ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கப்போவதாக எடுத்த முடிவு மக்களின் முடிவல்ல எனவும் அது கட்சி சார்ந்த முடிவெனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் பாராளுமன்றத்தில் மாகாண சபை தேர்தல் தொடர்பான தனிநபர் பிரேரணையை முன்வைத்திருந்தார்.
அது தொடர்பான விவாதங்கள் பாராளுமன்றத்தில் நடைபெற்று வருவதுடன், தமிழ்க் கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவை அண்மையில் சந்தித்தபோது இப் பிரேரணையை நிறைவேற்றுவது தொடர்பாக சாதகமான கருத்துக்களை முன்வைத்ததாக அறிகிறேன்.
இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட மாகாண சபை தொடர்பான தனிநபர் பிரேரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த ஒத்திவைப்பு, சிலவேளை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கப்போவதான அறிவிப்பு வெளியாகியமைக்கான தாக்கத்தை செலுத்தியிருக்கலாம்.
ஏனெனில், தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரங்கள் நடைபெற்றுவரும் இச் சந்தர்ப்பத்தில், மாகாண சபை தொடர்பான விவாதம் சிலருக்கு தேவையாக இருக்கலாம். மற்றொரு தரப்பினர் அதை விரும்பாமலும் இருக்கலாம்.
எனினும், தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொண்டுவந்த மாகாண சபை தேர்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை, இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் எடுத்துக் கொள்ளப்படுகின்றமை தெரிந்தும் அதற்கு முன்னரே சஜித் பிரேமதாசவின் ஆதரவு அறிவிப்பை சுமந்திரன் வெளிப்படுத்திவிட்டார்.
தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கப்போவதாக எடுத்த முடிவு மக்களின் முடிவல்ல, அது கட்சி சார்ந்த முடிவாகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.