நாட்டின் வறுமையை போக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம் அடித்தளம் இடுவோம் எனவும் “ஜனசவிய”, அஸ்வெசும”, “கெமிதிரிய”, “சமுர்த்தி” போன்ற வேலைத்திட்டங்களில் காணப்படுகின்ற சிறந்த விடயங்களை உள்ளடக்கி குறைபாடுகளை நிவர்த்தி செய்வோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று முன்தினம் (13) நடைபெற்ற சமூர்த்தி உத்தியோகத்தர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் இதனை தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிடுகையில், வறுமையை 24 மாதங்களுக்குள் ஒழிப்பதற்காக, மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபா வழங்குவதோடு, அதற்கு மேலதிகமாக மூலதனங்களையும் வழங்கி புதிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம். இந்த சந்தர்ப்பத்தில் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் வழங்குகின்ற சேவையை கௌரவமாக கருதுவோம். இந்த திட்டத்தை பலமாக முன்னெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவோம். சமுர்த்தி வேலைத்திட்டத்தை எவரேனும் வீழ்த்துவதற்கு முயற்சி செய்தால் அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.
சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு குறைபாடுகள் காணப்படுகின்றன. அவர்களின் பிரச்சினைகளுக்கு நாம் தீர்வை பெற்றுக்கொடுத்திருக்கின்றோம்.
பதவி உயர்வு குறைபாடுகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்போம். சமுர்த்தி கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டவர்களுக்கும் நியாயத்தை பெற்றுக்கொடுப்போம். அத்தோடு ஐக்கிய மக்கள் சக்தியின் வறுமை ஒழிப்பு வேலைத்திட்டம் பணம் வழங்கும் வேலைத்திட்டம் அல்ல. இதனூடாக வரியவர்களை வறுமையிலிருந்து மீட்கும் வேலைத்திட்டமாகும்.
அதற்காக சமுர்த்தி உத்தியோகத்தர்களின் பங்களிப்பானது மிகவும் முக்கியமானது என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.