இஸ்ரேல்- ஹமாஸ் போர் நீடிக்கும் நிலையில் பாரிய அழிவுகளை அரேபிய தரப்பு எதிர்கொள்ள தொடங்கியுள்ளது. போர் படிப்படியாக காசாவின் நிலப்பரப்பை கடந்து லெபலான் பகுதிைய நோக்கி விஸ்தரிக்கப்படுகிறது. இத்தகைய பாரிய போர் நகர்வு மேற்காசிய அரசியலில் பதற்றத்தை அதிகரிக்க முனைவதோடு உலக அரசியல் ஒழுங்கில் நீண்ட நிலையான ஒரு வடிவத்தை ஏற்படுத்த திட்டமிடுவதாக தெரிகிறது. இக்கட்டுரையும் இஸ்ரேல்- ஹமாஸ் போரின் தொடர்ச்சி உலக அரசியல் ஒழுங்கில் ஏற்படுத்தி வருகின்ற மாற்றத்தை தேடுவதாக உள்ளது.
கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இஸ்ரேல்- ஹமாஸ் யுத்தம் அராபிய மண்ணில் மீண்டும் பாரிய மனித அழிவை ஏற்படுத்தி வருகின்றது. இதுவரையிலும் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 94 ஆயிரத்துக்கு மேற்பட்ட பலஸ்தீனர்கள் காயப்பட்டுள்ளனர். ஒரு வகையில் ஹமாஸ் அமைப்பினால் தொடங்கப்பட்ட போதும் இஸ்ரேல் காசா பகுதியையும் மேற்கு கரையையும் பெருமளவுக்கு ஆக்கிரமிக்கும் உத்திக்கான அடிப்படையாக அமைந்திருக்கின்றது. இத்தகைய சூழல் பிராந்திய அரசியலில் அதிக மாற்றத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கை மேலெழுந்திருந்து. அதில் ஈரானின் பங்கு முதன்மையானது என்றும் கருதப்பட்டது. ஆனால் நடைமுறையில் ஈரான் மீதான தொடர்ச்சியாக இஸ்ரேலின் இராணுவம் மற்றும் புலனாய்வுத் துறைகளின் அணுகுமுறைகள் இஸ்ரேல், இந்த போரில் தனது வெற்றியை உறுதிப்படுத்தக் கூடிய விதத்திலான போராக அமைந்துள்ளது. ஈரானை இஸ்ரேல் போருக்கு முன்னரே முறியடித்துவிட்டது. ஈரான் ஹமாசோடு இணைந்து இஸ்ரேலுக்கு எதிரான ஒரு போரை நகர்த்திக் காட்டிய முனைப்பை பெருமளவுக்கு இஸ்ரேல் கட்டுப்படுத்தி விட்டதென்றே கூறமுடியும். இத்தகைய நகர்வுகள் பிராந்திய வடிவத்திலும் சர்வதேச அரசியல் ஒழுங்கிலும் கவனத்தில் கொள்ள வேண்டிய அதிக விடயங்களை கொண்டிருக்கிறது. அதனை விரிவாக நோக்குவது அவசியம்.
முதலாவது இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு யுத்தம் பெருமளவுக்கு ஒரு முழுமையினை மேற்குலகத்துக்கு கொடுத்திருக்கின்றன. இஸ்ரேல் தன்னுடைய எல்லைக்குட்பட்ட விதத்தில் யூதர்களை பாதுகாப்பதிலும் பலஸ்தீனர்கள் மற்றும் அராபியர்களை அழிப்பதிலும் அதன் அரசியல் தலைமைகளை இல்லாமல் செய்வதிலும் வெற்றிகரமாக இயங்கி வருகின்றது. மேற்குலக அனுசரணையோடு இத்தகைய போரை இஸ்ரேல் முனைப்போடு செயல்படுத்துகிறது. இதனை இலகுவில் தோற்கடிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியாது என்பதை இஸ்ரேல்- ஹமாஸ் போர் தொடங்கிய பின்னர் வெளிப்படுத்தியுள்ளது. இதுவே உலக அரசியல் பொருளாதார ஒழுங்கு அல்லது இருப்பு மேற்குலகத்திடம் உண்டு என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதாவது சர்வதேச சட்டங்களும் மனித உரிமை விதிமுறைகளும் ஜனநாயகம் பற்றிய உரையாடல்களும் எந்தப் பயனையும் உலகத்துக்கு தராது