சளைக்காத நடை நடந்து
சரித்திரம் படைத்த சாகசப் புதல்வனே!
ஷஹ்மி ஷஹித் எனும் என்
உடன் பிறவா சகோதரனே!
பேருவகை மண்ணின் வெற்றி வீரனே!
பேருவளை ஈன்ற புகழ் பூத்த மைந்தனே!
உன் வழிநிறைந்த கால்களுக்கு
ஒத்தடம் தர என் வரிகள் ஈடாகாது.
உன் வழிந்தோடிய வியர்வைகள் துடைக்க
என் வார்த்தைகள் போதாது!
கொட்டும் மழையிலும்
சுட்டுப் பொசுக்கிய வெயிலிலும்
இலட்சியத்தை நெஞ்சில் ஏந்தி
தாயகக் கொடியை உன் கையில் ஏந்தி
சளைக்காத உன் நடை கண்டேன்.
என் நெஞ்சம் நெகிழ்ந்தேன்
என் கண்கள் கசிந்தது
என் கரங்கள் உனக்காய் உயர்ந்தன.
வாட்டும் வெயிலிலும் வாடாத உன் புன்னகை
ஓட்ட நடையிலும் ஓயாத உன் நற்போதனை
உன் வேதனைகளை
எல்லாம் எரிபொருளாக்கி
சாமர்த்தியமாய் சகலரின் இதயத்திலும்
ஒளி விளக்காய் எரிந்து இடம் பிடித்தாய்.
உறங்காத இலட்சியங்களின்
அணையாத வெளிச்சம் நீ!
இவ் இரத்தின தீபத்தின்
இலட்சிய தீபம் நீ!
தாகிக்க தாகிக்க நடந்து
தாயகத்தையே சுற்றி வந்தாய்
தளராத உன் நடையால்
தடைகளை உடைத்து எறிந்தாய்
உன் வீர நடை இந்நாட்டின் புகழ் உரைத்தது.
அதன் தரம் உயர்த்தியது.
உன் எளிமை தான் உன்னை
வலிமையாக்கியது.
உன் பொறுமை தான் உனக்குப்
பெருமை சேர்த்தது.
தேசத்தை கட்டி எழுப்ப
உன் தேகத்தால் நீ உழைத்தாய்
அந்த தியாகத்தின் முன்னே!
உன் நெஞ்சுறுதியின் முன்னே!
எந்தச் செல்வமும் சொகுசும் துச்சம் தான்!
துச்சம் தான்!
நல்ல கனவுகளும் கற்பனைகளும் தான்
ஞானத்தின் ஊற்று.
அந்த கனவுகளை நனவாக்க உன்
வாழ்க்கைப் பாதையை நீமாற்று.
என்ற வாசகத்தின் முன்னுதாரணம் ஆனாய்!
உனது பாதத்தால் நீ செய்த சேவைக்குப்
பின்னே பேருவளை மண்ணின் பண்பாடு
அது எமக்குத் தென்பட்டது.
நீ செல்லும் வழி எல்லாம்
நீ சிந்தியது வியர்வை அல்ல.
ஊரோ, உலகமோ முன்னேற
ஒற்றுமையே வழி என்று உரம் தெளித்தாய்.
வேற்றுமைக்குள் ஒற்றுமை காண
நீ பயணித்தாய் பாத யாத்திரையால்
புனித பாதம் பதிந்த தேசத்தின்
பண்பாட்டை உலகுக்கே
உரத்து மொழிந்தாய்.
வாழ்க சௌமி! வளர்க சௌமி!
என்றென்றும் நலமும் வளமும் பெற்று
வெற்றி நாயகனாய்
பார் போற்ற உயர்க சௌமி!
வல்ல நாயன் துணை என்றும் உனக்கு!