பலஸ்தீனின் காஸா மீது பத்து மாதங்களுக்கும் மேலாக யுத்தத்தை முன்னெடுத்துவரும் இஸ்ரேல் மேற்குக் கரை, கிழக்கு ஜெரூஸலம் பகுதிகளிலும் இராணுவ கெடுபிடிகளைத் தொடர்ந்து வண்ணமுள்ளது. இந்நிலையில் கடந்த திங்களன்று (26ஆம் திகதி) அல் அக்ஸா மசூதி வளாகத்திற்குள் சென்ற இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டமர் பென் கிவிர், இஸ்ரேலிய இராணுவ வானொலிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ள கருத்தினால் மத்திய கிழக்கு குறிப்பாக முஸ்லிம் உலகு கொதிநிலை அடைந்துள்ளது.
முஸ்லிம்களின் முதலாவது கிப்லாவாகவும், (தொழுகைக்கு முன்னோக்கும் திசை) மூன்றாவது புனித தளமாகவும் விளங்கும் அல் அக்ஸா வளாகத்தில் யூதர்கள் வழிபட இஸ்ரேலிய பொலிஸாரால் தடை விதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு பல தடவை சென்று வந்துள்ள அமைச்சர் கிவிர், கடந்த திங்களன்று சென்ற சமயம், ‘அல் அக்ஸா மசூதியில் யூதர்களுக்கும் பிரார்த்தனை நடத்த உரிமை உண்டு. அதனால் அல் அக்ஸா வளாகத்திற்குள் யூத வழிபாட்டு ஆலயம் அமைக்க வேண்டும். யூத கொடியை நட வேண்டும்’ என்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்தே முஸ்லிம் உலகில் கொதிநிலை ஏற்பட்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஒ.ஐ.சி), உலக முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் பலஸ்தீன், ஜோர்தான், சவுதி அரேபியா, ஈரான், கட்டார், துருக்கி, எகிப்து, இந்தோனேசியா, ஆப்கனிஸ்தான் உள்ளிட்ட எல்லா முஸ்லிம் நாடுகளும் அமைச்சர் கிவிரின் இக்கூற்றுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளதோடு அவரது திட்டத்தையும் முற்றாக நிராகரித்துள்ளன.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, அமைச்சர் பென்-கிவிரின் கூற்றைக் கடுமையாகக் கண்டித்துள்ளதோடு, ஜெனீவா உடன்படிக்கைகள் மற்றும் சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல் இது என்றும் குறிப்பிட்டுள்ளது.
பலஸ்தீன அதிகார சபையின் பேச்சாளர் நபில் அபு ருடைனே விடுத்துள்ள அறிக்கையில், ‘அல்-அக்ஸாவுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதை பலஸ்தீன மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது எந்தச் சூழ்நிலையிலும் கடக்க முடியாத சிவப்புக் கோடு’ என்றுள்ளார்.
சவுதி அரேபியா விடுத்துள்ள அறிக்கையில், அமைச்சர் பென்-கிவிரின் கூற்று, உலக முஸ்லிம்களின் உணர்வை தூண்டும் செயல் என்றுள்ளதோடு, அல்-அக்ஸாவின் வரலாறு மற்றும் சட்டபூர்வமான அந்தஸ்தை மதிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பிலான பொறுப்பை நிறைவேற்ற சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, துருக்கி ஆளும் கட்சியின் பேச்சாளர் ஓமர் செலிக், பென்-கிவிரின் கருத்துக்கள் அனைத்து முஸ்லிம்களையும் மனிதகுலத்தையும் தாக்கும் ஒரு மோசமானதும் சபிக்கப்பட்டதுமான அறிக்கை என்றுள்ளார்.
