நுஃமான் : வாழ்க்கையில் மதத்தின் பங்கு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கணேஷ் : மதம் என்பது சிறுவயதில் இருந்தே பெற்றோர்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்படுவது. அதற்கென்று ஒரு வழிமுறை இருக்கு. எந்தச் சமயமாக இருந்தாலும் அது நமக்கு ஒரு நெறிமுறையை வகுத்துக்கொடுக்கிறது. அந்த நெறிமுறையில் எது நல்லது எது கெட்டது என்பதைப் பிற்காலத்தில் குழந்தைகள் வளர்ந்த பிறகு அவர்களால் உணர்ந்துகொள்ள முடிகிறது. எல்லா மதத்தினருக்கும் இறைவன் பொதுவானவன். ஒரு சாராருக்கு மட்டும் உரியவன் அல்ல. இருப்பது ஒரே ஒரு இறைவன்தான். நான் சொல்வது என்னவெண்றால். நீங்கள் குல்லாப் போட்டிருக்கிறீகளா? வேட்டிகட்டி இருக்கிறீர்களா? சாறன் கட்டி இருக்கிறீர்களா, நாமம் போட்டிருக்கிறீர்களா என்பது முக்கியமில்லை. இறைவன் எல்லாருக்கும் பொதுவானவன். ஆண்டவனுக்குப் பயந்துகொண்டு இருந்தோம் என்றால், நெறிமுறைகள் அது சட்டமாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும் வாழ்க்கை ஒழுங்காக இருக்கும். இல்லையென்று சொன்னால் திக்குத் திசைமாறிப் போகும். தண்டவாளத்தில் இருந்து புரண்ட மாதிரி.
நுஃமான் : நீங்கள் இறை நம்பிக்கையை மதங்களோடு, ஒரு குறிப்பிட்ட மதத்தோடு சேர்த்துப் பார்க்கவில்லையா?
கணேஷ் : இல்லை, எல்லா மதங்களையும் நாம் ஆழ்ந்து படிக்கவேண்டும். சைவமோ, வைஷ்ணவமோ எல்லாத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். எல்லா மதங்களுக்கும் நாம் மரியாதை கொடுக்கவேண்டும். மதங்களில் இருந்து நல்லவைகளைத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கையையும் ஒழுக்கநெறியில் வைத்திருக்கவேண்டும்.
நுஃமான் : பொதுவாக மார்க்சியம், இருத்தல், அதாவது வாழ்நிலைதான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது என்று சொல்கிறது.
கணேஷ் : ஆமாம்
நுஃமான் : ஆனால் மதம் சிந்தனைதான் வாழ்நிலையைத் தீர்மானிக்கிறது என்று சொல்கிறது. இரண்டுக்கும் இடையில் அடிப்படையான வேறுபாடு உண்டு.
கணேஷ் : ஆமாம், ஆமாம், தற்போதுள்ள நிலையில் எல்லாவற்றையும் பொருளாதாரம்தான் பாதிக்கின்றது. ஆனால், என்னைக் கேட்டால் ஆன்மிகம்தான் மனிதனுக்கு அவசியமாகத் தெரிகிறது. இன்றைய அணுகுண்டு யுகத்தில் இது அவசியமாகத் தோன்றுகிறது. கடவுள் இல்லாவிட்டாலும் கடவுள் ஒருத்தனை சிருஷ்டி பண்ணிக்கொள் என்று வால்டேயர் சொன்ன மாதிரி ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் அவசியமாக இருக்கிறது. அதனால், ஒரு குறிப்பிட்ட மதத்தில் வெறிபிடிக்காமல் ஆன்மிக முறையில் போகும் எதையும் நாம் ஆதரிக்க வேண்டும்.
நுஃமான் : இப்படிச் சொன்னால் என்ன நீங்கள் மார்க்சியத்தின் தத்துவார்த்த அம்சத்தை அதாவது பொருள் முதல்வாதத்தை அவ்வளவு பொருட்படுத்தவில்லை.
கணேஷ் : தத்துவார்த்த அம்சத்தை இல்லை.
நுஃமான் : ஆனால், அதன் அரசியல் அம்சத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று சொல்லலாமா?
