Home » இலங்கை _ இந்திய ஒப்பந்தத்துக்கு எதிரானவர்கள் யார்?

இலங்கை _ இந்திய ஒப்பந்தத்துக்கு எதிரானவர்கள் யார்?

by Damith Pushpika
September 15, 2024 6:12 am 0 comment

இலங்கையில் மத்திய அரசாங்கத்தின் அதிகார பகிர்வை முன்நிலைப்படுத்திய மாகாண சபை நிருவாகம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு 37 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

வடக்கு, கிழக்கில் உரிமைக்காக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் பிரதிபலனாக மாகாண சபை நிருவாக முறை 13ஆவது அரசியல் திருத்தத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டில், ஆயுதம் தாங்கிய தமிழ் இளைஞர்களின் போராட்டம் மழுங்கடிக்கப்பட்ட போதும், தமிழர்களின் உரிமைக்கான குரல்கள் அரசியல் ரீதியாக தொடர்ந்தும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

அதன் ஒரு வடிவம்தான் தற்போதைய தமிழ் பொது வேட்பாளர், இருந்தும் இலங்கைத் தமிழர்களின் விசேடமாக தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைக்கும் சமத்துவ நிலைக்கும் நீதிகோரி, போராடும் தமிழ்த் தரப்பு இன்னும் அதன் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

இதற்குக் காரணம் தொலைநோக்கில்லாத தமிழ் பேசும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளேயாகும் என சிலர் குறை கூறுகின்றனர். உண்மையிலேயே இந்த யதார்த்த நிலையை புரிந்து கொள்வது முக்கியமாகும்.

தமிழ்த் தரப்பு இன்றும் போராடுவதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். உலக நாடுகளில் தயவைப் பெறுவதற்கான போராட்டக் குரல் இது என்று சிலர் கூறுகின்றனர். இது உண்மையா? இதற்காகவே தற்பொழுது நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் , அதன் மூலம் உலகுக்கு இலங்கைத் தமிழர்களின் நிலையை எடுத்துக் கூறப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தம் இலங்கை இந்திய சமாதான உடன்படிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டதாகும். 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி அப்போதைய இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி இதற்காக இலங்கை வந்தார். நாட்டின் ஜனாதிபதியாக அப்போது ஜே.ஆர். ஜயவர்தன இருந்தார். இந்த இரு தலைவர்களுக்கும் இடையில் இலங்கை – இந்திய சமாதான (Indo-Sri Lanka Peace Accord) உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த உடன்படிக்கை (13 வது திருத்தம்) 1987ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

உடன்படிக்கை கைச்சாத்திட்ட சமயத்தில் குறிப்பிடத்தக்க சர்வதேசத்தின் கவனத்திற்கு உள்ளான சம்பவம் இடம்பெற்றதை மறந்துவிட முடியாது. கொழும்புக்கு வருகை தந்திருந்த ரஜீவ் காந்திக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு அரச அணிவகுப்பு இடம்பெற்றது.

இதன்போது அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த கடற்படை வீரரான விஜித்த ரோஹண டீ சில்வா என்பவர் ரஜீவ் காந்தி மீது துப்பாக்கியால் தாக்கினார். இந்த கடற்படை வீரரின் உடல் அசைவை ரஜீவ் காந்தி அவதானித்து அதற்கமைவாக செயல்பட்டார்.

இதனால் அவரது தலையில் விழவிருந்த தாக்குதல், மாறி தோளில் விழுந்தது. உடனடியாக குறிப்பிட்ட கடற்பரை வீரர் பாதுகாப்பு படையினரால் கைதுசெய்யப்பட்டார். இவர் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில் தாம் திட்டமிட்டபடி ரஜீவ் காந்தியை கொல்ல நினைத்திருந்தால் அவரின் தலையின் மீதே துப்பாக்கியால் தாக்கியிருப்பேன் என்று விசாரணையின் போது தெரிவித்தார்.

முழு அளவிலான தாக்குதலை கட்டுப்படுத்தி அவரின் தலைக்கு பதிலாக தோளில் தாக்குதல் நடத்தியதை விசாரணையின் போது நியாயப்படுத்தினார். இதனைத் தொடரந்து 6 வருட கால சிறைத்தண்டனை இவருக்கு விதிக்கப்பட்டது.

நாட்டுப்பற்று மிக்க அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாச இந்த சிறைத்தண்டனையை இரண்டு வருடங்களுக்கு மட்டுப்படுத்தி ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அவரை விடுவித்தார்.

