நாட்டின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் அதிக காலம் அரசாங்கப் பொறுப்புகளை வகித்த அனுபவமிக்க அரசியல்வாதியாக ரணில் விக்கிரமசிங்க கருதப்படுகிறார். நாட்டின் அரசியலின் தன்மையை இனங்கண்டு கொள்வதற்கும், அரசியலினுள் வெற்றியைப் போன்று தோல்வியும், எவ்வாறு அரசியலின் வடிவத்தை வடிவமைக்க உதவுகிறது. மற்றும் பிரசாரம், ஊடகங்கள் மற்றும் வதந்திகள் ஒவ்வொரு நபர்கள் தொடர்பில் மக்களின் மனோநிலை தீர்மானிக்கப்படுவதற்கு தாக்கங்களைச் செலுத்தும் முறைகளை இனங்கண்டு கொள்வதற்கும் மிகவும் தகுதியான நபர் ரணில் விக்கிரமசிங்க என்பவரே என கருதுகின்றேன். இலங்கை அரசியலின் போக்கைப் பாதிக்கும் காரணிகளைத் தீர்மானிக்க இவ்வளவு பொருத்தமான பாத்திரம் வேறில்லை என்றே நான் நினைக்கிறேன்.
அவரது தந்தை, எஸ்மண்ட் விக்கிரமசிங்க, மிக இளம் வயதிலேயே நாட்டின் அரசியலில் குறிப்பிடத்தக்க பங்கை வகித்த ஒரு பிரபலமாகும். நாட்டின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா 1952இல் காலமானபோது, எஸ்மண்டுக்கு 32 வயதாகும். அவ்வாறு இருந்தபோதிலும், பிரதமர் பதவிக்கு உரிமை கோரிய ஜோன் கொத்தலாவலக்குப் பதிலாக டி.எஸ்ஸின் மகன் டட்லியை அந்தப் பதவிக்குக் கொண்டுவரும் பிரசாரத்தில் எஸ்மண்ட் டட்லியுடன் இணைந்து செயற்பட்டார். அவர் இந்த விவகாரத்தில் முக்கிய பங்காற்றியதாக ஜோன் கொத்தலாவல எழுதிய “பிரதமர் கொள்ளை” என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரணிலின் தாயார் நளினி விஜேவர்தனவாகும். அவர் இலங்கை பத்திரிகைத் துறையின் ஜாம்பவானாகக் கருதப்படும் டி.ஆர். விஜேவர்தனவின் மகளாகும். களனி விகாரையின் மீள் அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருந்த திருமதி ஹெலேனா விஜேவர்தனவின் மகளாக அவரும் களனி விகாரையின் அபிவிருத்தியில் பெரும் பங்காற்றியுள்ளார்.
ரணில், கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்றவராகும். அந்தக் காலத்தில் நாட்டின் உயர்மட்ட குடும்பங்களின் பிள்ளைகள் பல்கலைக்கழக கல்விக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற போதும், ரணில் தனது உயர் கல்வியைக் கற்றது கொழும்பு பல்கலைக்கழகத்திலாகும். இதன்மூலம், இலங்கையின் பிரதமராக பதவியேற்கும் முதல் இலங்கை பல்கலைக்கழக பட்டதாரி என்ற பெருமையை அவர் பெற்றார். அந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை. ரணில் விக்கிரமசிங்கவே இலங்கையின் பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவியை வகிக்கும் முதல் மற்றும் ஒரே இலங்கை பல்கலைக்கழக பட்டதாரி ஆவார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் கூட்டமைப்பான ஐக்கிய தேசியக் கட்சியின் அகில இலங்கை இளைஞர் முன்னணியின் செயற்குழு உறுப்பினராகவே ரணிலின் அரசியல் வாழ்க்கை ஆரம்பமாகியது. கம்பஹா மாவட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட பியகம தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டு 1977 பொதுத் தேர்தலில் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டார். அப்போது அவர் ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கத்தில் வெளிவிவகார பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ஜே.ஆர் அரசாங்கத்தின் அமைச்சரவையில் பல்வேறு பதவிகளை வகித்து, பிரேமதாசாவின் அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சர், சபையின் சபாநாயகர் மற்றும் ஊடகப் பேச்சாளர் ஆகிய பதவிகளையும் வகித்தார்.
ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் கீழ் இலங்கை அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான இரண்டு சந்தர்ப்பங்களில் தலைமைப் பொறுப்பை நிறைவேற்றும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. முதலாவது வாய்ப்பு 1991ஆம் ஆண்டில் ஜனாதிபதி பிரேமதாச குற்றப் பிரேரணைக்கு முகம் கொடுத்த சந்தர்ப்பமாகும். அப்போது ரணில் தலைமைத்துவத்துடன் நேராக நின்றார். அந்தக் குற்றப் பிரேரணையிலிருந்து பிரேமதாசாவைக் காப்பாற்றுவதற்கு ரணில் அதிகூடிய பலத்துடன் செயற்பட்டார். இரண்டாவது சந்தர்ப்பம் ஜனாதிபதி பிரேமதாச குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சந்தர்ப்பமாகும். நாடு அராஜக நிலைக்குச் செல்வதைத் தடுப்பதற்காக அரசியலமைப்பிற்கு அமைய தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அவர் முன்னின்று செயற்பட்டார். அந்நேரம் மக்கள் கூடியிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்டத்தை இரத்துச் செய்து அமைதியான முறையில் டி. பி. விஜேதுங்கவை ஜனாதிபதி பதவிக்கு நியமித்து அரசியலமைப்பிற்கு அமைவாக அரச நிருவாகத்தை நிலையாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார்.
பல்வேறு வகையான அரசியல் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு ஆயத்தமாக வேண்டிய காலமாக அந்த யுகம் இருந்தது. டி.பி.விஜேதுங்க 1994ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பாராளுமன்றத்தைக் கலைத்தார். ஐக்கிய தேசிய கட்சி தோல்வியடைந்தது. 17 வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி தோல்வியடைந்தது. ரணில் விக்கிரமசிங்க தோல்வியை அறிந்து கொண்ட உடனேயே தனது உடமைகள் அடங்கிய பொதிகளை எடுத்துக் கொண்டு பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்து அலரி மாளிகையிலிருந்து தனது வீட்டுக்குச் சென்றார். அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை நியமிப்பதற்காக இடம்பெற்ற வாக்கெடுப்பில் கட்சியிலிருந்து வெளியேறிச் சென்று மீண்டும் வந்த சேர்ந்து கொண்ட காமினி திசாநாயக்க ஒரு மேலதிக வாக்கினைப் பெற்றுக் கொண்டதால் ரணிலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி இல்லாமல் போனது.
1994 இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் காமினி திஸாநாயக்க கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் அவர் படுகொலை செய்யப்பட்ட போது, கட்சியின் செயற்குழு திருமதி காமினி திஸாநாயக்கவை வேட்பாளராக முன்னிறுத்த தீர்மானித்தது. அதன் பின்னர் விஜேதுங்கவின் ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், அதிக தலைவர்கள் கொலை செய்யப்பட்டு, ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்து, செயலிழந்த ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்க வேண்டியதாயிற்று.
1999ம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா மீது குண்டுத் தாக்குதல் மேற்கொண்டு விடுதலைப் புலிகள் ரணில் ஜனாதிபதியாவதைத் தடுத்தனர். 2001ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ரணில் சந்திரிக்காவைத் தோற்கடித்து ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். அப்படியிருந்த போதிலும் சந்திரிக்கா அமைச்சர்களை நீக்கி அமைச்சுப் பொறுப்புக்களைத் தம்வசப்படுத்திக் கொண்டு ஏற்படுத்திய தடைகளைத் தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. 2005ஆம் ஆண்டிலும் விடுதலைப் புலிகள் தமிழ் வாக்காளர்கள் வாக்களிப்பதைத் தடுத்து அவர் ஜனாதிபதியாவதை இரண்டாவது தடவையாகவும் தடுத்தார்கள். 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ போட்டியிட்ட போது அவர் யுத்த முடிவின் வீரனாக இருந்தார். அப்படியிருந்தும் 2015ஆம் ஆண்டில் அந்த அரசாங்கத்தைத் தோற்கடித்து புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கும், அதற்கடுத்த பொதுத் தேர்தலில் வெற்றியீட்டுவதற்கும் அவரால் முடிந்தது. என்றாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டை ஆட்சி செய்தது ரணிலுக்கு இடைஞ்சலை கொடுத்துக் கொண்டேயாகும்.
