சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் ஜெய் ஷா நியமிக்கப்பட்டது வழக்கத்தை விடவும் கிரிக்கெட் உலகில் உன்னிப்பாக அவதானிக்கப்படும் விடயம். இதற்கு முன்னரும் ஐ.சி.சி. தலைவராக எத்தனையோ பேர் வந்து போயிருக்கிறார்கள். தற்போது பதவியில் இருக்கும் நியூசிலாந்தின் கிரேக் பார்க்லேவை பற்றி கூட யாரும் அலட்டிக்கொள்வதில்லை. ஆனால், ஜெய் ஷாவை அப்படி பார்க்க முடியாது.
2019 ஆம் ஆண்டு தொடக்கம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளராக ஜெய் ஷாவின் பதவிக் காலத்திலேயே முன்னரை விடவும் இந்திய கிரிக்கெட் உலகக் கிரிக்கெட்டில் அதிகம் செல்வாக்குச் செலுத்தியது. ஆட்டங்களை நடத்துவது, விதிகளை மாற்றுவது என்று எல்லாவற்றுக்கு அது பொருந்தும்.
இந்தப் பின்னணியில் அவர் ஐ.சி.சி. தலைவராக பதவி ஏற்கப்போவது எந்த வகையான தாக்கத்தை செலுத்தும் என்பது தான் இப்போதைக்கு இருக்கும் பெருத்த கேள்வி.
ஜெய் ஷாவுக்கு இப்போது தான் 35 வயதாகிறது. அதாவது ஐ.சி.சி. தலைமை பொறுப்பை ஏற்கும் மிக இளம் வயதானவர் என இடம்பெறப்போகிறார். தலைமை பதவிக்கு போட்டி இன்றி தெரிவான அவர் எதிர்வரும் டிசம்பர் 01 ஆம் திகதி அந்தப் பொறுப்பை ஏற்கப்போகிறார். அவரது மூன்று ஆண்டு பதவிக் காலம் என்பது 2027 ஆம் ஆண்டு வரை நீடிக்கும்.
அவர் இப்போது இந்திய சபை செயலாளர் மாத்திரமன்றி ஆசிய கிரிக்கெட் கவுன்ஸில் தலைவராகவும் இருக்கிறார். ஐ.சி.சி. தலைமை பொறுப்பை ஏற்பதற்கு இந்தப் பதவிகளை கைவிடப்போகிறார்.
ஐ.சி.சி. தலைமை பொறுப்புக்கு பார்க்லே மீண்டும் போட்டியிடுவதில்லை என்று அறிவித்ததை அடுத்தே ஜெய் ஷாவின் வருகை உறுதியானது. நியூசிலாந்து முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரும் அந்நாட்டு கிரிக்கெட் சபை தலைவருமான பார்க்லே ஐ.சி.சி. தலைவராவதற்கு இந்தியாவின் செல்வாக்கு அதிகமாக இருந்தது.
2020 ஆம் ஆண்டு அவர் ஐ.சி.சி. தலைவராக போட்டியிட்டபோது யாரை தலைவராக தெரிவு செய்வது என்பது பற்றி உறுப்பு நாடுகளிடையே கடும் பிளவு ஏற்பட்ட நிலையில் இந்தியாவின் முடிவுதான் கடைசியில் பார்க்லேவை தலைவராக்கியது. பின்னணியில் ஜெய் ஷாவின் இராஜதந்திரத்தை தனியே கூறவேண்டும்.
அப்போது பார்க்லேயுடன் ஐ.சி.சி. இடைக்கால தலைவராக செயற்பட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த இம்ரான் கவாஜா போட்டியிட்டார். தலைமைப் பதவிக்கு மூன்றில் இரண்டு வாக்குகளை பெற வேண்டும் என்ற நிலையில் முதல் சுற்றில் 16 வாக்குகளில் பார்க்லேவால் 9 வாக்குகளையே பெற முடிந்தது.
இரகசிய வாக்கு என்றபோதும் பாகிஸ்தான், இலங்கை, சிம்பாப்வே கவாஜாவுக்கு ஆதரவு வழங்கி வந்ததோடு தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளின் ஆதரவும் கவாஜா பக்கமே இருந்தது. ஆனால் அப்போது தென்னாபிரிக்க அணி இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட வேண்டி இருந்தது. இந்தியாவுடன் ஆடுவதென்பது பொருளாதார ரீதியில் முக்கியமானது. அதனை வைத்து இந்தியா அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்று பெரிதாக ஊகிக்கப்பட்டது.
எதிர்பார்த்தபடி இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் பார்க்லே 11–5 என்ற வாக்கு வித்தியாசத்தில் வெற்றியீட்டினார். சர்வதேச போட்டி அட்டவணையை நிர்ணயிப்பது தொடக்கம் நிர்வாக முடிவுகள் வரை ஐ.சி.சி. முடிவுகள் சர்வதேச கிரிக்கெட்டில் முக்கியமானது. எனவே, அதன் தலைமை பொறுப்புக்கு தாம் கை நீட்டுபவரே வர வேண்டும் என்ற இந்தியாவின் முடிவு பார்க்லேவின் அப்போதைய நியமனம் காட்டியது.
