தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள கொள்கைக்கு அமைய செயற்பட்டால் தற்போது செயற்பாட்டில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் முழுமையாக தடைப்பட்டு விடும் என நீங்கள் கூறியுள்ளீர்கள். நீங்கள் அவ்வாறு கூறுவதற்கு என்ன காரணம்?
ஆம், நான் அவ்வாறு கூறக் காரணம், 2020 ஆகஸ்ட் மாதம் IMF இடம் செல்லுமாறு முதலில் கூறியது நான்தான். அப்போது அன்று இந்த தேசிய மக்கள் சக்தியினரும், அரசாங்கத்தில் இருந்தோரும் சிரித்தார்கள். அன்று அவர்கள் IMF இடம் செல்ல வேண்டிய தேவை இல்லை என்றார்கள். அதன் பின்னர் அரசாங்கம் IMF க்குச் செல்ல வேண்டும் என தீர்மானித்த போது நாம் அதனை எதிர்க்கவில்லை. தற்போது இவர்கள் IMF தவிர வேறு மாற்று வழிகள் இல்லை என்கிறார்கள். IMFஇன் ஒப்பந்தத்தில் ஒரு வசனத்தையோ, புள்ளியையோ மாற்ற முடியாது என இப்போது கூறுகின்றார்கள். இந்த சந்தர்ப்பத்தில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு IMF அவசியமாகும். நாம் இதனை ஆரம்பத்திலிருந்தே விளங்கி வைத்திருந்தோம். எனினும் நாம் ஆரம்பத்திலிருந்தே கூறிவந்தோம், IMFஇன் சில நிபந்தனைகள் மக்களை கஷ்டங்களுக்கு உள்ளாக்குவதால் சில விடயங்களை மாற்றுவதற்கு பேச்சுவார்த்தை மேற்கொள்வோம் என. எனினும் எதனையும் மாற்ற முடியாது என அரசாங்கம் கூறியது. IMFஇன் அடிப்படை தொடர்பில் தாம் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக தேசிய மக்கள் சக்தி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது. அவ்விடத்தில்தான் பிரச்சினை உள்ளது. IMFஇன் அடிப்படையாக இருப்பது கடன் செலுத்துவதை நிலைத்தன்மை பகுப்பாய்வாகும். நாம் கடனைச் செலுத்திக் கொள்ள முடியாமலேயே நாம் வங்குரோத்தடைந்தோம். கடன் செலுத்துவதை நிலைத்தன்மையாக்குவதற்கே நாம் IMF இடம் சென்றோம். அதில் அடிப்படை ஒன்றுள்ளது. அந்த அடிப்படையினை ஒரு போதும் மாற்ற முடியாது.
அந்த அடிப்படையை மாற்றினால் IMFஇன் முழு வேலைத்திட்டமும் வீழ்ந்துவிடும். நாம் அடிப்படையை மாற்றம் செய்யாமல் IMF உள்ளடக்கத்தையே மாற்றுவதற்கு எதிர்பார்க்கின்றோம். இந்த ஒப்பந்தத்தில் ஒரு வசனத்தையோ, புள்ளியையோ மாற்ற முடியாது என அரசாங்கம் கூறினாலும் ஜனாதிபதி இப்போது வரியினை மாற்றுவது தொடர்பில் IMF உடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறுகின்றார். அப்படியாயின் அவர்கள் கூறியிருப்பது பொய்தானே.
மக்களுக்கு பொய் கூறாமல் சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி பகிரங்க அழைப்பு விடுத்துள்ளாரே?
