இஸ்ரேலுக்கான விமான சேவையை 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை இடைநிறுத்துவதாக அமெரிக்கன் விமான சேவை நிறுவனம் கடந்த ஞாயிறன்று அறிவித்தது. அதேநேரம் கதே பசுபிக், ஈசிஜெட் ஆகிய விமான நிறுவனங்களும் அடுத்தாண்டு மார்ச் வரை டெல்அவிவுக்கான விமான சேவையை நிறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளன. இந்நிறுவனங்களின் இந்த தீர்மானங்கள் உலகளவில் அதிக கவனத்தைப் பெற்றனவாக உள்ளன.
காஸா மீது இஸ்ரேல் கடந்த 10 மாதங்களாக முன்னெடுக்கும் யுத்தத்தை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் கடந்த காலங்களில் இல்லாத முன்னேற்றங்கள் கடந்த 15 ஆம், 16 ஆம் திகதிகளில் டோஹாவில் நடந்த பேச்சுக்களில் ஏற்பட்டதாக அமெரிக்கா, கட்டார், எகிப்து ஆகிய நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டன. ஆனால் அப்பேச்சுவார்த்தையில் ஹமாஸ் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டோஹா பேச்சுவார்த்தையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையின் பின்புலத்தில் காஸாவில் யுத்தநிறுத்தம் விரைவில் ஏற்படும் என்ற நம்பிக்கை பரவலாக ஏற்பட்டது. இவ்வாரப் பேச்சுவார்த்தையோடு யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெறும் என்று அமெரிக்கா தெரிவித்தது.
இவ்வாரப் பேச்சுவார்த்தையை எகிப்தின் தலைநகரில் நடத்துவதற்கும் கடந்த வாரமே முடிவு செய்யப்பட்டதோடு இஸ்ரேல் தரப்பில் மொசாட் தலைவர் டேவிட் பார்னியா, உள்நாட்டு பாதுகாப்பு சேவையின் தலைவர் ரோனென் பார், இராணுவத்தின் பணயக்கைதிகள் கோப்புத் தலைவர் நிட்சன் அலோன் ஆகியோர் இப்பேச்சுவார்த்தையில் பங்குபற்றுவர் என இஸ்ரேலும் அறிவித்தது.
இப்பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்களின் பின்னணியில் ஈரான், ஹமாஸின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியேயின் படுகொலைக்கு பழிவாங்கப்படும் என்று கூறிவருகின்ற போதிலும், தாக்குதல்களை தாமதப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை யெமனின் ஹுதிக்கள், காஸா ஆக்கிரமிப்பை நிறுத்துவதற்கும், முற்றுகையை அகற்றுவதற்கும், இஸ்ரேலிய சிறைகளில் இருந்து பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்கும் முன்னெடுக்கப்படும் எந்தவொரு உடன்பாடும் வரவேற்கத்தக்கது என்றுள்ளனர்.
இப்பின்புலத்தில் கடந்த ஞாயிறன்று மத்திய கிழக்குக்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன், திங்களன்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாகு, ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினார். இதில் பிரதமருடன் மாத்திரம் 3 மணித்தியாலயங்கள் மூடிய அறையில் பேச்சு நடாத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
‘இம்முறை காஸாவில் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்தியே தீருவோம்’ என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டார். இஸ்ரேலிய பிரதமருடனான பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த இராஜாங்கச் செயலாளர் பிளிங்கன், ‘இதுவே இறுதிச் சந்தர்ப்பம். காஸா யுத்தநிறுத்தம் தொடர்பில் தீர்க்கமான கட்டத்தில் உள்ளோம். ஜனாதிபதி பைடனின் அறிவுறுத்தல்களின் பேரில் தீவிர இராஜதந்திர முயற்சியின் ஒரு பகுதியாக நான் இங்கு வந்துள்ளேன். எல்லோரும் ஆம் என்று சொல்ல வேண்டிய நேரம் இது. இல்லை என்று சொல்வதற்கு எந்த சாக்குகளையும் தேட வேண்டாம். இம்முயற்சி தடம்புரளும் எந்த நடவடிக்கையையும் யாரும் எடுக்க வேண்டாம்’ என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து காஸா யுத்தநிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கான மத்தியஸ்தர்களாக செயற்படும் எகிப்துக்கும் டோஹாவுக்கும் அவர் பயணமானார். ஆனால் இராஜாங்கச் செயலாளர் பிளிங்கன் இஸ்ரேலில் இருந்து வெளியேறிய சில மணித்தியாலயங்களில் பிரதமர் நெதன்யாகு, தமது படைகள் எகிப்துக்கும் காஸாவுக்கும் இடைப்பட்ட பிலடெல்பி நுழைவாயில், வடக்கு காஸாவையும் தெற்கு காஸவையும் பிரிக்கும் நெட்சாம் பகுதி என்பவற்றில் இருந்து வெளியேறாது’ என்றுள்ளார்.