பின்னர் இவர் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சிங்கள உறுமய கட்சியின் கீழ் போட்டியிட்டார். இவருக்கு மறைமுகமான ஆதரவை ரணசிங்க பிரேமதாச வழங்கியதான குற்றச்சாட்டும் உண்டு. தேர்தலில் வெற்றிபெறத் தவறியபோதிலும் ஜோதிடக் கணிப்பில் வல்லவராக இவர் திகழ முயன்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தின் மூலம் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரமேதாசவின் ஆதரவு இந்த உடன்படிக்கைக்கு எப்படி அமைந்திருந்தது என்பதை உணர்ந்துகொள்ள முடியும். இதுமாத்திரமன்றி, சமாதான உடன்படிக்கையையடுத்து இந்திய சமாதானப்படை வடக்கில் வந்திறங்கியது.

இந்த படையை வெளியேற்றுவதில் ஜனாதிபதி ரணசிங்க பிரமேதாச முக்கிய பங்கு வகித்தார். இவரது பங்களிப்பு இதில் எந்தளவுக்கு அமைந்திருந்தது என்பதை அந்தக் காலப்பகுதியில் இலங்கையின் இந்தியத் தூதுவராக இருந்த Lakhan Mehrotra நன்கறிவார்.

இவர் எழுதிய My day in Sri Lanka என்ற நூலில் குறிப்பிட்டுள்ள விடயத்தையும் கவனத்தில் கொள்வது சிறந்தது. இந்தியப் படை இங்கிருந்து வெளியேறாவிட்டால் தாம் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தெரிவித்தாக அவர் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பிரேமதாசவின் பலவந்தத்திற்கு அமைவாக, இந்திய சமாதானப்படை 1989ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து வெளியேற ஆரம்பித்தது.

இவ்வாறான பின்னணியின் கீழ் தான் மாகாண சபை இலங்கை பாராளுமன்றத்தில் 1987ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் திகதி சட்டமாக்கப்பட்டது. 13ஆம் திருத்த சட்டத்தின் கீழ் தமிழும் சிங்களமும் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டன. ஆங்கிலத்திற்கு இணை மொழி அந்தஸ்தும் வழங்கப்பட்டது.

முதலாவது வடக்கு, கிழக்கு மாகாணத்துக்கான தேர்தல் 1988ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி நடைபெற்றது.

இதில் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி 41 இடங்களையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 17 இடங்களையும் கைப்பற்றியது.

இலங்கை – இந்திய சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு தனியான வரலாறு உண்டு. கடும் இந்திய எதிர்ப்புக்கு மத்தியிலேயே இதை அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன கைச்சாத்திட்டார்.

இந்திய பிரதமர் ரஜீவ்காந்தி உடன்படிக்கைக்காக இலங்கை வரப்போகின்றார் என்ற செய்தியைக் கேட்டு தலைநகர் கொழும்பில் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன.

இந்தியா தமிழர்களை இந்த உடன்படிக்கை மூலம் வஞ்சித்துவிட்டதாகவே பலரும் கருத்துத் தெரிவித்தனர். இந்த கருத்து நியாயமானதாகவே அப்பொழுது கருதப்பட்டது.

உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு முன்னர் பல்வேறு சுமைகளை வடக்கு – கிழக்கு மக்கள் அனுபவித்தனர். வடக்குப் பகுதியில் இந்தியா உணவுப் பொதிகளை விமானம் மூலம் போட்டதையும் குறிப்பிட வேண்டும்.

தொடர்ச்சியாக பேரினவாத சக்திகளின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த மலையக மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பேரினவாத சக்திகளை திருப்பித் தாக்கிய சம்பவமும் அன்று தான் இடம்பெற்றது.

ஹட்டனில் மலையக மக்களுக்கும் பேரினவாத சக்திகளுக்கும் இடையில் மோதல் நடைபெற்றது. தம்மை தாக்கிய பேரினவாதிகளை இவர்கள் திருப்பி தாக்கினார்கள். இந்த காலப்பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் இளைஞர் அணி தலைவராக மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.சந்திரசேகர் இருந்தார்.

தாக்குதல் உச்ச கட்டத்தை எட்டியதும் ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அப்போதைய அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான சௌமியமூர்த்தி தொண்டமான் அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டார்.

