வாக்காளர்களை தம்பக்கம் கவர்ந்திழுக்கும் இறுதிநேர தீவிர பிரசாரத்தில் வேட்பாளர்கள்!
இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பதாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கு இன்னமும் ஒரு வாரமே உள்ள நிலையில், வேட்பாளர்களின் பிரசாரங்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன.
நாட்டின் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் அதிக எண்ணிக்கையான வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக இது அமைந்தாலும், மூன்று பிரதான வேட்பாளர்கள் மத்தியிலேயே கடும் போட்டி நிலவுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆகியோரே இந்தப் போட்டியில் முன்னணி வகிக்கின்றனர்.
இவர்களில் யார் அடுத்த ஜனாதிபதி என்பதே மக்கள் மத்தியில் பரபரப்பான பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பொதுஜன பெரமுன தனது கட்சியின் தனியான வேட்பாளராக நாமல்
ராஜபக்ஷ வைக் களமிறக்கியிருந்தது. அவர் இந்தப் போட்டியில் வெல்வதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாக இருந்தாலும், அவருக்கு அளிக்கப்படக் கூடிய வாக்குகள் ஏனைய வேட்பாளர்களின் வெற்றியில் கணிசமான தாக்கத்தைச் செலுத்தும் என்பது அரசியல் அவதானிகளின் கணிப்பாக உள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர், நாட்டில் பயங்கரவாத யுத்தத்தை வெற்றிகொண்ட தலைவரின் புதல்வர் என மக்களின் செல்வாக்குப் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ என்ற அரசியல் முக்கியஸ்தருக்கான ஆதரவு வாக்குகள் கணிசமானளவு கிராம மட்டங்களில் இருப்பதால், நாமலுக்கு அளிக்கப்படக் கூடிய வாக்குகளும் உள்ளன. இந்நிலையில் வாக்குகள் சிதறுண்டு போயுள்ளதால் யார் வெற்றிபெறுவார்கள் என்பதைக் கூறுவது சிக்கலானதாகும்.
இருந்தபோதும், இதுவரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, ஒவ்வொருவரும் தமக்கான வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஏதாவது ஒரு பிரதான தொனிப்பொருளைக் கையில் வைத்துக் கொண்டு செயற்படுவதைக் காணக் கூடியதாகவுள்ளது.
நாட்டை சவால்மிக்க பாதையிலிருந்து மீட்டெடுத்தமையால் முன்னேற்றத்தை நோக்கி மேலும் கொண்டுசெல்ல தனக்கு வாக்களிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறி வருகின்றார்.
அதேநேரம், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் பிரசாரம் ஊழல் மோசடியை இல்லாமல் செய்வது, அரசியல்வாதிகளுக்கான வீண்விரயங்களைக் கட்டுப்படுத்துவது என்பதை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்துள்ளது.
அதேநேரம், நாட்டில் வறுமையை ஒழித்து அனைவரையும் வலுப்படுத்துவது என்ற தொனிப்பொருளில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பிரசாரங்கள் அமைந்துள்ளன.
இந்த நிலையில், சஜித் பிரமேதாசவுக்கு அளிக்கப்படும் வாக்குகள் வீணானவை என்பதால் தனக்கு வாக்களிக்குமாறும், அநுரவுக்கு எதிரானவர்களும் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் பல்வேறு தேர்தல் பிரசார மேடைகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்படும் ஒரு விடயமாக அமைந்துள்ளது.
அது மாத்திரமன்றி, பல்வேறு பிரசார மேடைகளில் அநுரவை நண்பன் என ஜனாதிபதி விளித்துப் பேசியிருப்பதும் சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்படும் விடயமாக உள்ளது. இந்தக் கூற்றை சாதகமாக்கி ஜனாதிபதிக்கும் அநுரவுக்கும் இடையில் டீல் அரசியல் இருப்பதன் வெளிப்பாடே இந்த நண்பன் என்ற கருத்தின் அர்த்தம் என சஜித் தரப்பினர் பிரசார மேடைகளில் கூறி வருகின்றனர்.