கணேஷ் : ஆம், சில தத்துவங்கள் ஏற்புடையதாக இருக்கின்றன.
நுஃமான் : அந்த அடிப்படையில்தான் நீங்கள் மார்க்சிய இயக்கங்களுடன் தொடர்பட்டு இருந்தீர்களா?
கணேஷ் : ஆம், ஏனென்றால், மக்கள் சேவையே மகேஸ்வரன் சேவை என்பது போல, இந்தத் தத்துவங்களினால் பொதுமக்களுக்குப் பயன் கிடைக்கும் என்று நினைத்தேன். சோவியத் ரஷ்யாவை ஒரு சொர்க்க பூமியாக நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், எனக்கு அங்கு போக வாய்ப்புக் கிடைத்து, அங்கு சென்று பார்த்தபோது அது சொர்க்க பூமியாக இருக்கவில்லை. ஆனால், ஒரு மாயையிலேதான் ரொம்பப் பேர் மயங்கி இருந்தார்கள். அந்த மாயையை விடுத்து உண்மையை ஊடுருவிப் பார்க்கும்போது பல விசயங்கள் தெரிய வந்தன. உதாரணமாக ஸ்டாலின் கொடுமைகள். அதன் சாயல்தான் பல இடங்களிலும் நடக்கின்றது. இதையெல்லாம் பார்த்தபோது கடைசியில் எனது தீர்மானம் என்னவென்றால் மனிசன் நல்லா இருந்தா உலகமும் நல்ல இருக்கும். உலகம் நல்லா இருக்கிறதுக்கு மனிசன் நல்லா இருக்க வேணும்.
நுஃமான் : இந்தக் கருத்து உங்களுக்குள் இளமைக் காலத்திலேயே இருந்ததா அல்லது இப்போது உங்களுக்குத் தோன்றுவதா?
கணேஷ் : இளமையில் அம்மாவிடம் இருந்து நான் பெற்றுக்கொண்ட மதக்கல்விதான் எனது அடிப்படை. அந்த வாய்ப்பு எனக்கு இருந்தது. அதை நான் விரிவுபடுத்திக் கொண்டு வந்திருக்கிறேன். ஊடுருவிப் பார்க்கும்போது மதம் மனிதனுக்கு அவசியம். அதாவது ஒரு நெறிமுறை அவசியம். அது எந்த மதமாக இருந்தாலும் சரி. அந்த நெறிமுறையை மீறினால் பாதகம் ஏற்படுகிறது என்பதை நான் உணர்கிறேன்.
நுஃமான் : ஆரம்பத்தில் இருந்தே உங்களுக்கு இந்தக் கருத்து இருந்தது.
கணேஷ் : ஆமாம், ஆமாம் இந்தக் கருத்து உள்ளேயே இருந்தது.
நுஃமான் : ஆனால், பொதுவாக உங்களைப் பற்றிப் பேசும்போது நீங்கள் ஒரு மார்க்சியவாதி – ஒரு இடந்துசாரி – கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தவர் என்றே சொல்லுவார்கள். நீங்கள். ஒரு பொருள் முதல்வாதி – ஒரு நாஸ்திகர் என்ற கருத்தே பலருக்கும் இருக்கின்றது. இந்த இரண்டுக்கும் இடையில் ஒரு முரண்பாட்டை நீங்கள் காணவில்லையா?
