இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பதாவது ஜனாதிபதியைத் தீர்மானிப்பதற்கு இன்னமும் இருபது நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், பிரதான வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டில் பாரியதொரு கட்டமைப்பு மாற்றம் தேவை என நாட்டு மக்கள் பலர் ஒன்றுகூடி வீதியில் இறங்கிப் போராடிய பின்னர் நடத்தப்படும் முதலாவது தேர்தல் இதுவென்பதால் இத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரங்கள் ஒன்றுக்கொன்று சளைத்திருக்கவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தேர்தல் களம் அமைந்திருக்கின்றது.
இவ்வாறான பின்னணியில் தேர்தல் பிரசாரங்களில் சமூக ஊடகங்களின் பயன்பாடு கடந்த காலங்களைவிட அதிகரித்திருப்பது இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ‘தடி எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன்’ என்பது போல சமூக ஊடகத்தில் கணக்கொன்றை வைத்திருப்பவர்கள் எல்லாம் ஊடகவியலாளர் போன்று செயற்படத் தொடங்கியிருக்கும் போக்கும் அதிகரித்துள்ளது.
இதற்கும் அப்பால் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புக்கள் என்பதன் பேரில் முன்னெடுக்கப்படும் ஊடகப் பிரசாரங்கள் தற்பொழுது பேசுபொருளாகியுள்ளன. இந்த விடயம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்துக்கும் சென்றுள்ளது.
தேர்தலுக்கு முன்னர் நடத்தப்படும் கருத்துக் கணிப்புக்கள் குறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்னாயக்க கேள்வியெழுப்பியுள்ளார். தேர்தலில் மக்களின் விருப்பம் சரியாகத் தீர்மானிக்கப்படும் என்பதால், அதற்கு முன்னதாக கருத்துக் கணிப்புகளை மேற்கொள்வது மக்களின் விருப்பத்துக்கு எதிரானது. இதுவரையில் கருத்துக் கணிப்புகள் குறித்த கேள்வி கடந்த காலத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்றும், ஊடக வழிகாட்டுதல்களின் கீழ் கூட இந்த விடயம் தீவிரமான சிந்தனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நேரம் தற்பொழுது உருவாகியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடக சுதந்திரத்தின் கீழ், பொதுமக்களின் பேச்சுரிமை மற்றும் சிந்தனையை எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது என்றாலும், தேர்தலுக்கு முன்னதாக ஊடகங்களில் வெளியாகும் கருத்துக் கணிப்புகள் வாக்களிப்புப் போக்கைப் பாதிக்குமா என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும். கருத்துக் கணிப்புகளை நடத்தும் விதம் குறித்து தற்போதைய ஆணைக்குழு பரிசீலிக்க வேண்டும் என்றும், இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் கருத்துக் கணிப்புக்கள் தேர்தல் நடைமுறைக்கு இடையூறாக அமைந்தால் அதற்கு எதிராக சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மக்கள் விருப்பத்தின் முடிவை தீர்மானிக்க தேர்தல் நடத்தப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் குறிப்பிடுவது போன்று மக்களின் தெரிவுக்கான வாய்ப்பாக தேர்தல் அமையும் பட்சத்தில், அதற்கு முன்னரே தேர்தல் குறித்த போக்கை மாற்றுவது அடிப்படையற்ற செயற்பாடாக அமைகின்றது. தேர்தல்களின் போது கருத்துக் கணிப்புக்களை முன்னெடுப்பது என்பது புதியதொரு விடயம் அல்ல. உலகின் ஏனைய நாடுகளிலும் இவ்வாறான நடைமுறை காணப்படுகின்றது.
