Home » வாகன இறக்குமதி மீதான தடைநீக்கம்

வாகன இறக்குமதி மீதான தடைநீக்கம்

by Damith Pushpika
September 15, 2024 7:15 am 0 comment

வாகனங்கள் மற்றும் இயந்திரம் சாரா வாகன உதிரிப்பாகங்கள் இறக்குமதி மீதான தற்காலிக தடையை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்துடன் கூடிய நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார மீட்பு செயல்முறைக்கு இணங்க, நிதி அமைச்சின் பரிந்துரைகளுக்குட்பட்டு, எதிர்வரும் ஒக்டோபர் 01 முதல் மூன்று கட்டங்களாக இந்தத் தடை நீக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மீது ஏற்பட்டிருந்த அழுத்தத்தை முகாமைத்துவம் செய்யவதற்காக கடந்த 2020 ஆம் அண்டு மார்ச் மாதம் முதன் முதலில் விதிக்கப்பட்ட இந்தத் தடை மூலம், மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்குத் தேவையான அந்நியச் செலாவணியை நிர்வகிப்பதற்காக, அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், பொருளாதார மீட்சி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் சுற்றாடல் காரணிகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தடையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 304 HS குறியீடின் கீழ் வகைப்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் இயந்திரம் சாரா வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதற்கான அங்கீகாரம் மூன்று கட்டங்களில் செய்யப்படும். முதற்கட்டமாக பொதுப் போக்குவரத்துக்காக பாவிக்கப்படும் வாகனங்கள், விசேட கருமங்களுக்காக பாவிக்கப்படும் வாகனங்கள் மற்றும் ஏனைய மோட்டார் பாவிக்கப்படாத பொருட்களை ஒக்டோபர் 01 திகதி முதல் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. இரண்டாவது கட்டமாக டிசம்பர் 01 திகதி தொடக்கம், வர்த்தக ரீதியான அல்லது பொருட்களை ஏற்றிச்செல்லும் கருமங்களுக்காக பாவிக்கப்படும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கும் அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டமாக தனிப்பட்ட பாவனைக்காக பாவிக்கப்படும் கார், வேன், ஸ்போட் யூட்டிலிற்றி வாகனங்கள், பிக்கப் வாகனங்கள் போன்றவை அடுத்தாண்டு 2025 பெப்ரவரி மாதம் 01 திகதி தொடக்கம் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அமைச்சவை அனுமதி வழங்கியுள்ளது.

விதிக்கப்பட்ட தடையை படிப்படியாக நீக்குவது மூலம், இந்நாட்டின் வாகன தொழிற்றுதுறைக்கு புத்துயிர் அளிப்பதோடு, பொருளாதாரத்தையும் மீட்டெடுக்கவும் பழைய வாகனங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் எரிபொருள் செயற்றிறனின்மையைக் குறைத்தல் மற்றும் பராமரிப்புச் செலவு அதிகரிப்பைக் கட்டுப்படுத்துதல் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க இது உதவும் எனவும் அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறக்குமதி கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டதன் காரணமாக, இலங்கையில் தற்போது அதிகளவான பழைய வாகனங்கள் எஞ்சியிருப்பதுடன், எரிபொருள் செயற்றிறனின்மை காரணமாக வீதி பாதுகாப்பு மற்றும் அதன் மூலம் ஏற்படும் சுற்றாடல் பாதிப்புகள் தொடர்பான பிரச்சினைகளும் எழுந்துள்ளன. வாகன இறக்குமதி சம்பிரதாயமாக முக்கிய வருமான ஆதாரமாக இருப்பதனால், புதிய வாகன இறக்குமதியை அனுமதிப்பதனூடாக பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அரச வருமானத்தை அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வாகன இறக்குமதியானது நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் அந்த நிலைமையை முகாமைத்துவம் செய்ய வாகன இறக்குமதிக்கு மேலதிக சுங்க வரி விதித்தல் போன்ற நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையும் கையெழுத்திட்டுள்ள பெரிஸ் சாசனத்தில் உள்ளடங்கிய ‘தேசிய ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை (NDCs)’ பூர்த்தி செய்வதற்கான தற்போதைய அர்ப்பணிப்பும், 2050 ஆம் ஆண்டுக்குள் ‘பூஜ்ஜிய உமிழ்வு நிலையை’ அடைவதற்கான தற்போதைய இலக்கும், இந்த முடிவை எடுப்பதில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. புதிய வாகன இறக்குமதிக் கொள்கையின் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, Euro 4 முதல் Euro 6 வரையிலான தரநிலைக்கு மாறுவதன் மூலம் வாயு உமிழ்வு தரநிலைகளுக்கு இணங்குவதும் அவசியமாகும்.

இதன்மூலம் மின்சக்தி வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 2029 ஆம் ஆண்டளவில், பெற்றோல் அல்லது டீசலில் இயங்கும் முச்சக்கர வண்டிகளை இறக்குமதி செய்வதை தடைசெய்து, தற்போதுள்ள வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றுவதும் ஊக்குவிக்கப்படும். நாட்டில், ஒவ்வொரு வருடமும் சராசரியாக 30,087 வீதி விபத்துக்கள் (முதன்மையாக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள்) ஏற்படுவதுடன், அவற்றைக் குறைக்கும் முயற்சியில் அரசாங்கத்தின் வாகன இறக்குமதிக் கொள்கைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் உள்ளடக்கப்படுள்ளது.

இந்த புதிய கட்டமைப்பின் கீழ், வாகன இறக்குமதி புதிய மாதிரிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. அதாவது, உற்பத்தி செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு குறைந்த மற்றும் விளையாட்டு சார்ந்த வாகனங்கள் (SUVs) போன்றவை உற்பத்தி செய்யப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்த பொதுப் போக்குவரத்து மற்றும் வர்த்தக செயற்பாட்டு வாகனங்களுக்கான தடை நீக்கப்படும். சிறப்பு செயற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் 10 ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கலாம். மேலும், இறக்குமதியாளர்கள் இந்த வாகனங்களை இறக்குமதி செய்த 90 நாட்களுக்குள் பதிவு செய்து விற்பனை செய்ய வேண்டும் மற்றும் தாமதத்திற்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், வாகன மற்றும் உதிரிப் பாகங்கள் இறக்குமதி செய்பவர்கள், வாகன ஒன்றிணைப்பாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஒழுங்குபடுத்துவதற்காக வருடாந்த அனுமதிப் பத்திரம் வழங்கும் முறையும் அறிமுகப்படுத்தப்படும்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division