இரவு பகலாக அவர் செயற்பட்டதை என்னால் ஊகிக்க முடிந்தது. சம்பவம் நடந்த மறுதினம் நள்ளிரவு 12 மணியளவில் பேரினவாதிகளினால் தாக்குதல் நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து செய்திக்காக அவரிடம் தொடர்புகொண்டேன். அதற்கான உடனடி நடவடிக்கையை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவூடாக மேற்கொண்டதையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சௌமியமூர்த்தி தொண்டமான் இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கியமான இராஜதந்திர அரசியல்வாதியாக செயல்பட்டவர். அவர் தமது மக்களுக்காக முன்னெடுத்த பல நடவடிக்கைகளை இன்றும் நினைவுகூரத்தக்கது.

பேரினவாத அரசியல் கட்சிகள் அவர்களின் போக்கு தன்மைகளை நன்கு அறிந்தவர் அவர். இவரிடம் இலங்கை _ -இந்திய சமாதான உடன்படிக்கை கைச்சாத்திட்ட பின்னர் ஏற்பட்ட மாகாண சபை தொடர்பாக ஒருமுறை அவரிடம் கருத்துக் கேட்டேன்.

‘சிங்கள அரசியல்வாதிகள் வழங்க முன்வருவதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நமது எதிர்பார்ப்பு 10 ரூபாவாக இருக்கலாம். ஆனால் அதற்கு பதிலாக 5 ரூபாவை அவர்கள் கொடுத்தால். அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதிலிருந்து தான் படிப்படியாக தமது இலட்சியத்தை அல்லது தேவையை அணுக வேண்டும். பத்து ரூபாவை தா என்று அடம்பிடித்தால் அவர்களிடமிருந்து ஒன்றையும் பெற்றுக் கொள்ள முடியாது.இவ்வாறு தான் மலையக மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணமுடிந்ததையும் அவர் கூறினார்.

அதனால் தான் மாகாண சபையை ஏற்றுக் கொண்டு படிப்படியாக நமது இலக்கை நோக்கி முன்னேறுவதே சிறந்தது என்பது எனது கருத்தாகும் என்று சௌமியமூர்த்தி தொண்டமான் என்னிடம் அப்போது சுட்டிக்காட்டினார்.

சௌமியமூர்த்தி தொண்டமான் இலங்கையின் வரலாற்றில் அரசியல் ரீதியில் அவரும் அவர் சார்ந்த மக்களும் அனுபவித்த சிரமங்கள் பல. 1913ஆம் ஆண்டு பிறந்தவர் தொண்டமான். 1999ஆம் ஆண்டுவரையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக இருந்தது மாத்திரமல்ல 21 வருடங்கள் அமைச்சராகவும் இருந்தார். இந்தியாவின் புதுக்கோட்டையில் செல்வாக்குமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்.

பெற்றோரின் வருகையினால் இலங்கையில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்திய வம்சாவளி மக்களும் இலங்கை அரசாங்கங்களினால் சோல்பரி, டோனமூர் போன்ற ஆணைக்குழுக்களினால் அங்கீகரிக்கப்பட்ட பிரஜாவுரிமை அந்தஸ்த்தை இலங்கை அரசாங்கம் இல்லாது செய்தது.

(தொடரும்…)

1947ஆம் ஆண்டு இந்திய வம்சாவளியின் சார்பில் முதலாவது பாராளுமன்றத்தில் 8 பேர் அங்கத்துவம் வகித்தனர். இவர்களில் 6 பேர் இலங்கை- இந்திய காங்கிரசைச் சேர்ந்தவர்கள். அப்பொழுது இந்திய வம்சாவளியினருக்கு வாக்குரிமை இருந்தது.

1948, 1949ஆம் ஆண்டுகளில் இந்திய வம்சாவளியினருக்கான பிரஜா உரிமை இரத்து செய்வதற்கான சட்டம் கொண்டுவரப்பட்டது

1950ஆம் ஆண்டளவில் இந்த மக்கள் சார்பில் எந்தவொரு பிரதிநிதியும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை. எந்த கட்சி அரசாங்கம் பிரஜாவுரியை பறித்ததோ அதே கட்சி அரசாங்கத்திடமிருந்து அதனை பெற்றுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் நியமன எம்பியாக செயல்பட்ட வரலாறுகள் பல அவருக்க உண்டு. 1970ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்தனவுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிட்டார்.

