இந்திய எல்லையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையின் சகாப்தம் முடிந்துவிட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பரபரப்பான கருத்தொன்றை இரு தினங்களுக்கு முன்னர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் மற்றும் வன்முறை தொடர்பாக பாகிஸ்தான் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்காத வரை இந்தியா இனிமேல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடாது என்றும் ஜெய்சங்கர் கூறினார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லையில் அடிக்கடி மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர இந்தியா முயலும் போதெல்லாம், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதை பாகிஸ்தான் வாடிக்கையாக வைத்துள்ளது என்று இந்திய தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றது.
அமைச்சர் ஜெய்சங்கர் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “மும்பை தாக்குதல் தொடங்கி பல விஷயங்களை நம்மால் உதாரணமாகச் சொல்ல முடியும்” என்றார்.
டெல்லியில் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறிய இக்கருத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான உறவு தொடர்பில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகத் தெரிவித்த ஜெய்சங்கர், எல்லையில் என்ன நடந்தாலும் அதைச் சரி செய்ய இந்தியா தயாராகவே உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தியா மீதான பயங்கரவாதத் தாக்குதல்களை ஆதரிக்கும் பாகிஸ்தான், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஜெய்சங்கர் எச்சரித்தார். “இங்கே பிரச்சினை என்னவென்றால் பாகிஸ்தானுடன் என்ன வகையான உறவு என்பதிலேயே குழப்பம் இருக்கிறது. தற்போது இருப்பது போலவே இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு இருக்க வேண்டும் என்று இந்தியா நினைக்கிறதா என்று நீங்கள் கேட்டால், அதற்கு ஆம், இல்லை என இரண்டு பதிலும் பொருந்தும்.
அதற்காக இந்தியா என்ன நடந்தாலும் அமைதியாக இருக்கும் என நான் சொல்லவில்லை. பொசிற்றிவ் என்றாலும் நெகற்றிவ் என்றாலும் நாங்கள் எதிர்வினையாற்றுவோம்” என்றார் ஜெய்சங்கர்.
அதாவது என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்திய சகாப்தம் முடிந்துவிட்டதாகவும், எல்லையில் இருக்கும் சூழலுக்கு ஏற்ப தக்க பதிலடியை இந்தியா தரும் என்பதே ஜெய்சங்கர் பதிலாக இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் எல்லை மோதல் காரணமாக இந்தியா- பாகிஸ்தான் இடையே விடுதலை பெற்ற போதில் இருந்தே மோதல் நிலவி வருகிறது. அதேநேரம் இந்தியாவுக்குள் பயங்கரவாத செயல்களைப் பாகிஸ்தான் நடத்தியும், பயங்கரவாத செயல்களை ஊக்குவித்தும் வருவதாக இந்தியா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. கடந்த மார்ச் மாதம் அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா சென்ற போது கூட இது குறித்து விரிவாகப் பேசியிருந்தார்.
இதேவேளை சிங்கப்பூரில் ஒருதடவை உரையாற்றியிருந்த அமைச்சர் ஜெய்சங்கர், “தொழில்துறையினருக்கு எப்படி ஒரு நாடு ஆதரவு அளிக்குமோ, ஏறக்குறைய அதேபோல பயங்கரவாதத்திற்குப் பாகிஸ்தான் ஆதரவு கொடுத்து வருகிறது. பயங்கரவாதத்தை ஆதரிப்போம் என்று வெளிப்படையான நிலைப்பாடு எடுத்துள்ள ஒரு அண்டை நாட்டை எப்படி நாம் எதிர்கொள்ள முடியும்? காலங்காலமாக அவர்கள் இதையேதான் செய்து வருகிறார்கள். இந்தியா- பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டு வர என்னிடம் உடனடி தீர்வு இல்லை. ஆனால் நான் ஒன்றை உறுதியாகச் சொல்கிறேன். இனி இந்தியா இந்தப் பிரச்சினையைத் தவிர்க்காது. சரி நடந்தது நடந்துவிட்டது, பேச்சுவார்த்தையைத் தொடரலாம் எனச் சொல்லப்போவது இல்லை. ஒவ்வொரு விஷயத்திற்கும் தக்க பதில் இருக்கும்” என்று கூறியிருந்தார்.
