இரண்டாவது உலக இந்து மாநாட்டை தலைமை தாங்கி நடத்தி இந்துக்களுக்கு பெருமை சேர்த்த ஜனாதிபதி ரணிலுக்கே இந்து மக்களின் ஆதரவென சர்வதேச இந்து மத பீட செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் இந்து கலாசார அமைச்சர் அமரர் தியாகராஜா மகேஸ்வரன் காலத்தில் இரண்டாவது உலக இந்து மாநாடு, உலகிலுள்ள இந்துக்கள் அனைவரையும் வியக்கவைக்கும் வண்ணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது பண்டாரநாயக்க மண்டபத்தில் தற்போதைய ஜனாதிபதியான அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கி அங்குரார்பண நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தார்.
இதன்போது, அந்தண பெருமக்கள் புடைசூழ வேத மந்திரம் முழங்க, மங்கள வாத்தியங்களுடன் வரவேற்கப்பட்டு அந்த நிகழ்வில் கலந்துகொண்டு இந்து மாநாட்டை சிறப்பித்து இருந்ததை ஒருபோதும் இந்து மக்கள் மறக்கமாட்டார்கள்.
நாடு பொருளாதார ரீதியில் முடங்கியிருந்தவேளை எரிபொருளுக்கும் எரிவாயுவுக்கும் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்றபோது, நாடு ஜனநாயகத்தை இழந்து கொண்டிருந்த இக்கட்டான சூழ்நிலையில், துணிந்து பிரதமராக பதவியேற்று மக்கள் பாராளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு தனது துணிச்சலான நடவடிக்கைகளின் மூலமும் தீர்க்கதரிசனமான சிந்தனைகளின் மூலமும் பொருளாதாரப் பிரச்சினைக்கு ஓரளவு சுமூகமான தீர்வை கண்டு, இன்று வரிசையை இல்லாமல்செய்து, மக்களின் பட்டினியை போக்குவதற்கு அசுவெசும திட்டத்தை கொண்டுவந்து, மக்களுக்கு உரிய கொடுப்பனவை மானிய முறையில் வழங்கி உதவி செய்திருந்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
இன்று நாடு முழுவதும் பசி பட்டினியின்றி ஓரளவுக்கு பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு வழியை திறந்து விட்ட பெருந் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. அவருக்கு இந்துக்களாகிய நாங்கள் முழு மனதுடன் ஆதரவு வழங்க வேண்டும் என்பதுடன் வட, கிழக்கிற்கும் நிச்சயம் நல்லதொரு தீர்வையும் தருவார் என்ற நம்பிக்கையோடு வாக்களிக்க வேண்டும் என்றார்.