2024ஆம் ஆண்டு சர்வதேச அரசியலில் ஓர் ஜனநாயகத் திருவிழா காலமாகவே அவதானிக்கப்படுகின்றது. நடைமுறை அரசியலில் ஜனநாயகத்தின் பிரதிபலிப்பு என்பது தேர்தல்களை மையப்படுத்தியே கட்டமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் 49 சதவீதமான மக்கள், ஆகக் குறைந்தது 62 நாடுகள், இந்த வருடம் தேர்தலை எதிர்கொள்கின்றன. குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் என உலகின் பல பகுதிகளும் தேர்தலை ஒட்டிய உரையாடல்களிலும், அரசியல் மாற்றங்களிலும் அதிக கவனத்தை குவித்துள்ளன. இந்த கவனக்குவிப்பில் எதிர்வரும் நவம்பர்- 5ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலும், 2025ஆம் ஆண்டு ஜனவரி- 20ஆம் திகதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளவர் தொடர்பிலான தேடலும் முதன்மை பெறுகின்றது. உலகப் பார்வையில் உலக ஒழுங்கு மாற்றம் பல் துருவ உலக ஒழுங்கு பற்றிய வாதங்களும் தேடல்களும் அதிகமாகின்ற போதிலும், அமெரிக்காவின் முதன்மை தொடர்ச்சியானதாகவே அமைகின்றது. இந்த பின்னணியிலேயே அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளில் தாக்கம் செலுத்தக் கூடிய ஜனாதிபதி வேட்பாளர்களின் விவாத பிரசாரம் சர்வதேச அளவில் பின்தொடரப்படுகின்றது. அறிவியல் தளத்திலும் மறுசீரமைப்பு ஜனநாயகமாக ஆய்வுகள் விரிவுபடுத்தப்படுகின்றன. இக்கட்டுரை அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் மற்றும் ரொனால்ட் ட்ரம்ப் பங்கு பற்றிய விவாத பிரசார அரசியலின் தாக்கத்தை விளைவை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அறுபதாவது ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரொனால்ட் ட்ரம்பிற்கும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸிற்கும் இடையிலான முதலாவது ஜனாதிபதி வேட்பாளர் விவாத பிரசாரம் செப்டம்பர்- 10 அன்று பிலடெல்பியா எனும் இடத்தில் இடம்பெற்றது. 90 நிமிடங்கள் இடம்பெற்ற விவாதம், வழமையான சம்பிரதாயபூர்வமான முறையில் இரு வேட்பாளர்களின் கைகுலுக்கலுடன் ஆரம்பித்து, கொதிநிலையான களத்தை உருவாக்கி இருந்தது. குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ரொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே 2017–2020 காலப்பகுதியில் அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக இருந்துள்ளார். இந்நிலையில் அவரது கடந்த கால ஆட்சி இயல்பு, அவரது நடத்தை தொடர்பாக அதிக விமர்சனங்களையும் குற்றசாட்டுகளையும் கமலா ஹாரிஸ் தனது வாதத்தில் தொகுத்திருந்தார். மறுமுனையில் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் நடப்பு நிர்வாகத்தில் துணை ஜனாதிபதியாக உள்ளார். இந்நிலையில் சமகால பொருளாதார பலவீனங்கள், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவின் வெளியேற்றம் தொடர்பான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் ரொனால்ட் ட்ரம்ப் தொகுத்திருந்தார். ஒப்பிட்டளவில், ரொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த குற்றச்சாட்டுகளிலிருந்து கமலா ஹாரிஸ் தன்னை தற்பாதுகாத்துக் கொண்டதாகவும், எனினும் கமலா ஹாரிஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகளிலிருந்து ரொனால்ட் ட்ரம்பால் பாரியளவில் தன்னை தற்பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை என்பதும் முதலாவது விவாதத்தின் சாரம்சமாக சர்வதேச அரசியல் அவதானிகளால் குறிப்பிடப்படுகின்றது.
