நல்லூர் கந்தசுவாமி கோயில் தீர்தோற்சவத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் விடுமுறை கோரினால் அதற்கான அனுமதி வழங்கப்படும் என்று வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார். நல்லூர் தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு ஏற்கெனவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடமும் வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸிடமும் சர்வதேச இந்துமத பீடம் கோரிக்கை விடுத்திருந்தது. தேர் திருவிழா நடைபெறும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும். 25 நாட்கள் விரதம் அனுஷ்டித்து விரதத்தை பூர்த்தி செய்பவர்களுக்காக நாளை திங்கட்கிழமை பாடசாலைகளுக்கும் இந்துமதத்தை சேர்ந்த அரசாங்க ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என்று சர்வதேச இந்துமத பீடம் கோரியிருந்தது.
இந்த விடயம் தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சனுடனும் பாபு சர்மா தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு கலந்துரையாடினார்.
இதற்கு பதில் வழங்கிய வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், நல்லூர் தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு யாழ். பாடசாலைகள் விடுமுறைக்கான அனுமதி கோரினால் விடுமுறை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த விடுமுறை வழமையாக வழங்குவதாகவும் வழமை போன்று அனுமதி கோரினால் விடுமுறை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக பாபு சர்மா மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சருக்கும் ஆளுநருக்கும் பாபு சர்மா நன்றி தெரிவித்துள்ளார்.