இருந்தபோதும், ஊடக நெறிமுறை எதனையும் பின்பற்றாது ஒவ்வொருவரும் தனிப்பட்ட தெரிவுகளின் பின்னணியில் இருந்துகொண்டு மக்களின் கருத்துக்களை அறிவதாகக் கூறி அவற்றை கருத்துக் கணிப்புக்கள் என்ற போர்வையில் வெளியிடுவது உண்மையிலேயே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். குறிப்பாக சமூக ஊடகங்களில் கணக்குகளைக் கொண்டவர்கள் மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளுக்குச் சென்று ஒலிவாங்கியை பிடித்துக்கொண்டு மக்களிடம் கருத்துக்க
ளைக் கேட்கின்றனர். இதன்போது மக்கள் கூறும் கருத்துக்களை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட வேட்பாளருக்குத்தான் அதிகமான ஆதரவு உள்ளது என்ற விம்பத்தைத் தோற்றுவிக்க முயல்கின்றனர். இதனை உண்மையில் மக்களின் மனநிலையை மாற்றும் ஒரு தேர்தல் பிரசாரமாகவே பார்க்க முடியும்.
தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பு என்பது சுயாதீனமானதொரு அமைப்பினால், உரிய வழிமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்படுவதாகவும், கருத்துக் கணிப்பில் பங்கெடுப்பதற்கு அனைத்துத் தரப்பினருக்கும் சமவாய்ப்புக்களை வழங்குவதாகவும் இருக்க வேண்டும். கருத்துக் கணிப்பொன்றை மேற்கொள்வதற்கான அடிப்படைகள் பின்பற்றப்பட வேண்டியது முக்கியமானதாகும்.
பிரதான தேர்தல்களின் போது பல்கலைக்கழகங்கள் சில தாமாக முன்வந்து மக்கள் கருத்துக் கணிப்புக்களை மேற்கொள்வது வழமை. அவ்வாறு மேற்கொள்ளப்படும் கருத்துக் கணிப்புக்கள் கூட ஒரு சில கட்சிகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன என்ற குற்றச்சாட்டுக்களும் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில் சமூக ஊடகங்கள் மூலம் நடத்தப்படும் கருத்துக் கணிப்புக்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு வழிகாட்டல்களைத் தயாரிப்பது குறித்துக் கவனம் செலுத்த வேண்டும்.
கருத்துக் கணிப்பு என்பது தேர்தலில் உண்மையான முடிவு என அர்த்தப்படாது. இதற்குச் சிறந்த உதாரணம், அண்மையில் நடைபெற்றுமுடிந்த இந்தியாவின் பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் வெற்றிபெறும் எனப் பெரும்பாலான கருத்துக் கணிப்புக்கள் கூறியிருந்தன. இருந்தபோதும், இறுதியில் தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்புக்களைப் பொய்யாக்கியிருந்தன.
எனவே, கருத்துக் கணிப்பு முடிவுகளும், தேர்தல் முடிவுகளும் ஒரே மாதிரியானதாக இருக்கும் எனக் கூற முடியாது. இருந்தபோதும், மக்கள் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இந்தக் கருத்துக் கணிப்புக்கள் பயன்படுத்தப்பட்டுவிடக் கூடாது என்பதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் கரிசனையாக உள்ளது. இதில் நியாயம் இருப்பதால் கருத்துக் கணிப்புக்களை ஒழுங்குமுறைப்படுத்துவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்துவது காலத்தின் தேவையாகும்.
அதேவேளை, வேட்பாளர்கள் தமது பிரசாரங்களுக்காக மேற்கொள்ளக் கூடிய செலவுகள் குறித்த எல்லையொன்றை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளபோதும், பிரசாரங்களுக்கு மேற்கொள்ளப்படும் செலவுகளைப் பார்க்கும்போது அதிகமாகவே தென்படுகின்றது. வேட்பாளர்கள் சார்பில் ஒட்டப்படுகின்ற சுவரொட்டிகள் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். சுவரொட்டிகளை ஒட்டுவது தேர்தல் சட்டத்துக்கு முரணானது எனத் தெரிந்தும் தொடர்ந்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறு ஒட்டப்படும் சுவரொட்டிகளை அகற்றுவதற்கு ஒரு வேலையாளுக்கு 47,000 ரூபாவை செலவுசெய்ய வேண்டியுள்ளது எனப் பொலிஸ் திணைக்களம் கூறிய கருத்தை மேற்கோள்காட்டி ஊடகங்கள் அண்மையில் அறிக்கையிட்டிருந்தன. இவ்வாறு தேவையற்ற செலவுகள் குறித்தும் அரசியல் கட்சிகள் சிந்திப்பது அவசியம்.
பி.ஹர்ஷன்