Home » இஸ்ரேலில் பொதுவேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டங்கள், ஊர்லங்கள்!
கைதிகள் பரிமாற்றத்துக்கான யுத்தநிறுத்தத்துக்கு வலியுறுத்தல்;

இஸ்ரேலில் பொதுவேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டங்கள், ஊர்லங்கள்!

by Damith Pushpika
September 8, 2024 6:12 am 0 comment

இஸ்ரேலில் கடந்த ஞாயிறன்று (01.09.2024) பாரிய ஆர்ப்பாட்டத்திற்கும் பொதுவேலைநிறுத்தத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இஸ்ரேலின் மிகப்பெரிய தொழிற்சங்கமான ஹிஸ்டாட் ரூட் தொழிற்சங்கத்தினர், பணயக் கைதிகளின் உறவினர்கள் மற்றும் நலன்கள் குறித்த சங்கம், எதிர்க்கட்சித் தலைவர் யர் லபிட் ஆகியோர் இவ்வழைப்பை விடுத்தனர்.

அதற்கேற்ப டெல் அவிவ் நகரில் கூடிய இஸ்ரேலியர்கள், ‘ஹமாஸ் பிடியிலுள்ள பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையில் உடனடி யுத்தநிறுத்த உடன்படிக்கையை ஹமாஸுடன் மேற்கொள்ளுமாறு கோரியதோடு, பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தையும் முன்னெடுத்தனர். மறுநாள் திங்கட்கிழமை பொதுவேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டனர்.

ஹமாஸின் பிடியிலுள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 06 பேர் கொல்லப்பட்ட நிலையில், காஸாவின் ரபாவிலுள்ள சுரங்கப்பாதையொன்றில் கடந்த 31 ஆம் திகதி மாலையில் இஸ்ரேலிய படையினரால் கண்டெடுக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்தே இக்கொதிநிலை ஏற்பட்டது.

இந்நிலையில் பணயக் கைதிகளின் உறவினர்கள், தங்கள் உறவினரை மீட்டுத் தருமாறு கோரி ஆட்சியாளர்களுடனும் பாதுகாப்புத் தரப்பினருடனும் சந்திப்புக்களை நடத்தினர். ‘உயிருடன் மீட்டுத் தருவோம் என நம்பிக்கை அளிக்கப்படுகின்ற போதிலும், உறவினர்கள் வீடு திரும்புவதாக இல்லை. இந்தச் சூழலில் யுத்தத்தை நிறுத்தி ஹமாஸிடம் பணயக் கைதிகளாக உள்ள எமது உறவினர்களை மீட்டுத் தாருங்கள்’ எனக் கோரி அவர்களது உறவினர்கள் டெல்அவிவ்விலும் ஏனைய நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்தத் தொடங்கினர்.

அந்த வகையில் கடந்தாண்டு ஒக்டோபர் 07 ஆம் திகதி முதல் இவ்வருடம் ஓகஸ்ட் 30 ஆம் திகதி வரையும் 1240 ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் இஸ்ரேலில் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பணயக் கைதிகளை மீட்கும் வகையில் காஸாவில் யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்திருந்தன.

இந்த ஆர்ப்பாட்டங்கள் டெல் அவிவில் மாத்திரமல்லாமல், இஸ்ரேலின் ஏனைய நகர்களிலும் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 336 ஆர்ப்பாட்டங்கள் கடந்த ஜுலை மாதம் மாத்திரம் டெல்அவிவில் இடம்பெற்றுள்ளன.

காஸாவில் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துவதையும் ஹமாஸ் பிடியிலுள்ள பணயக் கைதிகளை விடுவிப்பதையும் நோக்காகக் கொண்டு கடந்த பத்து மாதங்களாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் நிமித்தம் கட்டார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் உச்சபட்ச முயற்சிகளை மேற்கொள்கின்றன. என்றாலும் ஒவ்வொரு பேச்சுவார்த்தையிலும் இஸ்ரேல் தரப்பில் முன்வைக்கப்படும் நிபந்தனைகள் யுத்தநிறுத்த இணக்கப்பாட்டை தாமதப்படுத்தி பின்னடைவுக்கு உள்ளாக்குவதாக ஹமாஸ் அண்மைக்காலமாக குற்றஞ்சாட்டுகிறது.

