Home » முழங்கால் மூட்டு வலியா? அவஸ்தைப்பட வேண்டாம்

முழங்கால் மூட்டு வலியா? அவஸ்தைப்பட வேண்டாம்

மயக்கமருந்தோ, வலி நிவாரணியோ, சத்திரசிகிச்சையோ இல்லாமல் நிவாரணம்

by Damith Pushpika
September 1, 2024 6:32 am 0 comment

மனிதன் ஆரோக்கிய ரீதியில் பலவிதமான உபாதைகளுக்கும் பாதிப்புக்களுக்கும் உள்ளாகக்கூடியவனாக உள்ளான். அந்த நோய்களையும் உபாதைகளையும் தொற்று நோய்கள் என்றும் தொற்றா நோய்கள் என்றும் வகைப்படுத்தலாம். அவற்றில் பெரும்பாலானவற்றுக்கு வெற்றிகரமான மருத்துவ விஞ்ஞான சிகிச்சைகள் உள்ளன. ஒரு சில உபாதைகளுக்கான சிகிச்சைகளைக் கண்டறிவதற்கான ஆராய்ச்சிகளும் இடம்பெற்ற வண்ணமுள்ளன.

அந்த வகையில் அண்மைக் காலமாக மனிதன் முகம் கொடுக்கும் முக்கிய உபாதைகளில் ஒன்றாக முழங்கால் மூட்டு வலி விளங்குகிறது. இந்தியா, இலங்கை போன்ற இந்திய துணைக் கண்ட நாடுகளில் வாழும் மக்கள் மத்தியில் இந்த உபாதை காணப்படுகிறது. 40, 50 வயதானதும் முழங்கால் வலி என்று புலம்புபவர்களையும் அந்த வலியால் மாதக்கணக்கில், வருடக்கணக்கில் அவஸ்தைப்படுபவர்களையும் பரவலாக அவதானிக்க முடிகிறது.

‘இந்த உபாதைக்கு சிகிச்சை பெற்றுவருகின்ற பலர் குடல் புண் பாதிப்புக்குக்கூட உள்ளாகியுள்ளனர். ஏனெனில் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் வலி நிவாரணி மாத்திரை முக்கிய இடத்தைப் பெற்றிருப்பதே அதற்கான காரணம்’ என்று இந்தியாவின் சென்னையிலுள்ள மியாட் இன்டர்நெசனல் வைத்தியசாலையின் முகாமைத்துவப் பணிப்பாளர் டொக்டர் பிரித்வி மோகனதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த உபாதைக்கு முழங்கால் மூட்டு மாற்று சிகிச்சை தீர்வாகக் காணப்படுகின்ற போதிலும் அச்சிகிச்சையை எல்லா வயது மட்டத்தினருக்கும் அளிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. அதனால் தான் மயக்கமருந்தோ, வலி நிவாரணி மாத்திரைகளோ, திறந்த சத்திர சிகிச்சையோ மேற்கொள்ளாது முழங்கால் மூட்டு வலிக்கு விரைவாக நிவாரணம் அளிக்கக்கூடிய இச்சிகிச்சை முறை எமது வைத்தியசாலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்கிறார் மியாட் இன்டர்நெசனல் வைத்தியசாலையின் Vascular & Interventional Radiology பணிப்பாளர் டொக்டர் கார்த்திகேயன் தாமோதரன்.

இச்சிகிச்சை தொடர்பில் இலங்கை மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொழும்புக்கு வருகை தந்திருந்த டொக்டர் கார்த்திகேயன் தாமோதரன், இந்த உபாதை குறித்தும் அதற்கான காரணம், அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிகிச்சை குறித்தும் ‘தினகரன் வாரமஞ்சரி’க்கென தெளிவாக எடுத்துக்கூறினார்.

