ன்றிணைவோம், அர்ப்பணிப்போம், வெற்றி பெறுவோம் என்ற ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் கண்டியில் அண்மையில் வெளியிடப்பட்டது. அந்தக் கொள்கை அறிக்கையின் உள்ளடக்கம் பின்வருமாறு.
பலமாக பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல்
“சமூக சந்தை பொருளாதார மாதிரியின் ஊடாக, வளர்ச்சியின் பலன்கள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்து கொண்டு, நியாயமான வளர்ச்சியை ஏற்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துவதோடு, பொருளாதாரத்தை வழமை நிலைக்கு மீட்டெடுத்தல் மற்றும் வளமான அபிவிருத்தியை நோக்கிய பாதையில் வெளிப்படைத்தன்மை, நிலைத்தன்மை மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் பலமாக அமையும் என்பதை உறுதிப்படுத்துவோம்”
வெளிப்படைத் தன்மையும், பொறுப்புக் கூறலும்
வலுவான ஊழல் எதிர்ப்பு சட்டங்களை அறிமுகப்படுத்தல், நீதியை நிலைநாட்டுதல், திருடப்பட்ட சொத்துக்களை மீண்டும் பெற்றுக்கொள்ளல், ஊழலை ஒழிப்பதற்காக வலுவான வேலைத்திட்டங்கள், ஊழல்வாதிகளைச் சட்டத்தின் முன் நிறுவத்துவதற்காக சுயாதீன மக்கள் வழக்குரைஞர் அலுவலகம் அரச நிதி முகாமைத்துவத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தல்.
கடன் நெருக்கடி முகாமைத்துவம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவை ஏழை மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான தற்போதைய திட்டத்தில் திருத்தங்களை முன்வைத்தல்.
நிதி மற்றும் பரிமாற்ற விகிதக் கொள்கை
அந்நிய செலாவணி விகிதம் மற்றும் குறைந்த மற்றும் நிலையான வட்டி விகிதங்களுக்கு உத்தரவாதம்.
வருமான வளர்ச்சியை அடைந்து கொள்ளல்
வருமானத்தை அதிகரித்துக் கொள்ளல், செலவுகள் மற்றும் ஊழலைக் குறைத்துக் கொள்வதற்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தல், நியாயமற்ற வரிக் கட்டமைப்பைத் திருத்தல், வீணான அரச செலவுகள் மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்தல், பாதிக்கப்பட்ட மக்களுக்காக சமூக பாதுகாப்பு வலையமைப்பை நடைமுறைப்படுத்தல் மற்றும் கல்வி, சுகாதாரத் துறைகளை பலப்படுத்தல்.
விவசாய சீர்திருத்தங்கள்
பழைய சட்டங்களை நவீனமயமாக்கல், விவசாய சந்தை வசதிகள் மற்றும் நீர்ப்பாசனம், குளங்களைப் புனரமைத்தல், நிதி மற்றும் காப்புறுதி வசதிகளை வழங்குதல், கிராமப்புற வறுமையை குறைத்தல், உற்பத்தித் திறனை அதிகரித்தல், நிலையான தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை செயற்படுத்துதல்.
அரச துறை முகாமைத்துவம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல்
உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் மூலம் அரச சேவையை புனரமைப்புச் செய்வதற்கான திட்டம், ஊழலை குறைக்கும் அதே வேளையில் முகாமைத்துவம் செய்தல், வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துதல்.
மின்சக்தி மற்றும் பயன்பாட்டு சீர்திருத்தங்கள்
பிராந்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மையமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டு, 2030ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை 70 வீதமாக்கும் இலக்கை அடைதல்.
கமத்தொழில் மற்றும் கால்நடை வள அபிவிருத்தி
விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தல், அத்தியாவசிய கடன் வசதிகள், 5000 ரூபாய்க்கு 50 கிலோ உரம், நெல் உற்பத்திக்கு அதிகபட்ச உத்தரவாத விலை, விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலையைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம், விவசாயப் பகுதிகளில் மொபைல் மற்றும் இணையதள வசதிகள் மேம்படுத்தல், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பினை மேம்படுத்தல், நில பயன்பாட்டு திட்டங்கள்.
காணி, நீர்ப்பாசனம் மற்றும் நீர் முகாமைத்துவம்
அரச காணிகளில் வசிக்கும் காணி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு 5 ஆண்டுகளுக்குள் இலவச காணி உரிமைப் பத்திரங்களை வழங்குதல், நீர் மூலங்கள் மற்றும் நீர் பிடிப்புப் பகுதிகளைப் பாதுகாக்கத் தேவையான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கடல் மற்றும் வான்வழி
களனிவேலி புகையிரதப் பாதை உள்ளிட்ட புகையிரதச் சேவையினை நவீனமயமாக்கல் திட்டங்களை துரிதப்படுத்துதல், பலவழிப்பாதை சுதந்திர போக்குவரத்துக் கட்டமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதிவேக நெடுஞ்சாலைகளின் செயல்திறனை மேம்படுத்துதல்.