என்பதை இஸ்ரேலின் நடவடிக்கைகள் வெளிப்படுத்தி இருக்கிறது. அதற்கு மேற்குலக நாடுகளாலும் அத்தகைய நடவடிக்கை நிராகரிக்கப்பட முடியும் என்பதை இஸ்ரேலுக்கு வழங்கும் ஒத்துழைப்பு மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது. மேற்கின் தாராண்மைவாத முகங்கள் தோல்வி அடைந்திருக்கின்றன. பெருமளவுக்கு உலக ஒழுங்கு என்பது அமெரிக்க தலைமையிலான மேற்குலக ஒழுங்கு என்பதை இஸ்ரேல்- ஹமாஸ் போரின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. உலக ஒழுங்கு அனைத்து சட்டங்களையும் நியாயங்களையும் முதன்மைப்படுத்துவதும் தனக்கு ஏற்ற வகையில் அவற்றை மீறுவதும் அரசியல் எனக் கொண்டிருக்கின்றது. இத்தகைய நிலையை மிக நீண்ட வரலாற்றோடு மேற்கு பின்பற்றி வருகின்றது. அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் அல்லது சிதைவுகள் கிழைத்தேச நாடுகளில் பலவீனமான கட்டமைப்புகளாலும் உத்திகளாலும் எதிர்கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவது கீழைத்தேச சக்திகள் என்ற அடையாளப்படுத்தப்பட்ட சீனா இந்தியா ரஷ்யா என்பன இப்போது அதிக நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. இதில் இந்தியா ஒருபோதும் கீழைத்தேச சக்திகளின் நட்பு வட்டத்துக்குள் செயல்படுகிறதா? அல்லது மேற்குலக சக்திகளின் நட்பு வட்டத்துக்குள் செயல்படுகிறதா? என்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். அது இருதரப்பையும் திருப்திப்படுத்த முயலும் ஒரு சூழலில் இயங்குகிறது. அதனை ஒரு அரசியல் செய்முறையாக பின்பற்றியும் வருகின்றது. அதனால் இந்தியா அகிம்சை, நடுநிலைமை, அணிசேராமை போன்ற உரையாடல்களுக்கூடாக அது செயல்பட முயல்கின்றது. அன்றி கீழைத்தேசத்தின் அரசியல் சக்திகளுக்கு தலைமை தாங்குகின்ற வலுவை இந்தியா கொண்டிருக்கும் என்று அளவிட முடியாது. மாறாக ரஷ்யாவும் சீனாவும் ஈரானோடும் ஏனைய கீழைத்தேச சக்திகளோடு நெருக்கமான உறவை கொண்டிருந்தாலும் நடைமுறையில் அதிக நெருக்கடிகளை எதிர்கொள்கிறன. சீனா முழுமையாக மென் அதிகாரத்தின் பெயரில் ஒரு வர்த்தக உலகத்தை கட்டமைக்க முயலுகிறது. அதாவது ஈரான் வடகொரியா போன்ற நாடுகளுடன் செயல்படுகின்ற போக்கு ஒன்றை சீனா பின்பற்றுகிறது. சீனாவினது பட்டி மற்றும் பாதை எனும் வர்த்தக பாதையை வெற்றிகரமாக்குவதற்கு முயலுகிறது. அது ஓர் ஆரோக்கியமான சுமூகமான சமாதானபூர்வமான உலகத்தை ஏற்படுத்த முனைகிறது. இதில் மூன்றாவது பிரதான சக்தியாக ரஷ்யா காணப்படுகிறது. ஏனைய நாடுகளைப் போன்று ஐரோப்பிய- ஆசியக் கண்டத்து இயல்புகளை கொண்டுள்ள ரஷ்யா உலக அரசியலை கட்டமைக்கின்ற போது கிழைத்தேச நாடுகளின் அரசியலுக்கு தலைமை தாங்கும் உத்தியோடு காணப்படுகிறது. ஆனாலும் அதன் மீதான உக்ைரனின் நகர்வு ரஷ்யாவை வெற்றிகரமான ஒரு சூழலுக்குள் தலைமை தாங்குகின்ற திறனை மேற்கு தோற்கடித்துள்ளது. ஒருபுறம் ஈரானை தோற்கடிப்பதும் மறுபுறம் ரஷ்யாவை தோற்கடிப்பதும் மேற்குலகத்தின் பிரதான