ஆம். நாம் தயார். நாம் அதனை ஏற்றுக் கொள்கிறோம். நாம் எந்த நேரத்திலும் விவாதத்திற்குத் தயார். உண்மையில் நாம் கூற வேண்டியிருப்பது இந்த அரசாங்கம் வெளிப்படைத் தன்மையின்றியே இவ்வனைத்து விடயங்களையும் செய்துள்ளது. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் கையொப்பமிட்டு முடிக்கும் வரைக்கும் எமக்கு எதையுமே காண்பிக்கவில்லை. அனைத்தையும் செய்து முடித்துவிட்டு தற்போது விவாதத்திற்கு வருமாறு அழைக்கிறார்கள். நாம் கடன் வழங்குனர்களோடு பேச்சுவார்த்தை செய்யக் கேட்டோம். அதனை வழங்கவுமில்லை. இப்போது நாம் கூறும் விடயங்களை மக்கள் நம்புகிறார்கள் என்பதை அறிந்து கொண்டு விவாதத்திற்கு வருமாறு அழைக்கிறார்கள். நாம் எந்த நேரத்திலும் ஆயத்தமாகவே இருக்கின்றோம்.
IMF நிபந்தனைகளை மாற்ற முடியாது என அரசாங்கம் கூறுகின்றது. அவ்வாறு மாற்றினால் நாடு மீண்டும் வீழச்சியடைந்து விடும் என ஜனாதிபதி கூறுகின்றாரே….?
ஏன் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மாற்ற முடியாது? அதனை மாற்ற எம்மால் முடியும். அடிப்படையினை மாற்றம் செய்யாமல் மக்களுக்கு கஷ்டங்களைக் கொடுக்கும் சில விடயங்களை மாற்றுவதற்கு பேச்சுவார்த்தையினை மேற்கொள்ள முடியும். மாற்ற முடியாது எனக் கூறினாலும் தற்போது ஐ.எம். எப்புடன் வரியினை மாற்றுவதற்கு பேச்சுவார்த்தையை மேற்கொள்கின்றார்கள். அப்படியாயின் இப்போது எப்படி முடிந்தது? ஒரு வரியைக் கூட மாற்ற முடியாது என அவர்கள்தானே கூறினார்கள்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் IMF உடன் எந்த நிபந்தனைகள் தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்பார்க்கின்றீர்கள்?
நாம் IMF உடன் இரண்டு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். IMFஇன் ஒப்பந்தத்திற்கு அமைய எடுத்துக் கொண்டால் பொருளாதாரம் தொடர்பில் தேவையான ஊக்குவிப்புக்கள் அதில் இல்லை.
ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நாட்டை திருப்ப வேண்டிய தேவை எமக்குள்ளது. IMF வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் அதனுள் இருந்து கொண்டே இதனைச் செய்ய வேண்டும். இதில் அடிப்படையினை மாற்ற வேண்டிய தேவை இல்லை.
ஊக்கத்தை எவ்வாறு வழங்குவது மற்றும் முதலீடுகளை எவ்வாறு கொண்டு வருவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்க்கிறோம். இரண்டாவது பிரச்சினை வரி தொடர்பான கொள்கையாகும். இந்த வரி விதிப்பில் அநீதி உள்ளது. அடிப்படையில் உழைக்கும் மக்கள் மீதான வருமான வரி நியாயமற்றது. அதை மாற்ற தேவையான திருத்தங்களை கொண்டு வருவோம்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மாற்ற முடியாதவாறு அதனை நிலையானதாக்கும் வகையில் ஐந்து சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளனவே…?
சில சட்டமூலங்களை நாம் எதிர்க்கவில்லை. உதாரணமாக மத்திய வங்கியை சுயாதீனமாக்கும் சட்டமூலம், பொருளாதார முகாமைத்துவ சட்டம், அரச நிதிக் கட்டுப்பாட்டுச் சட்டம், ஊழல் எதிர்ப்புச் சட்டம் போன்ற சட்டங்களை நாம் எதிர்க்கவில்லை. நாம் எதிர்ப்பது பொருளாதார பரிமாற்றச் சட்டத்தின் ஒரு பகுதியையேயாகும்.
எம். எஸ். முஸப்பிர்