கடற்றொழில் மற்றும் நீர் வளங்கள்
மீனவ சமூகத்தின் பொருளாதார பலத்தை அதிகரிக்கும் வகையில் அரச மற்றும் தனியார் வங்கிகள் மூலம் தொழில்முயற்சியாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டத்தை ஏற்படுத்துதல்.
வெளிநாட்டு சட்டவிரோத மீன்பிடி படகுகளின் மூலம் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை இராஜதந்திர ரீதியாக தீர்த்தல் மற்றும் அவறற்றைக் கண்காணிக்க தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துதல்
கைத்தொழில் துறை
மில்லவ, மில்லனிய மற்றும் பிங்கிரிய ஆகிய ஏற்றுமதி செயலாக்க வலயங்களின் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 25 புதிய கைத்தொழில் வலயங்கள், நாடு முழுவதிலும் பசுமை தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையங்களின் வலையமைப்பு, 18+ புதிய நிறுவன திட்டங்கள், புதிய கைத்தொழில்களைப் பதிவு செய்வதற்காக எளிமைப்படுத்தப்பட்ட பல்நோக்கு அலுவலகச் சேவை.
கல்வி, தொழில் பயிற்சி மற்றும் இளைஞர்கள்
அனைத்து ஆசிரியர்களுக்கும் இலவச பொது போக்குவரத்து வசதிகள், நீண்டகாலமாக நிலவி வரும் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சேவைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக 2025ஆம் ஆண்டு ஜனவரி மாத்திற்கு முன்னர் கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொண்டு செயற்பாட்டுத் திட்டங்களை உருவாக்குதல், இலங்கையின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் 100 வீதம் மின்சாரம், நீர் வசதிகள் மற்றும் பௌதீக வளங்களை வழங்குவதன் மூலம் அனைத்துப் பாடசாலைகளையும் வசதிகளைக் கொண்ட பாடசாலைகளாக மாற்றுதல், 6 – 13ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவிகளுக்கு சுகாதாரப் பொருட்களை வாங்குவதற்கான மாதாந்திர உதவித்தொகை, கல்வித் தரம், ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் மாணவர் பரிமாற்ற திட்டங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல்கலைக்கழக இணைப்புத் திட்டங்களுக்கு ஊக்கமளித்தல்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வலுவூட்டல்
மகப்பேறு விடுப்புக்கான செலவை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளல், பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் குறைந்தபட்சம் 25% பெண்களின் பிரதிநிதித்துவம், நுண் கடன் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துதல், ஊழியர் வருங்கால வைப்பு நிதி, ஊழியர் சேமலாப நியத்தின் மூலம் உறுதிப்படுத்தும் 50% க்கும் அதிகமான பெண்களை வேலைக்கு அமர்த்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள்
சுகாதாரம், ஊட்டச்சத்து, சுதேச மருத்துவம் மற்றும் சமூக நலன்
கர்ப்பிணி தாய்மார்கள், சிறு குழந்தைகளுக்கு திரிபோஷா மற்றும் ஊட்டச்சத்துப் பொதிகளை வழங்குதல், பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை செயல்படுத்துதல், 40 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் 03 ஆண்டுகளுக்கு ஒருமுறை விரிவான மருத்துவ பரிசோதனை, “சுரக்சா சுகாதார காப்புறுதி” திட்டத்தை விரிவாக்குதல்.
அரச சேவையை மேம்படுத்தல்
திறமையான மற்றும் பொறுப்புக் கூறும் வகையிலான அரச சேவையை உருவாக்குதல், மனித வள முகாமைத்துவ திட்டத்திற்கு அமைவாக முழு அரச சேவையையும் மறுசீரமைத்தல்.
அரச துறையின் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை 17,800 ரூபாவிலிருந்து 25,000 ரூபாயாக அதிகரித்தல், குறைந்த அடிப்படை மாதச் சம்பளத்தை தற்போது தர நிலைகளுக்கான வீதத்தை 24 வீதமாக உயர்த்தி வாழக்கைச் செலவு கொடுப்பனவுடன் அரச சேவையின் குறைந்த சம்பளத்தை 57,500 ரூபாவாக அதிகரித்தல்.
அரச பாதுகாப்பு
தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டாலும், அமைச்சர்களின் எண்ணிக்கையில் தற்போதுள்ள வரம்பு பொருந்தும். 06 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தல், நீதிமன்றங்களினால் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நபர்களுக்கு நியமனப் பத்திரங்கள் அல்லது அரசாங்கப் பதவி எதுவும் வழங்கப்படாதிருத்தல்
ஊழல் எதிர்ப்புச் சட்டம்
அண்மையில் நிறைவேற்றப்பட்ட 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தைத் துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகள் மற்றும் பயிற்சிகளை வழங்குதல்.
எம். எஸ். முஸப்பிர்