ஆரம்பத்தில் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் களமிறங்குவது தொடர்பில் உரையாடப்பட்டது. இச்சூழலில் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு பிரேரிக்கப்பட்ட ரொனால்ட் ட்ரம்புக்கு சாதகமான வாய்ப்புகள் சர்வதேச அரசியல் அவதானிகளால் முன்வைக்கப்பட்டன. கருத்துக் கணிப்புகளும், எதிர்பார்ப்புகளும் ரொனால்ட் ட்ரம்பின் வெற்றி சார்ந்தே அமைந்திருந்தது. ரொனால்ட் ட்ரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு, அவருக்கு எதிரான தீர்ப்பை வழங்கியிருந்தது. இருந்தபோதிலும் பைடனின் முதுமை மற்றும் நிர்வாகப் பலவீனங்கள் ட்ரம்பிற்கு சாதகமான சூழலை அடையாளப்படுத்தியது. எனினும் பைடனின் திடீர் பின்வாங்கலும், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரேரிக்கப்பட்டமையும் கருத்துக்கணிப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் முரண்நிலைக்கு தள்ளியது. ஜனநாயக கட்சிக்கு சாதகமான உரையாடல் எழுச்சி பெற்றது. குடியரசு கட்சியின் உறுப்பினர்களிடையே ட்ரம்புக்கு எதிர்ப்பாகவும், கமலா ஹாரிஸிற்கு ஆதரவாகவும் குழுக்கள் உருவாகி உள்ளன. ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஜனநாயக கட்சியின் மாநாட்டில், 200க்கும் மேற்பட்ட குடியரசு கட்சியினை சாந்தவர்கள் கமலா ஹாரிஸிற்கான தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்கள். இதில் குடியரசுக்கட்சியின் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளான சீனியர் புஷ், ஜுனியர் புஷ் மற்றும் குடியரசுக்கட்சியின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர்களான செனட்டர் மிட் ரோம்னி, மறைந்த செனட்டர் ஜொன் மெக்கெய்ன் ஆகியோருக்காக பணிபுரிந்தவர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் நிகழ்ந்துள்ள முதலாவது விவாதத்தில் கமலா ஹாரிஸின், அவர் சார்ந்த பார்வையை மேலும் உயர்த்தி உள்ளது. இதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகிறது.
முதலாவது, முன் அனுபவம் இல்லாத கமலா ஹாரிஸின் விவாத பிரசாரம் அவரது ஆலோசகர் இடையே மிகுந்த ஆர்வத்தினையும் சந்தேகத்தினையும் ஏற்படுத்தியிருந்தது. ஜனாதிபதி விவாதத்தில் தொடர்ச்சியாக இரண்டு முறை பங்குபற்றியுள்ள அனுபவம் வாய்ந்த ரொனால்ட் ட்ரம்பை எதிர்கொள்வது, கமலா ஹாரிஸிற்கான வாய்ப்பை குறைவாகவே நோக்கும் சூழலை ஏற்படுத்தியிருந்தது. எனினும் கமலா ஹாரிஸின் ஆக்ரோஷமான பேச்சுக்கள் அவரது அடிமட்ட ஆதரவாளர்களுக்கு உற்சாகமூட்டியுள்ளது. விவாதத்தின் பிறகு அமெரிக்காவின் பிரபல பாடகி ரெய்லர் ஸ்விப்ற் (Taylor Swift) கமலா ஹாரிஸிற்கான தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார். இதனை தொடந்து ஜனநாயக கட்சியின் விளம்பர பதாகைகளில் ஸ்விப்றின் படமும் இணைக்கப்பட்டுள்ளது. ரைம்ஸ் ஸ்குவார் (Times Square) எண்கணிய விளம்பர பதாகையில் ஸ்விப்ற் யுக சுற்றுலா என்ற தலைப்பில் ‘’நாங்கள் எங்கள் கமலா யுகத்தில் இருக்கிறோம்’ என்ற சொற்றொடர் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்விப்ற் ரொனால்ட் ட்ரம்புடன் வர்த்தக உறவை கொண்டிருந்தமையும், கமலா ஹாரிஸிற்கான ஆதரவை தொடர்ந்து அது விலக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது, முதலாவது விவாதத்தின் பின்னர் கமலா ஹாரிஸின் பிரசார அரங்குகளில் கணிசமான ஆதரவு அதிகரித்துள்ளது. குறிப்பாக வடக்கு கரோலின் மாநிலத்தில் 2008ஆம் ஆண்டு பராக் ஒபாமா பெற்ற வெற்றியே, ஜனநாயக கட்சியினரின் இறுதி வெற்றியாக அமைகின்றது. கடந்த மூன்று ஜனாதிபதி தேர்தல்களிலும் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளருக்கே ஆதரவளித்து வருகின்றனர் மக்கள். இம்முறை கமலா ஹாரிஸின் வடக்கு கரோலினா பிரசார அரங்கின் திரள் ஜனநாயக கட்சிக்கான சாதக சூழலையே அடையாளப்படுத்துகிறது. விவாத பிரசாரத்திற்கு பிறகு கடந்த வியாழன் வடக்கு கரோலினாவில் வில்க்ஸ்-பார் (Wilkes-Bar), கிரீன்ஸ்போரோ (Greensboro) மற்றும் சார்லோட் (Charlotte) ஆகிய நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட கமலா ஹாரிஸின் பிரசாரங்களில் மணிக்கணக்கில் மக்கள் காத்திருந்தனர். பிரசார அரங்கு வழமைக்கு மாறாக அதிகளவில் நிரம்பியிருந்தது. இது முதலாவது விவாதத்தில் கமாலா ஹாரிஸ் தன் நிலையை உயர்த்தியுள்ளமையையே உறுதி செய்கிறது.