கணேஷ் : வெளியில் உள்ளவர்கள் அப்படித்தான் நினைத்தார்கள். உறவினர்கள் கூட என்னை ஒதுக்கிவைத்தார்கள். கணேசா, அவன் ஏரு கம்யூனிஸ்ட்டு என்று ஒரு பட்டம் எனக்குக் கொடுக்கப்பட்டது. அது அவங்க அவங்களுடைய போக்கு. அதை நாம் குறை சொல்லுவதற்கில்லை. அவர்களுடைய கொள்கைகளும் எண்ணங்களும் அந்த மாதிரி இருந்தது. அவர்களுக்கு ஆழ்ந்து பார்க்கக் கூடிய தன்மை கிடையாது. இன்றைக்கு ‘இந்த சமுதாயத்தில் யாருக்குமே இல்லாமல் இருக்கு, நான் ஒரு சம்பவத்தைச் சொல்லலாம். அந்தக் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டம் ஒன்றுக்கு நான் ஒரு நண்பரை அழைத்துக்கொண்டு போயிருந்தேன். மோகன் குமாரமங்கலம் பேசிக்கொண்டிருந்தார். நான் அழைத்துப் போயிருந்த நண்பர் ஒரு ட்றொட்ஸ்கியவாதி. அவரை ஒரு தீணர்டாதவர் மாதிரி அங்கிருந்தவர்கள் ஒதுக்கிவைத்தார்கள். ட்றொட்ஸ்கி. உண்மையிலேயே ஒரு பெரிய புத்திசாலி. அவர் கொலை செய்யப்பட்டார். எனக்கும் பெரிய தாக்கமாக இருந்தது. பின்னாளில் ட்டெறாட்ஸகியவாதிகளை ஒரு சாதி வகுப்புமாதிரியே தள்ளிவைக்கிற நிலை இருந்தது.
நுஃமான் : மதங்களில் இருக்கிற “செக்ரேறியனிசம்’ மாதிரி.
கணேஷ் : ஆம். அப்பிடி மதங்களில் இருக்கிற மாதிரி, ஒரு: மதத்தையே அவர்கள் உருவாக்கிக் கொண்டார்கள். கம்யூனிசம் என்பதே ஒரு மதம் ஆகிவிட்டது, சைவம், வைஷ்ணவம், சாக்தம் என்று எப்படிப் பிரிந்ததோ அந்தமாதிரி இவர்களும் பிரிந்து கடைசியில் ஒன்றுமில்லாமல் இப்போது கொள்கை வேறுபாட்டில் ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், நான் எல்லாவற்றையும் ஊடுருவி என்னுடைய கொள்கையை உருவாக்கிக் கொள்கிறேன். சுதந்திரமாக. அதனால் அவர் அதிலையும் இருக்கமாட்டார், இதிலையும் இருக்கமாட்டார் என்று என்னைப் பற்றி சிலபேர் சொல்வார்கள். இப்படி நம்மில் சில இடதுசாரிகளும் இருந்துள்ளனர். எனக்கும் அதில் ஊடுருவிச் செல்வதற்கு இஷ்டம் இல்லாமல் போய்விட்டது. இதில் தீவிர பங்கு. எடுக்காமல் போனதற்கு இதுவே காரணம்.
சும்மா இருப்பதே சுகம் என்ற சித்தர்கள் வாக்குப்படி. இருப்பது. சும்மா மேடையில் ஏறாமல் இருப்பதற்கும் ஒரு காரணம் இதுதான். ஏனென்றால் மௌனம் என்பது. ஞானம். இது எனக்காக ஒரு சௌகரியத்துக்காக நான் சொல்வது. இது ஒரு Philosophy அல்ல. ஆனால் அதுதான் உண்மை, இன்றைக்கு இருக்கிற குத்துவெட்டுக்களைப் பார்க்கும்போது ஒவ்வொருத்தருக்கும் ஒழுக்கம் முக்கியமானதாகக் கருதினேன். அவ்வளவுதான். அந்த ஒழுக்கத்துக்கு வால்டேயர் கூறியது மாதிரி அது அவசியம் என்றுதான் நினைக்கிறேன்.
நுஃமான் : மத நம்பிக்கை இல்லாமல் ஒருவன் ஒழுக்கமாக: இருக்க முடியாது என்று நினைக்கிறீர்களா?
கணேஷ் : கஷ்டம் என்றுதான் நினைக்கிறேன். என்ன இருந்தாலும் ஒவ்வொரு சாதாரண மனிதனும். பிறக்கும்போதே மதத்தோடு பிறக்கிறான். அதில் உள்ள பண்பாடுகள், பழக்க வழக்கங்களில் வளர்கிறான். அவர் அவர் தேர்ந்தெடுத்த அந்தப் பண்பாட்டில் நல்லவை கெட்டவை எவை என்று தெரிந்துகொண்டால், நல்லதுதான். ஆனால் இப்பொழுது என்ன நிலை இருக்கிறது. என்பது பிரச்சினைதான். இப்போது பழைய நிலை இல்லை. ஒரு வெறித்தன்மை ஏற்பட்டுப் போகிறது. அது மிகவும் வருந்தத் தக்கது, இதைத்தான் ஃபண்டமென்றலிசம் என்கிறோம்.