எனினும், தன்னை நண்பன் என விளித்துப் பேசவேண்டாம் என அநுர அரசியல் மேடைகளில் கூறி வருகின்றார். ரணில் தனது நண்பன் இல்லையென்றும், அவரது ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் குறித்தும் தமது அரசாங்கத்தின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ள கருத்து சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
மறுபக்கத்தில், ரணில் விக்கிரமசிங்கவும், சஜித் பிரேமதாசவும் இணைந்து கொள்வதன் ஊடாகவே அனுரவைத் தோற்கடிக்க முடியும் என ஐ.தே.க மற்றும் ஐ.ம.சக்தியின் இரண்டாம் நிலை உறுப்பினர்கள் பலர் கருதுவதாகவும் பல இடங்களில் பேசப்பட்டது. தமது அனைவரினதும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இரு தரப்பினரும் இணைந்துகொள்வது அவசியமானது என அவர்கள் கூறுகின்றபோதும், தலைமைத்துவங்கள் இரண்டும் ஒருவரை ஒருவர் சாடிவருவதையே தேர்தல் மேடைகளில் காணக் கூடியதாகவுள்ளது.
இருவரும் இணைய வேண்டும் என்ற விடயத்தை முதலில் பகிரங்கமாக அறிவித்தவராக தலதா அத்துகோரள காணப்படுகின்றார். இருவரும் இணைய வேண்டும் எனக் கூறி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையே அவர் இராஜினாமாச் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாந்து இதே விடயத்தை வலியுறுத்தி தான் சுயாதீனமாகச் செயற்படுவதாக அறிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளராக இருந்த அவர், ஜனாதிபதியும் சஜித்தும் இணைய வேண்டும் என வலியுறுத்தியே இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இவ்வாறு ஒருவருக்கு ஒருவர் போட்டியான முறையில் கூறிவரும் தேர்தல் பிரசாரம் இந்த வாரத்தில் இறுதிக்கட்டத்தை அடைகின்றது. எதிர்வரும் சனிக்கிழமை 21ஆம் திகதி வாக்களிப்பு தினம் என்பதால் 18ஆம் திகதி நள்ளிரவுடன் அனைத்துத் தேர்தல் பிரசாரக் கூட்டங்களும் நிறுத்தப்பட வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கடந்த காலத் தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை தேர்தலில் பாரம்பரிய அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கு அப்பால் சமூக ஊடகங்களின் செயற்பாடுகள் மோசமானதாவே இருக்கின்றன. தேர்தல் பிரசார மேடைகளில்தான் வேட்பாளர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள் என்றால், சமூக ஊடகங்களில் சேறு அள்ளி வீசப்படுகின்றது.
ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஆதரவாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி விசேடமாகப் போலியான கணக்குகள் திறக்கப்பட்டு சேறு பூசும் காரியங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் குறிப்பாக கருத்துக் கணிப்புக்கள் என சமூக ஊடகங்களில் காண்பிக்கப்படும் விடயங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குப் பெரும் தலையிடியாக மாறியுள்ளன.
கடந்த காலங்களில் சமூக ஊடகங்களின் பயன்பாடுகள் ஒப்பீட்டளவில் குறைந்த நிலையில் இருந்தபோதும் இம்முறை அதனைப் பயன்படுத்தி தமது செல்வாக்குத்தான் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது எனக் காண்பிப்பதற்குப் பல்வேறு வேட்பாளர்களும் முட்டிமோதுகின்றனர்.
கருத்துக் கணிப்புக்கள் என்ற போர்வையில் மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக ஒலிவாங்கியைப் பிடித்துக்கொண்டும், கமராவை இயக்கிக்கொண்டும் கேள்விகளைக் கேட்டுச் செல்கின்றனர். இவ்வாறு கூறப்படும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட பகுதியில் இந்த வேட்பாளருக்கான ஆதரவுதான் அதிகம் எனக் காண்பிக்கும் முயற்சிகளே அதிகம் காணப்படுகின்றன.