ஜோர்தான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சுஃபியான் ஹுதா, ‘அல்-அக்ஸா முஸ்லிம்களின் தூய வழிபாட்டுத் தலமாகும். புனிதத் தலங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் குறிப்பாக சர்வதேச நீதிமன்றங்களின் ஊடாக நடவடிக்கை எடுக்கத் தேவையான சட்டக் கோப்புகளைத் தயாரித்து வருகிறோம்’ எனக் கூறியுள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், தற்போது நடைமுறையிலுள்ள ஏற்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை என்றுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலண்ட், ‘இது தேவையற்றதும் பொறுப்பற்றதுமான செயல். இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் குற்றம் என்று ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். இஸ்ரேலிய உள்துறை அமைச்சர் உட்பட பல இஸ்ரேலிய அதிகாரிகளும் பென் கிவிரை கண்டித்துள்ளனர்.
அமைச்சர் பென் கிவிர் சமீபத்திய மாதங்களில் அல் அக்ஸா வளாகத்தில் யூதர்களுக்கும் பிரார்த்தனைகள் நடத்த அனுமதிக்குமாறு கோரி வந்த நிலையில், முதல் தடவையாக அல் அக்ஸா வளாகத்திற்குள் யூத வழிபாட்டு ஆலயம் கட்டுவது குறித்து வெளிப்படையாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இவர் இவ்வமைச்சுப் பதவியை ஏற்ற பின்னர் ஆறு தடவை புனிதப் பகுதிகளுக்குள் சென்றுள்ளார். அந்த வகையில் அமெரிக்க அரசாங்கம் இவ்வருடம் இவரது செயற்பாடுகளை இரு தடவை கண்டித்துள்ளமையும் தெரிந்ததே.
“அல் அக்ஸாவானது ஏக இறைவனை வணங்கி வழிபடுவதற்காக பூமியில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது பள்ளிவாசலாக விளங்குகிறது. முஸ்லிம்கள் புனித யாத்திரை மேற்கொள்ள இஸ்லாம் அங்கீகரித்திருக்கும் மக்காவிலுள்ள கஃபதுல்லாஹ், மதீனாவிலுள்ள மஸ்ஜிதுன் நபவி என்பவற்றுக்கு அடுத்த இடத்தில் இந்த அல் அக்ஸா உள்ளது. மக்காவில் நிறைவேற்றப்படும் தொழுகைக்கு ஒரு இலட்சம் நன்மைகளும் மதீனாவில் நிறைவேற்றப்படும் தொழுகைக்கு ஆயிரம் நன்மைகளும் அல் அக்ஸாவில் நிறைவேற்றப்படும் தொழுகைக்கு ஐநூறு நன்மைகளும் கிடைக்கப்பெறும்.
இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) இறைத்தூது கிடைக்கப்பெற்ற 10 வது வருடத்தில் (கி.பி. 621) மக்காவிலுள்ள கஃபதுல்லாஹ்வில் இருந்து ஜெருஸலத்தில் இருக்கும் அல் அக்ஸாவுக்கு இறைவனின் ஏற்பாட்டுக்கு அமைய ஒரே இரவில் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இறைவனின் இறைத்தூதர்களுக்கு தொழுகை நடத்திய அன்னார் அங்கிருந்து இறைவனை சந்திப்பதற்கான விண்ணுலக யாத்திரையை மேற்கொண்டார். அப்பயணத்தின் போது இறைவன் அளித்த ஐந்து நேரத் தொழுகையைப் பெற்றுக்கொண்ட முஹம்மது நபி (ஸல்) அவர்கள், அல் அக்ஸாவுக்கு திரும்பி, அங்கிருந்துதான் மக்காவை சென்றடைந்துள்ளார்”.
இவ்வாறு இஸ்லாமியர்கள் உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இந்த ஏற்பாட்டின் ஊடாக முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே அல் அக்ஸாவும் அது அமைந்துள்ள பூமியும் இறைவனால் இஸ்லாத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது என்று இஸ்லாமியர்கள் நம்புகின்றனர்.
மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மறைந்த பின்னர் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இரண்டாவது ஆட்சியாளரான உமர் (ரழி) அவர்களை, ஜெரூஸலத்திற்கு வரவழைத்து அல் அக்ஸா வளாகத்தின் சாவியை அருட்தந்தை சொப்ரனியூஸ் உமர் (ரழி) அவர்களின் கரங்களில் ஒப்படைந்தார். பலஸ்தீனமும் ஜெரூஸலமும் பல இறைத்தூதர்கள் வாழ்ந்த பூமியாகும். அல் அக்ஸாவில் அவர்கள் வழிபட்டுள்ளார்கள் என்பதும் அவர்களது நம்பிக்கையாகும்.