மூன்று பாராளுமன்ற தொகுதியைக் கொண்ட நுவரெலியா – மஸ்கெலியா தொகுதியில் இருந்து 03ஆவது உறுப்பினராக தெரிவானார். பின்னர் அமைச்சரவையில் தொண்டமான் தனியொரு அமைச்சராக செயல்பட்டார்.

ஜே.ஆர். அரசாங்கத்துக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் ரணசிங்க பிரேமதாச 1989 ஆம் ஆண்டு போட்டியிட தயாரானார்.இதனை சாதகமாகப் பயன்படுத்தி தீர்வில்லாதிருந்த தமது மக்களின் பிரஜாவுரிமைக்கு இராஜதந்திரி ரீதியில் அவர் நடவடிக்கை மேற்கொண்டார். பதிவுப் பிரஜாவுரிமை பெறுவதற்கு விண்ணப்பிப்பது போன்ற சிரமங்களிலிருந்து பிரஜாவுரிமைப் பிரச்சினைக்கு நடைமுறையில் தீர்வுக்கு வழி வகுத்தார். அப்போது நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமது மக்கள் அனைவரும் ரணசிங்க பிரேமதாசவுக்கு வாக்களிப்பார்கள் என உறுதிமொழி தெரிவித்த தொண்டமான். அதில் வெற்றியும் பெற்றார். அமைச்சரவையில் தனியொரு அமைச்சராக இருந்த இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலும் பகிரங்கமாக கருத்து தெரிவித்தார். மோதல் உக்கிரமடைந்த நிலையில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவிடம் வடக்கு – கிழக்கு பிரதேச நிர்வாகத்தை 5 வருடங்களுக்கு கையளிக்குமாறும் கூறினார். அப்பிரதேச அபிவிருத்திக்கு நிதியை அரசாங்கம் வழங்கத் தேவையில்லையென்றும் அவர்களே சமாளித்துக் கொள்வார்கள் என்பதை துணிச்சலாகக் கூறியதையும் நாம் இன்றும் மறந்துவிடலாகாது.

இந்தநிலையில் தான் மாகாண சபை சட்டமாக்கப்பட்ட பின்னர், மாகாண சபையை பயன்படுத்தி எவ்வாறு வடக்கு – கிழக்கை அபிவிருத்தி செய்ய முடியும் என்பதையும் தமிழ் மக்கள் பிரச்சினைக்கு தீர்வாக முடியமென்பதையும் குறிப்பிட்டார்..

மாகாண சபை வடக்கு – கிழக்கை அடிப்படையாக ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும் முழுநாட்டின் 9 மாகாணங்களிலும் மாகாண சபை நிர்வாகம் இடம்பெற்றது. முதலமைச்சர்கள் செயல்பட்டனர். முதலமைச்சர்களுக்கான அமைப்பும் இருந்தது. இதனை சரியான முறையில் பயன்படுத்தி குறைக்ப்பட்ட அதிகாரங்களை மீண்டும் பெற்றுக் கொள்ளக் கூடிய பல சந்தர்ப்பங்கள் இருந்ததை தமிழ் தரப்பினர் ஏன் தவறவிட்டார்கள் என்பது தெரியவில்லை.

இந்திய மாநிலமான தமிழகத்திலும் அமரர் அண்ணாத்துரை போன்ற பழம்பெரும் அரசியல் வாதிகள் தனித் தமிழீழம் தொடர்பில் போராட்டம் மேற்கொண்டனர். இறுதியில் அதனைக் கைவிட்டனர். இன்று அம்மாநிலத்தின் வளர்ச்சியைக் கவனத்தில் கொள்வது மிகச் சிறந்தது. தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியாவின் மத்திய அரசாங்கத்தை குறைக் கூறிக்கொண்டே தமிழகத்தை அபிவிருத்திப்பாதையில் முன்னெடுக்கவில்லையா என்று சிலர் தெரிவிப்பதை புறந்தள்ளிவிட முடியாது.

மத்திய கிழக்கில் மூர்க்கத்தனமான தாக்குதல் நடக்கிறது.44 ஆயிரம் பேர் உயிரிந்துள்ளனர். யார் தடுத்தலும் இஸ்ரேலின் தாக்குதல் தொடருகிறது. மறுபுறத்தில் ரஷ்யா உக்ரைன் போர் வருடங்களாக தொடருகிறது. இந்த நிலையில் தமிழ் தரப்பு காலத்திற்கு ஏற்ற தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட வேண்டுமல்லவா.

ஏ.கே.எம்.பிள்ளை

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division