்டதையும் காண முடிந்தது.
ஆனால் அவ்வார்த்தைகளையெல்லாம் இனிமேல் தனிப்பட்ட குரோதங்களின் வெளிப்பாடாக எவரும் எடுத்துக் கொள்ள முடியாது. விளையாட்டு மைதானமொன்றில் இறுதிப்போட்டியின் பரபரப்பான தருணத்தில் வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடுவதைப் போன்றே, தேர்தல் களத்திலும் வேட்பாளர்கள் உச்சகட்டப் பரபரப்பில் பிரசாரத்தில் ஈடுபடுவதுண்டு.
அவ்வாறான வார்த்தைக் கணைகளையெல்லாம் மறந்து ஒதுக்கி விட்டு, நாட்டின் நலனுக்காக அனைத்துத் தரப்பினரும் இனிமேல் ஒத்துழைப்புடன் செயற்படுவதே அரசியல் நாகரிகம் ஆகும். வேற்றுமையை வளர்ப்பதால் விளைவது தீமையே என்பதை மறந்து விடலாகாது.
எமது நாடு கடந்த காலத்தில் மிகமோசமான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். அந்த வீழ்ச்சியில் இருந்து எமது தாயகம் முற்றாக மீண்டெழ வேண்டும் என்பதே மக்களின் ஏக்கம் ஆகும்.
இத்தேர்தலில் நாட்டு மக்கள் தங்களது தீர்ப்பை வழங்கி விட்டனர். இனிமேல் அனைத்துத் தரப்பினரும் அரசியல் கோபதாபங்களை மறந்து நாட்டின் நலனுக்காக தலைமைத்துவத்துடன் ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.