நாட்டின் முதன்மை கடன் தகவல் ஆணையகமான, இலங்கை கடன் தகவல் பணியகம் (CRIB), வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுடனான மூலோபாய ஒத்துழைப்பு மூலம் கடன் மதிப்பெண்கள் மற்றும் அறிக்கைகளின் டிஜிட்டல் அணுகலை விரிவுபடுத்துகிறது. ஆரோக்கியமான கடன் சுயவிவரத்தை பராமரிப்பதில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான அதன் தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, CRIB இப்போது தனிநபர்கள் தங்கள் கடன் அறிக்கைகளை CRIB இணையதளம் அல்லது அவர்களின் சொந்த வங்கி பயன்பாடுகள் மூலம் எளிதாகப் பெற அனுமதிக்கிறது.
குறிப்பிடத்தக்க சமீபத்திய வளர்ச்சியில், CRIB ஆனது வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்த மக்கள் வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த ஒத்துழைப்பின் மூலம், மக்கள் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் CRIB அறிக்கை (MyReport) மற்றும் கடன் மதிப்பெண்களை வங்கியின் ‘People’s Pay’ டிஜிட்டல் பணப்பை மூலம் நேரடியாக அணுக முடியும். ஒரு எளிமையான பதிவு மற்றும் கோரிக்கை மூலம் செயல்முறையை நெறிப்படுத்த முடியும். மேலதிக சரிபார்ப்புகளோ ஆவணங்களோ தேவையில்லை.
இந்த விரிவாக்கப்பட்ட அணுகல்தன்மை, கடன் வழங்குபவர்களுக்கும் கடன் வாங்குபவர்களுக்கும் இடையே உள்ள தகவல் இடைவெளியை (தகவல் சமச்சீரற்ற தன்மை) குறைக்க CRIB இன் தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாகும், இதன் மூலம் மேம்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் கடன் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.