முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் வறுமையை ஒழிக்கும் ஜனசவிய திட்டம் உட்பட கெமிதிரிய, சமுர்த்தி போன்ற திட்டங்களின் சிறந்த விடயங்களை உள்ளடக்கிய புதிய வறுமை ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.பெண் தலைமைத்துவ குடும்பங்கள் முழுமையாக வறுமைக்குள் சிக்கி இருப்பதால் அவர்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்கும் திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. சகலரையும் உள்ளடக்கிய புதிய வறுமை ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2024 ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் 20ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் (27) ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக இரண்டு வருடங்களுக்கு மாதாந்தம் 20,000 ரூபாபடி நிதி உதவி வழங்கி, அதன் மூலம் முதலீடு, நுகர்வு, சேமிப்பு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகிய துறைகளுக்குள் பிரவேசிக்க செய்து 24 மாதங்களில் வறுமையை ஒழிப்பதற்கு ஆவண செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த அரசியல் தலைவர்கள், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் என பெரும் திரளானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்