‘எங்கள் பிடியிலுள்ள பணயக் கைதிகளை விடுவிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் இஸ்ரேலிய சிறைகளிலுள்ள பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். அதற்கான உடன்பாட்டுக்கு தயாராக உள்ளோம்’ என்று குறிப்பிடுகின்ற ஹமாஸ், ‘காஸாவில் நிரந்தர யுத்தநிறுத்தம் அவசியம், காஸாவில் இருந்து இஸ்ரேலியப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும்’ ஆகிய கோரிக்கைகளையும் பிரதானமாக முன்வைத்து வருகின்றது.

இஸ்ரேலோ தற்காலிக யுத்தநிறுத்தத்திற்கு தயார் என்றும் முழுமையாக படைகளை வெளியேற்ற முடியாது என்றும் குறிப்பிட்டு வருவதோடு, பிடடெல்பி மற்றும் நெட்சாரிம் நுழைவாயில்களில் இருந்து வெளியேற முடியாது என்ற நிபந்தனையை கடந்த இரண்டொரு வாரங்களாக முன்வைத்து வருகிறது.

இரண்டு தரப்பினரும் தத்தமது நிபந்தனைகளில் விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காத வகையில் உறுதியாக உள்ளனர். அதனால் காஸா யுத்தநிறுத்த உடன்பாட்டை எட்டுவதில் தொடர்ந்தும் தாமதநிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் பணயக்கைதிகளின் உறவினர்களில் சிலர், ‘எங்கள் உறவினர்களை நாங்கள் மீட்டு வருகிறோம்’ எனக் குறிப்பிட்டு கடந்த 29 ஆம் திகதி காஸாவுக்குள் பிரவேசித்தனர். அதற்கு இஸ்ரேலியப் படையினர் அனுமதி வழங்கவில்லை. அதேநேரம் காஸாவில் தாக்குதல்கள் குறைந்ததாகவும் இல்லை.

இவ்வாறான சூழலில்தான் ஹமாஸ் பிடியிலுள்ள பணயக்கைதிகளில் ஆறு பேரும் சுரங்கப்பாதையொன்றில் பிரேதங்களாக மீட்கப்பட்டிருக்கின்றனர். இதனை இஸ்ரேலிய இராணுவமும் உறுதிப்படுத்தியது. இப்பணயக் கைதிகளை ஹமாஸ் படுகொலை செய்துள்ளதாகக் குறிப்பிட்ட இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவர்களை உயிருடன் மீட்டெடுக்கக் கிடைக்காததற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். இவர்கள் கொல்லப்பட காரணமான ஹமாஸ் கடும் விலை கொடுக்க வேண்டிவரும்’ என்று இஸ்ரேலிய தொலைக்காட்சியொன்றுக்கு பேட்டியளித்த போது எச்சரித்தார்.

ஆனால் ஹமாஸின் சிரேஷ்ட அதிகாரி இஸத் அல் ரிஷேக், ‘இப்பணயக்கைதிகளும் அவர்களுக்கு பாதுகாப்புக்காக இருந்தவர்களும் இஸ்ரேலிய விமானத்தாக்குதலில் கொல்லப்பட்டனர்’ என்று சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ‘பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இஸ்ரேலிய பிரதமர் போதுமான அளவு செயல்படவில்லை’ என்று வெள்ளை மாளிகை செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான பின்புலத்தில் இஸ்ரேலில் எட்டு இலட்சம் அங்கத்தவர்களைக் கொண்ட ஹிஸ்டாட்ரூட் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் அர்னான் பார்-டேவிட், ‘பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தத்தை அதிகரித்து, காஸாவில் உள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதே இந்நடவடிக்கையின் இலக்கு’ என்றுள்ளார்.