அணுகுமுறையாக நிலவுகிறது. இதிலிருந்து ரஷ்யா கிழைத்தேச அரசுகளுக்கும் பலஸ்தீனர்களுக்கும் ஒரு ஆரோக்கியமான தலைமைத்துவ பொறுப்பை எடுக்குமா என்பதில் அதிக சந்தேகம் நிலவுகிறது. ஏற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் அதற்கான வாய்ப்பை கொடுக்க முடியாத நிலையில் ரஷ்யா விளங்குகிறது. அதற்கு காரணம் ரஷ்யா மீதான உக்கரைன் போரை நேட்டோவும் மேற்கும் திட்டமிட்டே நகர்த்துகிறன. இத்தகைய அணிகளுக்கு இடையே உக்ரைன் முதல் காசா வரையான போர் நெருக்கடி மிக்க சூழலை ரஷ்யாவுக்கு கொடுத்துள்ளது. பொருளாதாரம் ஒரு புறம் இராணுவத்தின் மீது உக்ரைன் கொடுக்கும் நெருக்கடி மேற்படி பாரிய பாதிப்பினை ரஷ்யாவுக்கு ஏற்படுத்துகிறது. இதனால் ரஷ்யா இந்த போரில் பகுதியளவான செல்வாக்கு செலுத்துகின்றது. இதனால் மேற்கு ஆசியாவின் ஒழுங்கு என்பது இஸ்ரேல் மற்றும் மேற்குலகத்திடமே முழுமையாக கட்டமைக்கப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. தவிர்க்க முடியாமல் அத்தகைய ஒழுங்குக்குள் பலஸ்தீனர்களுடைய இனப் பிரச்சனைக்கான தீர்வு நோக்கிய நகர்வொன்றை மேற்குலகம் தயார் செய்கிறதாகவே தெரிகிறது. ஆனால் மேற்குலகத்தின் பிரதான நோக்கம் சீனாவின் பட்டுப்பாதையை அல்லது பட்டி மற்றும் பாதை முயற்சியை முழுமையாக சிதைப்பதேயாகும். இது இந்த போரின் நீண்ட கால நோக்கமாக உள்ளது. குறுகிய காலத்தில் ஏற்படக்கூடிய இலாபங்களை செயல் வடிவமைப்பது அதற்குள் பிராந்திய ஒழுங்கும் உலக ஒழுங்கும் கட்டமைக்கப்படுவதை மேற்கு உறுதிப்படுத்துவது. மேற்காசிய களம் தெளிவற்ற பாதையில் இயங்குவதாக தோன்றினாலும் ஆழமாக அவதானித்தால் மேற்குலகத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் இஸ்ரேலின் நலனுக்குள் கட்டமைக்கப்படுகின்ற நிலை வலுவடைந்துள்ளது. இத்தகைய சூழலுக்குள்ளாகவே உலகத்தினுடைய ஒழுங்கை உக்ரைன் முதல் காசா வரையான போரை வைத்துக் கொண்டு மேற்குலகம் திட்டமிடுகின்றது. இது கீழைத்தேச சக்திகள் அனைத்திற்கும் நெருக்கடிகளை கொடுக்கின்றனவே அன்றி அவற்றுக்கு மாற்றாக எந்த உபாயத்தையும் திட்டமிடலையும் கொடுக்கவில்லை என்பது தெளிவாகிறது.
எனவே மேற்காசிய அரசியல் களம் மேற்குலக நலன்களுக்குள் தெளிவான உத்திகளை ஏற்படுத்தி வருகின்றன. கீழைத்தேச சக்திகளின் உபாயம் அற்ற அணுகுமுறைகளும் சரியான திட்டமிடல் இன்மையும் அதன் வெற்றிகரமான பாதையை தோற்கடித்துள்ளது. அதில் இஸ்ரேல்- மேற்குலகத்தின் அணுகுமுறை வலுவானதாக உள்ளது. இஸ்ரேலின் புலனாய்வு ஏற்படுத்தி இருக்கின்ற மாற்றங்கள் படிப்படியாக மேற்காசியா முழுவதையும் மேற்குலகம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான நகர்வுகளை சாத்தியப்படுத்த உதவுகிறது. இத்தகைய நிலைகளுக்குள் மீண்டும் ஒரு புதிய உலக ஒழுங்கு வடிவமைக்கப்படப் போகின்றது. அதனை வடிவமைப்பதில் அமெரிக்கா இஸ்ரேல் கூட்டு, ஒரு வலுவான பங்களிப்பை சாத்தியப்படுத்தியுள்ளன.