இவற்றின் பின்னணியை சரியாக உற்றுநோக்கும்போது ஏதாவது குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவாக செயற்படும் சமூக ஊடகப் போராளிகளே இந்தக் கருத்துக்கணிப்புக்களை வெளியிடுகின்றனர் என்பது தெரிகின்றது. இதில் எந்தவித சுயாதீனத் தன்மையையும் காணக்கூடியதாக இல்லை.
மறுபக்கத்தில் பாரம்பரிய அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டால் அவை யாராவது ஒரு வேட்பாளரை ஆதரிக்கும் வகையிலேயே பெரும்பாலும் செயற்படுகின்றன.
தொடரும் கட்சித் தாவல்கள்:
சூடுபிடித்துள்ள ஜனாதிபதித் தேர்தல் களத்தில் பாரம்பரிய மற்றும் சமூக ஊடகங்களின் செயற்பாடுகள் இவ்வாறானதாக இருக்கும் நேரத்தில், கட்சித்தாவல்கள் இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகிய இரு தரப்புக்கும் இடையிலேயே இந்தக் கட்சித் தாவல்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.
தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையிலான கட்சித் தாவல்கள் பதிவாகியிருந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தலதா அத்துகோரள தனது உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொண்டார். அவருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவியொன்று வழங்கப்படவிருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
இதனைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சராக இருந்த கீதா குமாரசிங்க அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் பக்கம் தாவினார். ஜனாதிபதியின் ஆதரவுத் தளத்தில் இருந்த அவர் திடீரென சஜித் பக்கம் தாவினார்.
இவ்வாறு கட்சி தாவியவர்கள் மற்றும் தனக்கு ஆதரவாக இல்லாது வேறு வேட்பாளருக்கு ஆதரவாக இருக்கும் இராஜாங்க அமைச்சர்களின் பதவிகளை ஜனாதிபதி பறித்துக் கொண்டார். இதற்கமைய கீதா குமாரசிங்கவின் இராஜாங்க அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டதுடன், நாமல் ராஜபக்ஷ வுக்கு ஆதரவாக உள்ள இராஜாங்க அமைச்சர்கள் சிலரின் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன.
இராஜாங்க அமைச்சர் என்ற பதவிக்காக வழங்கப்படும் வாகனம் உள்ளிட்ட அரச சொத்துக்களைப் பயன்படுத்தி மற்றொரு வேட்பாளருக்குப் பணியாற்றுவது நியாயம் இல்லையெனக் கூறியே இந்தப் பதவிகள் பறிக்கப்பட்டதாக அரசியல் தரப்பில் கூறப்படுகின்றது. தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருப்பதால் இதுபோன்ற கட்சித் தாவல்கள், குதிரைப் பேரங்கள் எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எவருக்கும் சவாலாக இருக்கப் போவது!
கடும் போட்டிக்கு மத்தியில் எந்த வேட்பாளர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டாலும் நாட்டின் பொருளாதாரத்தை சீர்செய்ய வேண்டிய பாரியதொரு சவாலை எதிர்கொண்டே ஆக வேண்டும். பொருளாதார நெருக்கடியால் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ள நாடு பல்வேறு துறைகளில் சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றது.
இந்த சவால்களை நடைமுறைச் சாத்தியமான வகையில் அணுகுவதன் ஊடாகவே சாதகமான தீர்வைக் காணமுடியும் என்பதை அனைத்து வேட்பாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கின்றது.
வெறுமனே பதவியை அல்லது ஆட்சியைப் பிடித்துவிடுவது என்ற குறிக்கோளுடன் நடந்துகொள்வது நாட்டுக்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ நன்மையைத் தராது என்பதையும் பிரதான வேட்பாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டியுள்ளது.