ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் பதின்மூன்று நாட்களே இருக்கின்றன. நாட்டின் அரசியல் களம் ஒவ்வொரு கணமும் பரபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறத்தில் ஊடகங்களும் மக்களைப் பரபரப்பாக்கிக் கொண்டிருக்கின்றன.
சமூக ஊடகங்களில் பயனாளர்களின் செயற்பாடுகள் ஆரோக்கியமானதாக இல்லையென்று தேர்தல்கள் ஆணையாளர் அதிருப்தி தெரிவித்திருக்கின்றார். அதேவேளை ஒருசில தொலைக்காட்சிகள் பக்கச்சார்பான முறையில் செயற்பட்டு வருவதையும் இன்றைய தேர்தல் காலத்தில் அவதானிக்க முடிகின்றது.
சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதென்பது இலகுவான காரியமல்ல. சமூக ஊடகங்களை ‘கடிவாளம் இடப்படாத குதிரை’ என்று கூறுவர். ஊடகத்துறையில் பின்பற்றப்பட வேண்டிய வழுக்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்வோர் பொருட்படுத்துவதில்லை. சமூக ஊடகங்களில் கணக்கு வைத்துள்ள பயனாளர்கள் ஒவ்வொருவரும் தங்களை ஒரு ஊடகவியலாளராகக் கருதியவாறே கண்டபடியாக கருத்துகளைப் பதிவேற்றம் செய்கின்றனர்.
சமூக ஊடகங்களாக இருக்கட்டும், இல்லையேல் இலத்திரனியல், அச்சு ஊடகங்களாக இருக்கட்டும்… குறைந்தபட்சமேனும் ஊடக நெறிமுறைகளைப் பின்பற்றியவாறே செயற்படுவது அவசியம். குறித்த தரப்பினருக்கு வசைபாடும் விதத்திலும், அத்தரப்பினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதத்திலும் எந்தவொரு ஊடகமும் செயற்படுவது முறையல்ல.
தேர்தல் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்ற தகவல்களில் ஐந்து சதவீதமும் உண்மை கிடையாது. கற்பனைகளையே அவர்கள் பதிவேற்றம் செய்கின்றனர். குறித்த தரப்பொன்றை இலக்கு வைத்து, அத்தரப்பினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் தகவல்கள் பதிவேற்றப்படுகின்றன.
சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது சிரமமானதென்றாலும் கூட, ஊடக ஒழுக்கவிழுமியங்களைக் கடைப்பிடிக்க வேண்டிய தார்மிகப் பொறுப்பு தங்களுக்கு உள்ளதை ஊடகங்கள் மறந்து விடலாகாது. கருத்துக் கணிப்பு என்பதன் பேரில் தவறான கணிப்புகளை மக்களுக்குத் தெரியப்படுவத்துவது, ஒருதரப்பினருக்கு பிரசாரம் வழங்குதல், எதிர்த்தரப்பினருக்கு வசைபாடுதல் போன்ற காரியங்களில் தேசிய ஊடகங்கள் சில ஈடுபட்டு வருவதும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
உலகில் சிறப்பான ஜனநாயகப் பாரம்பரியங்களைக் கடைப்பிடிக்கின்ற நாடென்ற பெருமை இலங்கைக்கு உள்ளது. எனவே ஜனநாயகப் பாரம்பரியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் சமூக ஊடகங்கள் நடந்து கொள்வது தவறாகும்.