2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பொது மக்கள் அவருக்கு ஒரேயொரு தேசியப்பட்டியல் மூலமான பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மட்டுமே வழங்கியிருந்தனர். 2022 கொவிட், பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நாட்டைப் பொறுப்பேற்க முன்வந்தது அந்த ஒரேயொரு தேசியப்பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு வந்த ரணில் விக்கிரமசிங்க மாத்திரமேயாகும்.
பாராளுமன்றத்தினால் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் கடந்த இரண்டு வருடங்களினுள் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய பணிகளை இவ்வாறானதொரு ஒரு சிறு கட்டுரையில் உள்ளடக்கிவிட முடியாது. 21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்து மீண்டும் ஒரு முறை ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தியதிலிருந்து அவர் அறிமுகப்படுத்திய சட்ட மறுசீரமைப்புக்கள் ஏராளமானவையாகும். ஊழல் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றியமை, தேர்தல் செலவினக் கட்டுப்பாடு சட்டத்தை நிறைவேற்றியமை, மத்திய வங்கி சுயாதீனச் சட்டம் போன்ற சட்டங்களோடு ஊழல் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலையும் அறிமுகப்படுத்துவதற்கு அவரால் முடிந்திருக்கின்றது.
எரிவாயு வரிசை, எரிபொருள் வரிசை, எரிபொருளை ஏற்றி வந்த கப்பல்களுக்குரிய நிதியைச் செலுத்த முடியாமல் துறைமுகத்தில் சிக்கி நின்றமை, மின் வெட்டு, மருந்துகளுக்கான வரிசைகள் தொடர்பில் இன்று வாழும் அனைவருக்கும் தமக்கேயுரிய அனுபவங்கள் இருக்கும் என நினைக்கிறேன். எனவே அவற்றை நினைவூட்டத் தேவையில்லை. அவர் அவை அனைத்தையும் தீர்த்தார். பணம் கொடுத்தாலும் அவற்றை வாங்க முடியாது எனக் கூறப்பட்ட யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். அடுத்தது பொருட்களின் விலைகள் தாங்கிக் கொள்ள முடியாதளவில் உயர்ந்து சென்ற யுகமாகும். இலங்கைக்கு ஒருபோதும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைக்காது எனக் கூறப்பட்ட யுகத்தில் அவர் ஐ.எம்.எப்பிடமிருந்து கடனைப் பெற்றுக் கொண்டார். பண நோட்டுக்களை அச்சிடுவதையும், கடனுக்குப் பெறுவதையும் ஐ. எம். எப் தடை செய்த பின்னர் பணத்தைத் தேடிக் கொள்வதற்காக வரிகளை அதிகரிக்க வேண்டியேற்பட்டது.
இன்று அவை அனைத்தினதும் பெறுபேறுகளை அனுபவிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. நாடு பொருளாதார ரீதியில் நிலையான தன்மையினை அடைந்திருக்கின்றது. பொருட்களின் விலைகள் குறைந்து கொண்டு வருகின்றது. சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வீழ்ச்சியடைந்த தொழிற்சாலைகள் வியாபாரங்கள் மீண்டும் உயிர்பெற்று வருகின்றன. சுற்றுலாப் பயணிகளின் வருகையும், அந்நியச் செலாவணியின் கையிருப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. பொருளாதார ரீதியில் படுபாதாளத்தில் வீழ்ந்திருந்த நாட்டை, வங்குரோத்தடைந்த நாட்டை இந்தளவு குறுகிய காலத்தில் மீட்டெடுக்க முடிந்த உலக தலைவர் அவராகும். தற்போது ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் இந்தப் பதவியைக் கேட்டு நிற்கின்றனர். தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளாமல் தப்பி ஓடிய தலைவர்களைக் கொண்ட நாட்டுக்கு பதிலாக 39 பேர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நாட்டை உருவாக்க அவரால் முடிந்துள்ளது.