மூன்றாவது, விவாதத்திற்கு பின்னரான கருத்துக்கணிப்புகள் ஹாரிஸின் உணர்வை சுட்டிக்காட்டுகின்றன. Reuters/Ipsos-இன் விவாதத்திற்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு, பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 47 சதவீதம் முதல் 42 சதவீதம் வரை ஹாரிஸ் முன்னிலை வகிக்கிறார். பதிலளித்தவர்களில் சுமார் 49 சதவீதம் பேர் ஹாரிஸ் “நான் சொல்வதைக் கேட்டு என் கவலைகளைப் புரிந்துகொள்பவர் போல் தோன்றினார்” என்று கூறியுள்ளனர். ட்ரம்பை 18 சதவீதமானவர்களே அவ்வாறு பார்த்துள்ளனர். துணைத் தலைவரைப் பற்றி இன்னும் அதிகம் தெரியாத அல்லது தேர்தலைச் சந்திக்கும் வாக்காளர்களை வற்புறுத்துவதற்கான ஒரு முக்கியமான வழி என்று ஹாரிஸ் பிரச்சாரம் பார்க்கிறது. இந்த வாரம் அவர்களின் அனைத்து செய்திகளிலும், ஹாரிஸ் பிரசாரம் துணை ஜனாதிபதியின் செய்தியை இயக்க முயற்சிக்கிறது. அவரது புதிய விளம்பரம், தனது விவாதத்தின் இறுதி அறிக்கையின் வரிகளைக் கொண்டிருந்தது. அங்கு அவர் ஒரு வழக்கறிஞராக இருந்தபோது, பாதிக்கப்பட்ட ஒருவரையோ அல்லது ஒரு சாட்சியை அவர்கள் குடியரசுக் கட்சியா அல்லது ஜனநாயகவாதியா என்று ஒருபோதும் கேட்கவில்லை என்று பார்வையாளர்களிடம் கூறினார். தன்னை அனைவருக்குமானவராக ஹாரிஸ் விம்பப்படுத்துவது, சாதகமான வாய்ப்பை உருவாக்குகிறது.
எனவே, ரொனால்ட் ட்ரம்ப் எதிர் கமலா ஹாரிஸ் என்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டி கணிசமாக ஹாரிஸ் பக்கம் திரும்பும் சூழமைவையே, விவாதத்திற்கு பின்னரான நிகழ்வுகளும் செய்திகளும் வெளிப்படுத்துகின்றன. அமெரிக்க ஊடகங்களும் பகுதியளவில் ஹாரிஸிற்கான ஆதரவு சமிக்ஞையை வெளிப்படுத்துவதையே செய்திகள் புலப்படுத்துகின்றன. விவாதம் ஹாரிஸிற்கான நிலையை உயர்த்தியுள்ள போதிலும், சில அரசியல் அவதானிகள் குறைகளையும் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக, ட்ரம்பைத் தாக்குவதில் தீவிரமாகவும் சளைக்காமல் இருப்பதன் மூலமாக, தன்னை அறியாத வாக்காளர்களுக்கு தன்னை இன்னும் முழுமையாக வரையறுத்துக்கொள்வதில் குறைவான கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க மாண்பை மாற்றுகிறது என்ற விசனமும் அரசியல் விமர்சகர் மத்தியில் முன்வைக்கப்பட்டுள்ளது.