இலங்கையின் நீண்ட கால அபிவிருத்தி பங்காளிகளில் ஒன்றான அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் (SFD) 50ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த முதலாம் திகதி (01.09.2024) ரியாதிலுள்ள ரிட்ஸ் கார்ல்டன் ஹோட்டலில் நடைபெற்றது. அதில் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் பங்கேற்றார். இந்நிகழ்வில் கிங் பைஸல் நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபகரும் நம்பிக்கையாளருமான இளவரசர் துர்கி பின் பைசல் அல் சௌத் சிறப்புரை நிகழ்த்தினார்.
SFD நிறுவனம் 1974ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, சவூதி அரேபியாவின் முக்கிய சர்வதேச மேம்பாட்டுக்கான பிரிவாகும். மேலும் இந்த ஆண்டு “ஐந்து தசாப்த கால பூகோள மாற்றத்தின் வெற்றிப்பாதை” எனும் கருப்பொருளின் கீழ் அதன் ஐந்து தசாப்த கால நிலையான சர்வதேச அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்தை கொண்டாடுகிறது. பின்தங்கிய சமூகங்கள் மற்றும் நாடுகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், வளர்ந்து வரும் நாடுகளில் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியளிக்கும் நோக்கில் SFD கடன்கள் மற்றும் மானியங்களை வழங்குகிறது.
அபிவிருத்திக்கான சவூதி நிதியம் பல தசாப்தங்களாக அபிவிருத்தி உதவியாக இலங்கைக்கு 1.5 பில்லியன் சவூதி ரியால் ($ 438 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான சலுகைக் கடன் உதவிகளை வழங்கியுள்ளது. கொழும்பு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர்த் திட்டம் (1981), கிண்ணியா பாலம் (இலங்கையின் மிக நீளமான பாலம்), கொழும்பு தேசிய வைத்தியசாலையில் Neuro Trauma பிரிவு (Nero Trauma unit), களுகங்கை அபிவிருத்தித் திட்டம், சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கான மருத்துவ பீடம், வயம்ப பல்கலைக்கழக டவுன்ஷிப், பேராதனை – பதுளை – செங்கலடி வீதிகள் நிர்மாணம் உள்ளிட்ட பதினைந்துக்கு மேற்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு SFD உலகளாவிய அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் நிதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
SFD இன் இந்த வரலாற்று நிகழ்வில் பங்கேற்ற தூதுவர் அமீர் அஜ்வத், இரு புனித ஸ்தலங்களின் பாதுகாவலர் மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் அவரது முடிக்குரிய இளவரசரும் சவூதி அரேபியாவின் பிரதமருமான மொஹமட் பின் ஸல்மான் ஆகியோருக்கு, இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு வழங்கிவரும் உதவிகளுக்காக இலங்கை அரசாங்கத்தின் நன்றியைத் தெரிவித்தார்.
SFD இன் தலைவர் மற்றும் சவூதி அரேபியாவின் சுற்றுலா அமைச்சர் அஹ்மத் அகீல் அல்-கதீப், SFD இன் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் அப்துல் ரஹ்மான் அல்-மர்ஷாத் மற்றும் SFD இன் முன்னாள் துணைத் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான பொறியாளர் யூசுப் பின் இப்ராஹிம் அல்-பஸ்ஸாம் ஆகியோர் கடந்த காலங்களில் இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு வழங்கிய உதவிகளுக்காகவும் தூதுவர் அமீர் அஜ்வத் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் இலங்கை அரசாங்கத்திற்கும் SFD நிறுவனத்துக்கும் இடையிலான இணைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான பங்களிப்பை நல்குவதாக தூதுவர் உறுதியளித்தார்.
மாபெரும் Gala Dinner உடன் கூடிய 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு SFD நிறுவனம் ஒழுங்கு செய்த இந்நிகழ்வில் அமைச்சர்கள், பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், தூதர்கள், ஐக்கிய நாடுகள் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து சிறப்பித்தனர்.