ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 20 தினங்களே உள்ளன. தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொருளாதார வீழ்ச்சியில் இருந்து இலங்கைத் தேசம் மீண்டெழுந்ததையடுத்து நடைபெறவிருக்கின்ற தேர்தல் இதுவென்பதால், இத்தேர்தலானது சர்வதேசத்தின் கவனத்தை பெருமளவில் ஈர்த்திருக்கின்றது. ஏனெனில் பொருளாதார மீட்சியை கவனத்தில் கொண்டே வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கப் போகின்றனர்.
தற்போதைய தேர்தல் பிரசாரங்களில் இருவிதமான விடயங்களை கவனத்தில் கொள்ள முடிகின்றது. அதாவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பிரசார உரைகளில், நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காக கடந்த இரு வருடங்களில் தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளை விபரித்துக் கூறுகின்றார். தமது திட்டங்கள் சரியாக இருந்ததனாலேயே பொருளாதாரம் துரித கதியில் மீளக்கட்டியெழுப்பப்பட்டதாக ஜனாதிபதி கூறுகின்றார்.
தமது திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படுமானால், இலங்கைத் தேசம் பொருளாதார வளர்ச்சியின் உச்சத்துக்குச் சென்றுவிடுமென்பதை புள்ளிவிபரங்களுடன் அவர் எடுத்துரைக்கின்றார். அத்திட்டங்களை பூரணமாக நிறைவேற்றுவதற்கு காலஅவகாசம் தேவை என்பதை ஜனாதிபதி சுட்டிக்காட்டுகின்றார்.
ஜனாதிபதியின் பிரசாரங்கள் இவ்வாறிருக்கையில், எதிரணியினரின் அறிவிப்புகள் வேறுவிதமான இருக்கின்றன. தற்போதைய அரசாங்கம் கடைப்பிடிக்கின்ற அத்தனை திட்டங்களையும் மாற்றியமைக்கப் போவதாக எதிரணி வேட்பாளர்கள் தமது பிரசாரங்களில் கூறிவருகின்றனர். அதாவது சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்படிக்கைகளையும் தாங்கள் மீளாய்வு செய்யப் போவதாக அவர்கள் கூறுகின்றனர்.
எதிரணி வேட்பாளர்களின் வாக்குறுதிகள் சாத்தியமாகுமா என்பதில் மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாதபடி பரவலான சந்தேகங்கள் நிலவுகின்றன. சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் மாற்றியமைக்கப்படக் கூடியதா என்பது முதலில் தோன்றும் வினா!
அதேவேளை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து இன்னுமே முழுமையாக மீண்டெழாத நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியின்றி இலங்கை முன்னோக்கிப் பயணம் செய்வது எவ்வாறு?
பொருளாதார வீழ்ச்சியுற்ற நாடொன்றில் தலைமைத்துவ முன்னனுபவம் இல்லாத கட்சித் தலைவர்களால் எவ்வாறு நாட்டை வழிநடத்த முடியும்?
ஆட்சி நடத்துவதை முதலில் கற்றுக் கொள்வதற்கும், அதன் பின்னர் ஆட்சி நடத்துவதற்குமான நிலைமையிலா எமது தேசம் இன்று உள்ளது?
இவையெல்லாம் மக்கள் மத்தியில் தற்போது தோன்றுகின்ற வினாக்கள் ஆகும்.
தேர்தல் பிரசாரங்களில் வாக்குறுதிகளை முன்வைப்பதில் தவறில்லை. ஆனால் அவ்வாக்குறுதிகளை நிறைவேற்றும் வழிமுறைகளையும் மக்களுக்கு விளக்குவதே உசிதமாகும். இல்லையேல் வாக்குறுதிகள் தொடர்பான சந்தேகம் மக்கள் மத்தியில் தோன்றுவது தவிர்க்க முடியாதது.