தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அமரர் ஆர்.சம்பந்தனுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் திருகோணமலை மாவட்டத்தை பாரிய அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.
பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தக்ஷிண கைலாயம் என இந்துக்களால் போற்றப்படும் திருகோணமலை திருக்கோணேஸ்வர்ர் ஆலயத்தில் நீண்ட கால குறைபாடாக காணப்பட்ட தேவஸ்தானத்தின் இராஜகோபுத்தை நிர்மாணித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் ஒத்துழைப்புடன் திருகோணமலை மாவட்டம் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படுமென குறிப்பிட்ட அவர் திருக்கோணமலை துறைமுகத்தை பாரிய அபிவிருத்திக்குள்ளா க்குவதுடன் கைத்தொழில் துறை வலயம் சுற்றுலா வலயம் உட்பட பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் இந்த மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் தொடர்ந்தும் தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக குறிப்பிட்ட ஜனாதிபதி “அவருக்கு வழங்கிய வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவேன்” என்றும் தெரிவித்தார்.
‘இயலும் ஸ்ரீலங்கா’ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டம் நேற்று திருகோணமலை நகரில் நடைபெற்றது. இதன் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி திருகோணமலை சிவில் பாதுகாப்பு படையினரின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.
நாட்டின் மிக முக்கியமான துறைமுகமான திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு எந்த அரசாங்கமும் முன்வரவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர் திருகோணமலை துறைமுகம் இந்தியாவின் ஒத்துழைப்புடன் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
திருமலையிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம்