செலான் வங்கி ஜூன் 30, 2024இல் முடிவடைந்த ஆறு மாதங்களுக்கு (H1) ரூ. 4,558 மில்லியன் வரிக்குப் பின்னரான இலாபத்துடன் (PAT) வலுவான செயற்திறனைப் பதிவுசெய்தது.
இது 2023ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட ரூ. 2,575 மில்லியனிலிருந்து குறிப்பிடத்தக்க 77% வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.
சவாலான சந்தை நிலவரங்கள் இருந்தபோதிலும் வரிக்கு முன்னரான இலாபம் (PBT) முன்னைய ஆண்டை விட 76% அதிகரிப்பைக் காட்டி ரூ. 7,331 மில்லியனை எட்டியது. வங்கியின் நிகர வட்டி வருமானம் ரூ. 20,468 மில்லியனிலிருந்து ரூ. 18,590 மில்லியனாக 9.18%ஆல் குறைவடைந்ததுடன் நிகர வட்டி மிகை 5.76% இலிருந்து 5.17% ஆகக் குறைந்துள்ளது.
நிகர கட்டண அடிப்படையிலான வருமானம் 6.29%ஆல் அதிகரித்தது. இது முதன்மையாக அட்டைகள் தொடர்பான வருமானம், பணம் அனுப்புதல் மற்றும் பிற கடன் சேவைகள் ஆகியவற்றினூடான வருமான அதிகரிப்பின் பிரதிபலிப்பு ஆகும்.
மொத்த தொழிற்பாட்டு வருமானம் ரூ. 23,279 மில்லியனாக இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 5.41% குறைவை காட்டுவதுடன் பெரும்பாலும் நிகர வட்டி மிகையின் குறைவே காரணம் ஆகும்.
விற்பனைக்கான தேறிய இலாபம் மற்றும் நிதிச் சொத்துக்களின் அங்கீகார நீக்கத்திலிருந்தான நிகர இலாபம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிற வருமானம் 52%ஆல் உயர்ந்துள்ளது.
வங்கியின் செயற்பாட்டுச் செலவுகள் ரூ. 9,128 மில்லியனிலிருந்து ரூ, 10,388 மில்லியனாக 13.80%ஆல் அதிகரித்துள்ளது.