இந்த நாட்டில் பொருளாதாரம் அதல பாதாளத்துக்குச் சென்றபோது, எவருமே நாட்டைப் பொறுப்பேற்காமல் மக்களைப் புறக்கணித்தபோது, துணிவோடு மக்களின் சுமைகளைப் பொறுப்பேற்றவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே என வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் தெரிவித்தார். மஞ்சந்தொடுவாய் அல்-அக் ஷா கடற்றொழிலாளர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் ரீ.எல்.பஷீர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கடந்த பொருளாதார நெருக்கடி காலத்திலும் கொரோனா ஆட்கொல்லி வைரஸ் தொற்றுக் காலத்திலும் தற்போதைய சூழ்நிலையிலும் தாம் எதிர்கொண்ட பொருளாதாரக் கஷ்டங்களை கடற்றொழிலாளர்கள் ஆளுநரிடம் சுட்டிக்காட்டினர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர் நஸீர் அஹமட், இனவாதமற்ற ஒரு தலைவரால்தான் இந்த நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும். இந்த நாட்டை முழுமையாகச் சீரழித்ததே இனவாதம் தான். தற்போது தாம் இனவாதிகளல்ல என்று காட்டிக் கொண்டு முன்வரும் தலைவர்கள் புளியம்பழத்தில் சீனியைப் பூசிக் கொண்டு வருகிறார்கள். இவர்கள் நாட்டுக்கு நல்லது செய்வார்கள் என்று நம்பி மக்கள் ஏமாந்து விடக் கூடாது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் ஒருபோதும் அச்சத்துடன் வாழ்ந்ததில்லை. இனியும் அவரது தலைமையின் கீழான ஆட்சியில் அச்சம் பீதி இனவாதமின்றி வாழலாம். வறிய கடற்றொழிலாளர் சமூகத்துக்கு ஏற்ற தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே என அவர் மேலும் தெரிவித்தார்.
பெரியபோரதீவு தினகரன் நிருபர்