ஆனால் குப்துஸ் ஸஹ்ரா அமையப்பெற்றுள்ள இடத்தில் சியோன் மலைக்குன்று இருந்ததாகவும் அங்கு ஹைகல் சுலைமான் என்ற யூத கோவில் இருந்ததாகவும் அதனை பாபிலோனியர்கள் முதலில் அழித்ததாகவும், அதன் பின்னர் கி.பி 70 இல் ரோமானியர்கள் அழித்ததாகவும் யூதர்கள் கூறுகின்றனர். அதனை நிரூபிப்பதற்காக பல தசாப்தங்கள் தொல்லியல் ஆய்வுகளை முன்னெடுத்தனர். அதற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றதாக இல்லை.
அதேநேரம், 1920 களுக்கு முன்னர் முழு பலஸ்தீனிலும் ஐந்து சதவீதத்துக்கும் குறைவாக யூதர்கள்தான் காணப்பட்டனர். பலஸ்தீன் பிரித்தானியரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பின்னர்தான் யூதர்கள் பலஸ்தீனுக்குள் குடியேறத் தொடங்கினர். இதனால் பலஸ்தீனின் பூர்வீக மக்கள் நிலங்களை இழக்கத் தொடங்கிய போது இஸ்ரேலியருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் முன்னெடுத்தனர். ஆனால் பிரித்தானியா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் ஆதரவோடு பலஸ்தீன் ஆக்கிரமிக்கப்பட்டதோடு 1948 இல் இஸ்ரேல் என்ற நாடும் உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
1967 இல் இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையில் ஆறு நாட்கள் யுத்தம் இடம்பெறும் வரை அல் அக்ஸா முஸ்லிம்களுக்கு மட்டுமுரிய வழிபாட்டுத்தளமாக இருந்தது. ஜோர்தானிய அவ்காஃப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சினால் அல்-அக்ஸா நிர்வகிக்கப்பட்டது. இதற்கென ஜெருஸலத்தில் இஸ்லாமிய வக்ஃப் நியமிக்கப்பட்டுள்ளது. அல் அக்ஸாவின் நிர்வாகம் ஜோர்தானின் பொறுப்பில் இருந்தாலும் அதற்குள் பிரவேசிப்பதற்கான அனுமதியை வழங்கும் பொறுப்பு இஸ்ரேலிய படையினர் வசமே உள்ளது.
அதனால் 2003 இற்குப் பின்னர் இஸ்லாமிய வக்ஃபின் அனுமதியின்றி வெள்ளி, சனி தவிர்ந்த நாட்களில் அல் அக்ஸா வளாகத்தினுள் யூதர்களும் முஸ்லிம்கள் அல்லாத சட்டவிரோத குடியேற்றக்காரர்களும் இஸ்ரேலிய பொலிஸாரால் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்கள் அங்கு பிரார்த்தனை செய்யவோ அல்லது மதச்சின்னங்களைக் காட்டவோ அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும் அல் அக்ஸாவின் மேற்குச் சுவரை அழுகை சுவராகக் கருதி யூதர்கள் அங்கு வழிபாடுகளில் ஈடுபடுவது தெரிந்ததே.
அமைச்சர் பென்-கிவிரின் கூற்றினால் முஸ்லிம் உலகம் கொதிநிலையடைந்துள்ள சூழலில், சட்டவிரோத யூத குடியேற்றவாசிகள் அல் அக்ஸாவுக்குள் செல்வதை ஊக்குவிக்கவென 5 இலட்சத்து 40 ஆயிரம் டொலர்களை இஸ்ரேலிய மரபுரிமை அமைச்சு ஒதுக்கியுள்ளதாக இஸ்ரேலிய ஊடகமான ‘கன்’ குறிப்பிட்டுள்ளது.
இது முஸ்லிம் உலகின் கொதிநிலையை மேலும் அதிகரிக்கவே செய்யும் என மத்திய கிழக்கு ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மர்லின் மரிக்கார்