இந்தம் ஃபண்டமென்றலிசம் இன்று எல்லா மதங்களிலும் இருக்கிறது. ஒரு மதத்தில் மட்டும் என்று இல்லை. அதே மாதிரித்தான் அரசியல். கொள்கைகளும், ஃபண்டமென்றலிசம் என்றால் ஒரு, உண்மையான நடுவுநிலைப் போக்கோடு ஆண்டவனைப் பார்த்தான். என்றால் இந்தப் பிரச்சினைகள் எல்லாம் இருக்காது.
நுஃமான் : தேசியவாதம் கூட ஒருவகையில் அதன் முதிர்ந்த வடிவத்தில் ஒரு வெறித்தன்மைக்கு இட்டுச்செல்வதே. ஜேர்மன் தேசியவாதம், இத்தாலிய தேசியவாதம் எல்லாம் பாஸிசமாக வளர்ந்தது. அப்படிப் பார்க்கும் போது இன்றைய நிலையில் இலங்கையில் தேசியவாதம், இந்தியாவில் வளர்ந்துள்ள இந்து தேசியவாதம் பற்றி என்ன நினைக்கிறர்கள்?
கணேஷ் : அந்தக் காலத்தில் உண்மையில் ஹிட்லரின். மைன்கேம்ஃ.ப் மூன்றுதரம் வாசித்துள்ளேன். ஹீட்வின் கொள்கையை சிலர் இங்கு அதரிக்கவும் செய்தார்கள். தமிழ் நாட்டிலும் சிலர் ஆதரித்தார்கள் ஹிட்லர் ஜேர்மனியை மேம்படுத்திவிட்டார். இங்கும். அதைப் பின்பற்ற வேண்டும் என்றார்கள். சிலர் ஜப்பானையும் ஆதரித்தார்கள். இந்தமாதிரி தேசியவாதத்தினால்தான் ஒரு நாடு முன்னேற. முடியும் என்றார்கள். உண்மையைச் சொல்லப் போனால் காந்தியந்தான் என்னைக் கவர்ந்தது. இந்திய தேசியவாதத்தில் காந்தியம் இருந்தது. அதனால் எனக்குக் காந்தியக் கொள்கையில் ஈடுபாடு இருந்தது. சுதந்திரத்துக்கும். பிறகு, காங்கிரசைக் கலைத்துவிட வேண்டும் என்று கந்தி சொன்னார். ஏனென்றால், அது institutionalized ஆகக் கூடாது என்றுதான். அரசியலில் அவ்வாறு நடக்கிறது. மதத்திலும் அவ்வாறு அமைப்பு முறைகள் உருவாகின்றன. இதனால் பல. கோளாறுகள் வரத்தான் செய்யும். அரசியலில் இருந்த மாதிரி மதத்திலும் இது வந்துவிட்டால். அதுதான் பெரிய பிரச்சினையாகிறது. இதுதான். கடைசியில் அடிப்படைவாதமாகிறது. ஏறக்குறைய தேசியவாதமும் அதேநிலையில்தான் இருக்கிறது. மொழி, மதம், அரசியல் எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. வேறுபாடு காட்டுகின்றது.
இவை எல்லாவற்றையும் தாண்டிச் செல்வதற்கு ஒழுக்கம் என்கிற ஒன்று வேணும். ஒவ்வொருத்தரும் ஆத்மாவைச் சுத்தமாக்கிக் கொண்டால்தான் இவற்றை வெல்ல முடியும் என்பது என் கருத்து.