காஷ்மீரில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், இப்போது மீண்டும் அதே கருத்தை ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
“பாகிஸ்தானுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்திய காலம் முடிந்து விட்டது. இனிமேல் அந்நாட்டின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிர்வினை இருக்கும். பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒரு சேர நடக்காது என்பதில் உறுதியாக இருக்கிறோம். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 370 ஆவது பிரிவு நீக்கப்பட்டு விட்டது. எனவே பாகிஸ்தானுடன் எந்த மாதிரியான உறவு என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்பதே பிரச்சினை.
இந்தியா செயலற்ற நாடு இல்லை. எந்த ஒரு நிகழ்வு நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருந்தாலும், அதற்கு நாம் எதிர்வினை ஆற்றுவோம். பாகிஸ்தானில், பயங்கரவாதம் என்பது தொழில்முறையாக மாறிவிட்டது. இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு கொண்டு வருவதற்கு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தனது செயல்திட்டமாக வைத்துள்ளது. ஆனால், இந்த நிபந்தனையை ஏற்க முடியாது என்பதில் நாம் உறுதியாக இருந்து பாகிஸ்தானின் கொள்கையை செயலற்றதாக்கி விட்டோம்” என ஜெய்சங்கர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ’ இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மறுவடிவமைத்தல்’ என்ற தூதர் ராஜீவ் சிக்ரியின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய போதே இத்தகைய காரசாரமான கருத்துகளை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.
“அமைதியாக இருப்பவர்கள் அல்ல நாங்கள். நிகழ்வுகள் நேர்மறையாக இருந்தாலும் எதிர்மறையாக இருந்தாலும் அதற்கு நாங்கள் எதிர்வினையாற்றுவோம்.
ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை, இந்திய – ஆப்கானிய மக்களுக்கு இடையேயான உறவு வலுவானதாக இருக்கிறது. ஆப்கான் சமூகத்தின் மீது இந்தியாவுக்கு நல்லெண்ணம் உள்ளது. ஆனால் நாம் ஆப்கானிஸ்தான் எனும்போது, அங்குள்ள அரசாங்கத்தின் அடிப்படைகள் குறித்து மறந்துவிடக் கூடாது என்று நான் நினைக்கிறேன். இன்று நாம் நமது ஆப்கானிய கொள்கையை மறுபரிசீலனை செய்யும்போது, நமது நலன்கள் பற்றி நாங்கள் மிகவும் தெளிவாகக் கவனிக்கிறோம்.
அமெரிக்கப் படைகள் இருக்கும் ஆப்கானிஸ்தான், அமெரிக்கப் படைகள் இல்லாத ஆப்கானிஸ்தானில் இருந்து மிகவும் வித்தியாசமானது. இதற்காக நாம் அந்நாட்டைப் பாராட்ட வேண்டும்.
வங்கதேசத்தைப் பொறுத்தவரை, அந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, அந்த நாட்டுடனான நமது உறவு மேலும் கீழுமாகவே இருந்துள்ளது. தற்போது அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது பாதிப்பை ஏற்படுத்தலாம். அதேநேரத்தில், பரஸ்பர நலன்களை கண்டறிவதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். இதற்காக தற்போதுள்ள அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும். மியன்மாருடான உறவைப் பொறுத்தவரை, ஒரே நேரத்தில் அது நெருக்கமாகவும் தொலைவாகவும் உள்ளது. அங்குள்ள அரசாங்கம் மற்றும் பிற சக்திகளுக்கு இடையே ஒரு சமநிலையைக் கண்டறிய வேண்டும். ஏனெனில் அதுதான் உண்மை” என ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்திய வெளியுறவு அமைச்சரின் இந்த அறிவிப்பு சர்வதேச ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.சாரங்கன்