ஒஸ்ரியோ ஆர்தரைடிஸ் (Osteoarthritis) என்பது வயதாகும் போது மூட்டில் தேய்மானம் ஏற்படுவதால் மூட்டிலுள்ள குருத்தெழும்பு காட்டிலிஜ் (Cartilage) தேய்வடைவதன் விளைவாக உருவாகக்கூடியதாகும். இதன் விளைவாகவே மூட்டுவலி ஏற்படுகிறது. இந்த உபாதை முழங்கால் மூட்டில் தான் பெரும்பாலும் ஏற்படக்கூடியதாக உள்ளது. பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த உபாதைக்கு அதிகளவில் உள்ளாகி இருப்பதைக் காணலாம்.

ஏனெனில் இன்றைய நவீன யுகத்தில் இந்திய துணை கண்ட மக்களின் வாழ்க்கை முறை, நடத்தை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் பெரிதும் மாற்றமடைந்துள்ளன.

குருதி பாய்வதை தடைசெய்தல்

குருதி பாய்வதை தடைசெய்தல்

குறிப்பாக பெரும்பாலானவர்கள் உடலை வளைத்து நிமிர்த்தக் கூடிய செயற்பாடுகளிலும் உடற்பயிற்சிகளிலும் ஈடுபடுவதில்லை. அவற்றின் விளைவாக இப்பிராந்திய நாடுகளது மக்கள் மத்தியில் உடல் பருமன் கொண்டவர்களை அதிகளவில் காண முடிகிறது.

உடலின் நிறை அதிகரிக்கும் போது 40 வயதாகும் போதே முழங்கால் மூட்டில் தேய்மானம் ஏற்பட தொடங்குகிறது. அது சொற்ப காலத்தில் முழங்கால் மூட்டு வலியாக வெளிப்படுகிறது. அத்தோடு காலம் செல்லச் செல்ல நடமாட முடியாத நிலையை ஏற்படுத்தி அசைய முடியாத நிலையைக்கூட ஏற்படுத்தி விடக்கூடியதாக உள்ளது இந்த உபாதை.

இந்நோய்க்கு நிரந்தரத் தீர்வாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை காணப்படுகிறது. ஆனால் அதனை எல்லாருக்கும் மேற்கொள்ள முடியாது. குறிப்பாக இளம் வயதினருக்கு இச்சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. ஏனெனில் இச்சிகிச்சையின் போது மாற்றப்படும் செயற்கை மூட்டும் 10– -15 வருடங்கள் வரை தான் செயற்படும். அதன் பின்னர் அதுவும் கூட தேய்வடைந்துவிடும்.

உதாரணமாக 50 வயதுடைய ஒருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அளிக்கும் போது அவருக்கு 65 வயதில் மீண்டும் அதே சிகிச்சையை செய்ய வேண்டும். அது அதிகம் கடினமான சிகிச்சையாக இருக்கும். அதேநேரம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் முழங்கால் மூட்டு தேய்மான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால் அவர்களுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சிபாரிசு செய்யப்படுகிறது.

ஆனால் வயதானவர்களில் பெரும்பாலானவர்கள் இதய நோய், சிறுநீரகப் பாதிப்பு, நீரிழிவு போன்றவாறான தொற்றா நோய்களுக்கு உள்ளாகி இருக்கலாம். அவ்வாறானவர்களுக்கு முழு உடலையும் மயக்குவதும் சத்திரசிகிச்சை மேற்கொள்வதும் இலகுவான காரியமல்ல. அது ஆபத்து மிக்க பணியாகும். அதனால் அவ்வாறானவர்களில் பலருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலையும் காணப்படும். ஏனெனில் அது உயிராபத்து மிக்க சிகிச்சையாகக் கூட அமையலாம்.

இத்தகைய காரணங்களினால் தான் இளம் வயதில் மூட்டுத் தேய்மானம் ஏற்பட்டு மூட்டு வலிக்குள்ளாகி இருப்பவர்களும் தொற்றா நோய்கள் காரணமாக மூட்டு அறுவைசிகிச்சை மேற்கொள்ள முடியாதவர்களும் மூட்டுவலியால் பெரிதும் அவஸ்தைப்படுகிறனர்.

