விவசாய நடவடிக்கைகளுக்காக விவசாயிகள் பெற்ற அனைத்து விவசாயக் கடன்களையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தள்ளுபடி செய்வதற்கான யோசனையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
விவசாயத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் விவசாய வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விவசாயக் கடன்கள், சுழல் கடன்கள் மற்றும் விவசாய ஓய்வூதிய காப்புறுதி கடன்களிலிருந்து இவ்வாண்டு 2024 செப்டெம்பர் 03 ஆம் திகதி வரை நிலுவையிலுள்ள மொத்த கடன் தொகையையும் தள்ளுபடி செய்ய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கொள்கை ரீதியான தீர்மானமொன்றை எடுப்பதற்காக கடந்த 3 ஆம் திகதி அமைச்சரவையில் பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்.
இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்ட கடனை ஈடுசெய்வதற்கு தேவையான ஒதுக்கீடுகளை திறைசேரியிலிருந்து விவசாயத்திணைக்களத்தினூடாக விவசாய வங்கிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்குள் விடுவிக்கப்படுவதற்கும், 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேவையான ஏற்பாடுகளை உள்ளடக்குவதற்கும் ஜனாதிபதி அமைச்சரவை பத்திரத்தில் முன்மொழிந்துள்ளார்.
ஜனாதிபதியின் பிரேரணைக்கு அடுத்த வாரம் அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்படும் என திறைசேரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, 46,933 விவசாயிகளிடமிருந்து 165,46,75,093 ரூபா (165 கோடியே 46 இலட்சத்து 75 ஆயிரத்து 93 ரூபா) நிலுவைத் தொகையாக விவசாய வங்கி மற்றும் விவசாய சங்கங்களுக்கு செலுத்த வேண்டியுள்ளது. விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, விவசாயிகளுக்கு நிதி நிவாரணம் மற்றும் ஆதரவை வழங்கும் நோக்கில் இந்த விவசாய கடன்களை தள்ளுபடிசெய்ய அரசு முடிவு செய்துள்ளது. நியாயமான காரணமின்றி இரசாயன உர இறக்குமதியை நிறுத்தும் தீர்மானத்தினால் விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஓரளவு நியாயம் காண்பதையும் அரசாங்கம் நோக்காகக் கொண்டுள்ளது.