****
தலாத்து ஓயா கணேஷ் எனப் பொதுவாகவும் கே. கணேஷ் என நண்பர்கள், உறவுகள் மத்தியிலும் அறியப்பட்ட இவர், மலையகத்தின் முன்னோடி இலக்கிய கர்த்தாக்களில் ஒருவர் மட்டுமன்றி இலங்கைத் தமிழ் இலக்கியப் பரப்பின் முன்னோடியாகவும் இவரைக் கருதலாம்.
கண்டி அம்பிட்டியவில் 1920ஆம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் சித்திவிநாயகம். வீட்டில் செல்லமாக கணேசன் என்றே இவரை அழைத்ததால், அதுவே அவரது பெயராகி கே. கணேஷ் என்றாகியது. கண்டியில் கல்வியை ஆரம்பித்தவர், பின்னர் மதுரை தமிழ் சங்கத்தில் கல்வி கற்றார். அது சுதந்திரப் போராட்ட காலமானதால் இந்திய சுகந்திரப் போராட்டத்தில் அவர் நாட்டம் திரும்பியதில் ஆச்சரியமில்லை. காங்கிரஸ் கட்சியால் அவர் ஈர்க்கப்பட்டிருந்தாலும் பின்னர் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் பரவிய கம்யூனிச முற்போக்குவாதம், அவருடைய இயல்புத் தன்மையோடு ஒத்துப்போனதாலோ என்னவோ முற்றுமுழுதாக சமவுடைமைக் கொள்கைகளில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
தன் இலக்கிய வாழ்வில் அவர் ஏழு சிறுகதைகளை எழுதினார். ஆனால் ஏராளமான மொழிபெயர்ப்புக்களில் அவர் ஈடுபட்டார். அவருடைய இரு சிறுகதைகள் மணிக்கொடியில் வெளிவந்தன. கவிஞர்களின் நூல்களைத் தமிழுக்கு கொண்டுவந்த பாரிய பணியை இவர் செய்தார். இவரளவுக்கு மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் பெயர்போன ஒருவரை சமகாலத்தில் காணமுடியாது. 2003ஆம் ஆண்டில் கனேடிய இலக்கியத் தோட்டம் இவருக்கு ‘இயல்’ விருது வழங்கிக் கௌரவித்தது. இயல் விருது பெற்ற கணேஷை கனடாவில் இருந்து வெளிவரும் ‘காலம்’ இலக்கிய சஞ்சிகைக்காக பேராசிரியர் நுஃமான் நேர்காணல் செய்தார். 2003ஆம் ஆண்டில் வெளிவந்த அந்நேர்காணல் கணேஷின் நூற்றாண்டு விழாவையொட்டி மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது.
****
பேராசிரியர் நுஃமான் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனைக்குடியில் 1944 இல் மக்புல் ஆலிமுக்கும் சுலைஹா உம்மாவிற்கும் மகனாகப் பிறந்தார். தந்தை ஒரு மதப்பணியாளர், அரபு மொழி ஆசிரியர். ஈழத்து தமிழ் அறிஞர். பேராசிரியர், கவிஞர், எழுத்தாளர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர், இதழாளர் என பல துறைகளில் செயல்பட்டவர். நவீனத் தமிழ் உரைநடைக்கான இலக்கணத்தை உருவாக்க பணியாற்றியவர்.
பேராசிரியர் நுஃமான் ஆரம்பக் கல்வியைக் கல்முனைக்குடி அரசினர் ஆண்கள் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியைக் கல்முனை உவெசுலி உயர்தரப் பாடசாலையிலும் படித்தார். பின்னர் 15 ஆண்டுகள் பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றினார். அட்டாளைச் சேனை அரசினர் ஆசிரியர் கல்லூரியில் ஆசிரியப் பயிற்சி பெற்றார். இளங்கலை மொழியியல் பாடத்தை இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கொழும்பு வளாகத்தில் பயின்றார். அதுபோல் முதுகலைத் தமிழ் இலக்கியப் பாடத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வைப் பேராசிரியர் குமாரசாமி இராசாவின் மேற்பார்வையில் மூன்றாண்டுகள் செய்தார்.
பேராசிரியர் நுஃமான் 1969–1970-ல் ‘கவிஞன்” என்ற பெயரில் காலாண்டு இதழை நடத்தினார்.
தொடரும்