அதற்கேற்ப இஸ்ரேலின் மிகப் பெரிய 200 தனியார் வர்த்தக நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இஸ்ரேல் வர்த்தக மன்றம், இஸ்ரேலிய தொழில்நுட்ப நிறுவனங்கள், பெங்கூரியன் சர்வதேச விமான நிலையம், இஸ்ரேலின் பிரதான சர்வதேச போக்குவரத்து மையம், இஸ்ரேலிய சட்டத்தரணிகள் சங்கம், ஆசிரியர்கள் சங்கம், ஜெரூஸலம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து பல்கலைக்கழகங்களின் தலைவர்கள், இஸ்ரேலிய உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினரும் இந்த பொது வேலைநிறுத்தத்திலும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களிலும் கலந்து கொண்டனர்.

டெல்அவிவ் வில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாத்திரம் சுமார் 2 இலட்சத்து 80 ஆயிரம் பேர் பங்கேற்றதாக கிரவ்ட் சொலுசன் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. நாடெங்கிலும் நடந்த ஆர்ப்பாட்டங்களில் சுமார் 2 இலட்சம் பேர் கலந்து கொண்டிருக்கலாமென ரைம்ஸ் ஒப் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான நடவ் குறிப்பிடுகையில், ‘இஸ்ரேலிய ஆட்சியாளர்கள் யுத்த நிறுத்த ஒப்பந்த முயற்சிகளை மீண்டும் மீண்டும் கபடத்தனமாக சீர்குலைத்திராவிட்டால் 26 பணயக்கைதிகள் இன்று எங்களுடன் உயிருடன் இருந்திருப்பார்கள்’ என்றுள்ளார்.

‘பணயக்கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வர நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம். இது செயல்பட வேண்டிய நேரம். கைதிகள் பரிமாற்றத்திற்கான ஒரு ஒப்பந்தம் வரும் வரை தீவிரமாக செயற்பட வேண்டும்’ என்று பணயக்கைதி மடன் சங்குஸ்தரின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நிதியமைச்சர் பெஸலால் ஸ்மோர்ட்ச், வேலைநிறுத்தத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டவர்களுக்கு கொடுப்பனவு வழங்க வேண்டாம்’ என திறைசேரிக்கு உத்தரவிட்டுள்ளார். ‘இது ஹமாஸுக்கும் அதன் தலைவர் யஹ்யா சின்வாருக்கும் ஆதரவளிப்பதற்காக நடத்தப்படுகிறது’ எனக் குறிப்பிட்டு இவ்வேலைநிறுத்தத்தை நிறுத்தி தொழிலாளர்களை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறு தொழிலாளர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்படவும் ஏற்பாடு செய்தார்.

இம்மனுவைப் பரிசீலனை செய்த நீதிமன்றம், விடுத்த உத்தரவுக்கு அமைய, ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்பினர். ஆனால் ஆர்ப்பாட்டமும் ஊர்வலங்களும் அடிக்கடி இடம்பெற்ற வண்ணமுள்ளன.

அமெரிக்காவினதும் இஸ்ரேலிய குடிமக்களினதும் அழுத்தத்தின் பின்புலத்தில் கைதிகள் பரிமாற்றம் குறித்த மற்றொரு யுத்த நிறுத்த பேச்சுவார்த்தைக்கு செல்ல இஸ்ரேல் தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் கைதிகள் பரிமாற்றத்தின் நிமித்தம் கட்டார் ஏற்கனவே முன்னெடுத்த முயற்சிகளின் ஊடாக 2023 நவம்பர் 24 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்த ஒரு வாரகால யுத்தநிறுத்தத்தின் ஊடாக ஒரு இஸ்ரேலிய பணயக் கைதிக்கு 3 பலஸ்தீனக் கைதிகள் என்றபடி சுமார் 105 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அனைத்து கைதிகளும் விடுவிக்கப்பட முன்னர் அந்த யுத்தநிறுத்த உடன்பாட்டில் இருந்து வெளியேறிய இஸ்ரேல் டிசம்பர் முதலாம் திகதி முதல் யுத்தத்தை ஆரம்பித்தது. அதனால் எஞ்சிய கைதிகள் தொடர்ந்தும் ஹமாஸின் பிடியில் உள்ளனர்.

மர்லின் மரிக்கார்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division