இவ்வாறான சூழலில் தான் மூட்டுவலியினால் அவஸ்தைப்படுபவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு மூட்டு சத்திர சிகிச்சை இன்றி, மயக்க மருந்து வழங்காமல் பாதுகாப்பாக அளிக்கக்கூடிய ஜெனிகியூலர் ஆர்ட்ரி எம்போலிசெசன் (Genicular Artery Embolization) என்ற சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதாவது தொடை எலும்பும் கால் எலும்பும் சேரக்கூடிய இடம் தான் முழங்கால் மூட்டு. இந்த இரண்டு எலும்புகளும் சேருகின்ற இடத்திலுள்ள குருத்தெலும்பு தேய்வடையும் போது இரண்டு எலும்புகளும் உராய்வுக்குள்ளாகி தேய்வடையும். அதன் போது எலும்புக்குள் அழற்சி ஏற்பட்டு அதனுள்ள உள்ள சைனோவியல் திசு (Synovial membrane ) ரணமாகி தடிப்படையும். அதன் விளைவாக புண் ஏற்பட்டு அதிக வலி ஏற்படும். அதேநேரம் இந்த திசு தடிப்படைவதால் அதில் இரத்த ஓட்டம் அதிகரித்து புதிய புதிய நரம்பு நார்கள் உருவாகும். அவை மூட்டு வலி அதிகரிக்க துணைபுரியும். அதன் விளைவாக நடக்க முடியாத நிலையும் ஏற்படும்.

இப்பாதிப்பில் இருந்து நிவாரணம் பெற்றுக்கொடுக்கக்கூடிய வகையில் தான் ஜெனிகியூலர் ஆர்ட்ரி எம்போலிசெசன் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அதாவது இப்பாதிப்புக்குள்ளாகி இருப்பவரின் தொடைப்பகுதியை விறைக்கச் செய்து 2 மி.மீ அளவில் சிறிய துளையை ஏற்படுத்தி கதேட்டர் (Catheter) என்ற சிறிய குழாய்இரத்த நாளத்திற்குள் செலுத்தப்படும். அது எக்ஸ்ரே துணையுடன் முழங்காலைச் சூழவுள்ள குருதி நாளங்களுக்கு கொண்டு செல்லப்படும். அங்கு புதிதாக உருவாகியுள்ள நரம்பு நார்களுக்கு இரத்தத்தை வழங்குவதாக அடையாளம் காணப்படும் இரத்த நாளங்களுக்கு Contrast திரவம் ஊசி மூலம் செலுத்தப்படும். அதன் ஊடாக புதிதாக உருவாகியுள்ள நரம்பு நார்கள் மணல் போன்ற சிறிய துகள்களைக் கொண்டு அடைக்கப்படும். அப்போது சைனோவியல் திசுவில் ஏற்பட்டுள்ள வீக்கம் குறைவடைந்து வலிக்கு நிவாரணம் கிடைக்கப்பெறும். அத்தோடு கதேட்டர் அகற்றப்படும்.

இச்சிகிச்சையை ஒரு மணி நேரத்தில் மேற்கொள்ளலாம். சிகிச்சை முடிவுற்ற பின்னர் சுமார் 6 மணித்தியாலயங்கள் படுக்கையில் ஒய்வில் இருப்பது அவசியம். அதன் பின்னர் எழுந்து நடக்க முடியும். இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 2 முதல் 3 நாட்களுக்குள் முழங்கால் வலிக்கு நிவாரணம் கிடைக்கப்பெறும். அதன் ஊடாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம். இச்சிகிச்சையைப் பெற்றுக்கொள்பவர்கள் 2 முதல் 3 வருடங்கள் முழங்கால் வலியின்றி சாதாரண வாழ்வை வாழலாம் என்றும் சுட்டிக்காட்டினார் டொக்டர் கார்த்திகேயன் தாமோதரன்.

மர்லின் மரிக்கார்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division