அல்சைமர் நோய் மற்றும் ஏனைய வடிவிலான டிமென்ஷியா என்பன வயது முதிர்ச்சியுடன் பரவலாக அதிகரித்து வருகின்றன. பிராந்தியத்தில் வேகமாக அதிகரித்துவரும் வயதுமுதிர்ந்தவர்களின் எண்ணிக்கையை எதிர்கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை காணப்படுவதுடன், 2025ஆம் ஆண்டாகும் போது அரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் டிமொன்ஷியாவுடன் வாழ்வார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
உலக அல்சைமர் மாதமாக செப்டெபர் மாதமும், உலக அல்சைமர் தினமாக செப்டெம்பர் 21ஆம் திகதியும் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், அல்சைமர் நோய் சர்வதேச அமைப்பின் உறுப்பினரான லங்கா அல்சைமர் மன்றம் தொடர் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.ஒரு மாத கால விழிப்புணர்வு பிரசாரத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், நினைவாற்றல் இழப்பு மற்றும் ஆற்றல் குறைவு போன்ற அறிகுறிகளைக் கொண்ட ஒரு வகை டிமென்ஷியாவான அல்சைமர் நோய் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த கொழும்பின் அடையாளமாக விளங்கும் தாமரைக் கோபுரக் கட்டடம் செப்டெம்பர் 1ஆம் திகதி சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்தது.
லங்கா அல்சைமர் மன்றத்தின் முக்கிய சேவைகள் பெரும்பாலும் தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகின்றன.