ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் ஆறு தினங்களே உள்ளன. எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை காலையில் வாக்களிப்பு ஆரம்பமாகின்றது. இத்தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் இறுதிக்கட்டப் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றனர். எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்பது தேர்தல்கள் ஆணையத்தின் உத்தரவு ஆகும்.
கடந்தகால ஜனாதிபதித் தேர்தல்களைப் போல் அல்லாமல் இம்முறை நடைபெறுகின்ற தேர்தல் விறுவிறுப்பாக உள்ளது. முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு பெருமளவு வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிடுவதால் தேர்தல் களம் மிகுந்த பரபரப்பாகவே உள்ளது.
வேட்பாளர்கள் தத்தமது எதிர்த்தரப்பினரைத் தாக்குவதும், வாக்குறுதிகளை அள்ளிவீசுவதுமான சூடான செய்திகளுடன் ஊடகங்களும் பரபரப்பாகவே காணப்படுகின்றன. எதிர்த்தரப்பினர் வழங்குகின்ற வாக்குறுதிகளைப் பார்க்கின்ற போது இவ்வாக்குறுதிகளெல்லாம் நிறைவேற்றப்படுவது சாத்தியமாகுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது.
மக்கள் மீதான வரிச்சுமையை நீக்கப் போவதாக எதிரணியினர் கூறி வருகின்றனர். ஆனால் பொருளாதாரத்தில் வீழ்ச்சியுற்றிருக்கும் எமது நாட்டில் வரிகளைக் குறைத்துவிட்டு எவ்வாறு அரசுக்குரிய வருமானத்தை ஈட்டுவது? அரச வருமானமின்றி மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றுவது?
மக்கள் மத்தியில் தோன்றுகின்ற இவை போன்ற வினாக்களுக்கெல்லாம் எதிரணியினர் விளக்கம் அளிப்பதாக இல்லை. எனவே இவ்வாக்குறுதிகள் யாவும் காற்றில் பறந்துவிடும் என்பதுதான் மக்களின் சந்தேகம்!
தேர்தல் களநிலைமை இவ்வாறிருக்கையில், இம்முறை தேர்தலில் வன்முறை சம்பவங்கள் மிகவும் அரிதாகவே உள்ளமை ஆச்சரியமளிக்கின்றது. இம்முறை தேர்தலில் பலதரப்புகள் மோதிக் கொள்வதால்தான் வன்முறைகள் அரிதாக உள்ளதாகத் தெரிகின்றது. முன்னைய தேர்தல்களில் இருதரப்புக்கு இடையே மாத்திரமே போட்டி இருப்பதுண்டு. ஆனால் இம்முறை நிலவுவது பலமுனைப் போட்டி!
ஒருபுறம் தேசிய ஊடகங்கள், சமூக ஊடகங்கள் போன்றனவெல்லாம் களநிலைவரங்களை பலவிதமாக வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் மக்கள் இப்போதெல்லாம் மிகுந்த பக்குவம் நிறைந்தவர்களாக உள்ளனர். உண்மையையும் போலிகளையும் பிரித்தறிகின்ற ஞானம் கொண்டவர்களாக மக்கள் உள்ளனர். கடந்தகால அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளையும் அவற்றிலிருந்து மீண்டு வந்த பாதையையும் நன்கு அறிந்து கொண்டவர்களாக மக்கள் உள்ளனர். வீராவேசப் பேச்சுக்களில் ஏமாந்து வாக்களிக்கும் நிலைமையில் மக்கள் இல்லையென்பதுதான் உண்மை!