இப்போது ஜெய் ஷா போட்டியின்றி தேர்வானதன் பின்னணியும் இப்படித் தான். கிரிக்கெட்டின் மூன்று மிகப்பெரிய சக்திகளான இந்தியாவுடன் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஜெய் ஷாவுக்கே கை அசைத்திருக்கின்றன.
என்றாலும் முழுமையாக அவருக்கு ஆதரவு கிடைத்தது என்று குறிப்பிட முடியாது. வாக்குரிமை பெற்ற 16 உறுப்பினர்களில் 15 உறுப்பினர்களது ஆதரவுடனேயே அவர் தலைவராகி இருக்கிறார். பாகிஸ்தான் ஜெய் ஷாவை ஆதரிக்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் நடுநிலை வகித்ததாக தெரிகிறது.
உண்மையில் ஜெய் ஷாவின் நியமனம் என்பது முதலில் பாகிஸ்தானுக்கே அதிகம் பாதிப்புச் செலுத்தும் ஒன்றாக இருக்கும். ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணம் 2025 இல் பாகிஸ்தானில் நடத்தவே ஏற்பாடாகி இருக்கிறது. என்றாலும் இந்தத் தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் செல்வதை திட்டவட்டமாக நிராகரிக்கிறது.
இந்த நிலையில் போட்டியை எங்கு நடத்துவது என்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இந்த சூழலில் ஜெய் ஷா தலைமையிலான ஐ.சி.சி. என்ன முடிவு எடுக்கும் என்பது தான் பாகிஸ்தானுக்கு இருக்கும் பெரிய கவலை.
இப்படித் தான் கடந்த ஆண்டு ஆசிய கிண்ணமும் பாகிஸ்தானில் நடத்த ஏற்பாடாகி இருந்தது. ஆனால் இந்தியா அங்கு செல்ல மறுத்த நிலையில் போட்டி இலங்கையிலும் நடத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. அப்போது ஆசிய கிரிக்கெட் கௌன்சிலின் தலைவராக ஜெய் ஷா செயற்பட்டார்.
இதற்கு முன்னர் ஜக்மோஹன் தால்மிய, ஷரத் பவார், என். ஸ்ரீனிவாசன் மற்றும் ஷஷாங்க் மனோஹர் என இந்தியாவின் பலரும் ஐ.சி.சி. தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள். ஆனால் இளம் ஜெய் ஷா அந்தப் பதவிக்கு வந்தது தனக்கே உரிய பாணியிலானும். இந்தியாவின் பலம்மிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் என்றால் அவரை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
அஹமதாபாத் கிரிக்கெட் மத்திய சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக 2009 ஆம் ஆண்டு தனது கிரிக்கெட் நிர்வாகப் பயணத்தை ஆரம்பித்த ஜெய் ஷா குறுகிய காலத்திற்குள்ளேயே ஐ.சி.சியின் உச்ச பதவியை தொட்டிருப்பதென்பது சாதாரணப்பட்டதல்ல. தந்தையின் அரசியல் பின்னணி ஒரு பக்க இருக்க பிரத்தியே ஆளுமையுடன் அவரது செயற்பாடுகள் இருந்தன.
இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட்டை கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத லீக் கிரிக்கெட்டாக மாற்றிய அவர் இந்திய அணி உலக அரங்கி ஆதிக்கம் செலுத்துவதற்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உலகக் கிரிக்கெட்டில் செல்வாக்கு செலுத்துவதற்கும் பின்னணியில் இருந்தார்.
என்றாலும் ஐ.சி.சி. தலைமை பொறுப்பு என்பது இந்திய கிரிக்கெட்டுக்கு அப்பாற்பட்டது. நடுநிலையோடு செயற்பட வேண்டியது. அதற்கே உரிய சவால்கள் பல உள்ளன. குறிப்பாக 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கின்போது 128 ஆண்டுகளின் பின்னர் கிரிக்கெட் ஒலிம்பிக்கில் இடம்பெறப்போகிறது.
அதற்கான வழித்தடத்தை வகுப்பது ஷெய் ஷாவின் பிரதான சவால்களில் ஒன்றாக இருக்கும். ‘உலகம் முழுவதும் எங்கள் விளையாட்டின் தரத்தை உயர்த்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்’ என்று தலைவராக தெரிவான பின் அவர் குறிப்பிட்டிருந்தார்.
டி20 கிரிக்கெட் மற்றும் இந்திய பிரீமியர் லீக் உட்பட சர்வதேச அளவில் முளைத்து வரும் லீக் கிரிக்கெட்டுகள் சம்பிரதாய டெஸ்ட் கிரிக்கெட்டை விழுங்கும் அளவுக்கு வளர்ந்து வரும் சூழலில் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பதும் ஜெய் ஷாவுக்கு இருக்கும் மற்றொரு பெரிய சவால். அதற்கு நிர்வாகத் துறையில் அவரது ஆளுமை காலத்தின் தேவையாகக் கூட இருக்கலாம்.
எஸ்.பிர்தெளஸ்