இப்போது ஜனாதிபதித் தேர்தலில் அவருக்குப் பதிலாக வேறு தலைவர் ஒருவர் ஏன் தெரிவு செய்யப்பட வேண்டும்? எதிர்க்கட்சிகள் தற்போது பல்வேறு கதைகளைக் கூறி வருகின்றன. அவர் இல்லாமல் தென்னம் மட்டை ஜனாதிபதியாக பதவியேற்றாலும் இப்பிரச்சினைகளை தீர்த்திருக்க முடியும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும், ஜனாதிபதி பதவியை நிராகரித்தபோது அந்தத் தலைவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் அடங்கிய வீடியோக்கள் வெளியே வந்ததோடு அந்தக் கதைகள் நின்று போயுள்ளது.
அவர் அரச நிறுவனங்கள், உள்ளுர் வளங்களை விற்பனை செய்வதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர். அரசாங்கத்தினால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட வர்த்தக நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பனை செய்வதை முதலில் ஆரம்பித்தது சஜித் பிரேமதாசாவின் தந்தையான ரணசிங்க பிரேமதாசாவாகும். அதன் பின்னர் அதிகமான நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டன. அது மக்கள் விடுதலை முன்னணியின் ஒத்துழைப்போடு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரிக்கா பண்டாரநாயக்காவினால் மேற்கொள்ளப்பட்டதாகும். சீனத் தலைவர் டெங் சியாவோ பிங் அரசு நிறுவனங்களை விற்று சோசலிசத்தின் மூலம் முதலாளித்துவப் பொருளாதாரத்தைக் கட்டமைத்தார். ரஷ்யாவில், புடின் நாட்டில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்களையும் விற்று ரஷ்ய பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பினார். ரணிலுக்கு மீதமிருப்பது சோசலிசத்தின் முன்னணித் தோழர்களும் இலங்கையின் புரட்சிகர ஜனாதிபதிகளும் கடைப்பிடித்த நடைமுறைகளே தவிர வேறு எதுவுமில்லை. மத்திய வங்கி கொள்ளையுடன் அவருக்கும் தொடர்புள்ளது என்பதே அவர் மீதுள்ள மற்றொரு குற்றச்சாட்டாகும். எனினும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான பாராளுமன்றக் குழுவினாலோ அல்லது நியமிக்கப்பட்ட எந்த ஒரு ஆணைக்குழுவினாலோ அவர் குற்றவாளியாக்கப்படவுமில்லை, அவர் அதற்கு உடந்தையாக இருந்ததாக எங்கும் குறிப்பிடப்படவுமில்லை. அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டாக இருப்பது பட்டலந்த இராணுவ முகாமில் மக்கள் விடுதலை முன்னணியின் அரசாங்க எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களுக்குத் தண்டனை வழங்கும் நிலையத்திற்கு அவர் ஒத்துழைப்பு வழங்கினார் என்பதாகும். சந்திரிகா பண்டாரநாயக்க பட்டலந்த ஆணைக்குழுவினை நியமித்தார்.
அந்த ஆணைக்குழு அவரை நிரபராதியாக விடுதலை செய்தது. எந்த நீதிமன்றத்திலும் அவருக்கு எதிராக எந்தவொரு முறைப்பாடுகளோ அல்லது உடந்தையாக இருந்தமை மற்றும் ஒத்துழைப்பு வழங்கியதாகவோ எந்த ஒரு வாக்குமூலமோ அல்லது எழுத்து பூர்வ குற்றச்சாட்டுகளோ முன்வைக்கப்படவில்லை.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள இரண்டு முக்கிய விடயங்களாக இருப்பது மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளாகும். எனினும் அவர் அரச நிதியினைத் துஷ்பிரயோகம் செய்து தனது சொத்துக்களை அதிகப்படுத்திக் கொண்டதாகவோ அல்லது அரச சொத்துக்களையோ ஏனைய உடமைகளையோ முறைகேடாக அபகரித்ததாகவோ எவரும் குற்றம் சாட்டவில்லை. இலஞ்சம் அல்லது ஊழல்கள் மூலம் அவர் பணம் சம்பாதித்ததாக எவருமே அவர் மீது குற்றம் சுமத்தவில்லை. ரணில் மிஸ்டர் கிளீனானார். இன்றும் அவர் மிஸ்டர் கிளீன்தான்.
மக்கள் நேசன்