ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளருக்கு, இலங்கைத் தமிழரசு கட்சியின் பிரித்தானியாவுக்கான கிளை (ITAK UK Forum) தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது.
பிரித்தானிய கிளை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது “தமிழ் பொது வேட்பாளர் விடயம் தொடர்பாக ஐக்கிய இராச்சியத்திலுள்ள, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கிளையானது மாதாந்த கூட்டங்களில் பல தடவை விவாதித்தது.தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதில்லை என்ற முடிவை தமிழரசு கட்சியின் மத்திய குழு, எடுத்திருந்தது. எனினும் கட்சியின் மாவட்டக் கிளைகளுக்கு இடையே ஏற்பட்ட பல்வேறு கருத்து முரண்பாடுகளும், ஆதரவும், எதிர்ப்பும் போன்ற காரணங்களினால், தாயகத்திலுள்ள தமிழரசு கட்சியின் மாவட்ட கிளைகள் பெரும்பாலானவை மத்திய குழுவின் முடிவை நிராகரித்து, தமிழ் பொது வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பது என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். இந்நிலையில், தாயக மக்களின் பெரும்பான்மையினருடைய விருப்பினை கருத்திற் கொண்டும், புலம்பெயர்ந்து வாழ்கின்ற பெரும்பான்மை மக்களுடைய விருப்பினையும் கருத்திற் கொண்டும், இந்த விடயத்தை அறிவியல் பூர்வமாகவும், அரசியல் இராஜதந்திர நடைமுறைகளுக்கூடாகவும். தத்துவார்த்த ரீதியிலும் ஆராய்ந்து இந்த முடிவை எடுத்துள்ளோம்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.