அதேநேரம் டோஹாவில் இறுதியாக நடந்த பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் பங்குபற்றாத போதிலும், அப்பேச்சுவார்த்தை தொடர்பில் மத்தியஸ்தர்கள் ஊடாக ஹமாஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அமெரிக்க ஜனாதிபதியின் யோசனை மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட பிரரேரணைக்கு அப்பால் இஸ்ரேலிய பிரதமர் புதிய நிபந்தனைகளை உள்ளடக்கியுள்ளதாக அறிய முடிகிறது. ரஃபா கடவை, 14 கிலோ மீற்றர் நீளமான பிலடெல்பி நுழைவாயில், வடக்கு காஸாவையும் தெற்கு காஸாவையும் இணைக்கும் 07 கிலோ மீற்றர் நீளமான நெட்சரிம் பாதை ஆகியவற்றில் இருந்து படைகளைத் திரும்ப பெறுவதில்லை. தெற்கில் இருந்து வடக்கு நோக்கி இடம்பெயர்ந்து திரும்பும் மக்களை பரிசோதித்தல், ஒப்புக்கொள்ளப்பட்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் மாற்றங்கள் என்பன அவற்றில் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. இவை ஏற்றுக்கொள்ளத்தக்க நிபந்தனைகள் அல்ல என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில் காஸாவில் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துவற்கு இஸ்ரேலினதும் ஹமாஸினதும் நிலைப்பாடுகள் சாதகமாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்த உச்சபட்ச முயற்சிகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் காஸா, மேற்குகரை, லெபனான் என்பவற்றின் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் சிறிதளவேனும் குறைத்ததாக இல்லை. அத்தோடு போராளிக்குழுக்களும் தாக்குதல்களை முன்னெடுக்கவே செய்கின்றன. யுத்தநிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் சூழலிலும் காஸாவின் டயர் அல் பலாஹ் பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களை வெளியேறுமாறு அறிவித்துள்ள இஸ்ரேல், காஸாவில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள பாடசாலைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. அத்தோடு தெற்கு லெபனானிலும் தாக்குதல் இடம்பெற்ற வண்ணமுள்ளன. இத்தாக்குதல்களினால் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.
கைதிகள் பரிமாற்றத்திற்கான யுத்தநிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவிக்கின்ற இஸ்ரேல், ‘எந்தவொரு ஒப்பந்தமும் போர் தொடர்வதை கட்டுப்படுத்தக் கூடாது’ என்று கூறிவருகிறது. மேலும் 15 ஆயிரம் ரிசர்வ் படையினருக்கு மீண்டும் அழைப்பு விடுத்திருக்கிறது இஸ்ரேல்.
அவரச தேவைகளின் நிமித்தம் ஹைபாவிலுள்ள நிலக்கீழ் வாகனத் தரிப்பிடத்தை வைத்தியசாலையாக மாற்றியுள்ளது. இடம்பெயரும் மக்களை தங்க வைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளும் அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்ட வண்ணமுள்ளன.
இவ்வாறான சூழலில் 20 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை இஸ்ரேலுக்கு விற்பனை செய்ய அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் அனுமதி வழங்கியுள்ளார். இதற்கேற்ப எப் 15 யுத்த விமானங்கள், அதற்குத் தேவையான உபகரணங்கள், மேம்படுத்தப்பட்ட ஏவுகணைகள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் பலவும் இஸ்ரேலுக்கு வழங்கப்பட உள்ளன.
ஆனால் காஸா மீதான யுத்தம் ஆரம்பமானது முதல் பல பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை அமெரிக்க ஏற்கனவே இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளது. இந்த ஆயுத விற்பனை தொடர்பில் குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களைச் சமாளித்து அதன் பாதுகாப்பை வலுப்படுத்தவும் அதன் திறன்களை மேம்படுத்தவும் பிராந்திய அச்சுறுத்தல்களைத் தடுக்கவும் இவை வழங்கப்படுகின்றன’ என்றுள்ளது.
இதேவேளை இஸ்ரேலை ஈரான் தாக்கும் என்ற அச்சுறுத்தல் நீடித்து வருகின்ற பின்னணியில், யுத்தக் கப்பல்கள், விமானந்தாங்கிக் கப்பல்கள், அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பல்கள், யுத்த விமானங்கள் என்பவற்றை வளைகுடா, மத்திய தரைக்கடல், செங்கடல், அரபுக்கடல் உள்ளிட்ட மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அமெரிக்கா நகர்த்தியுள்ளது. உளவுப் பணியில் ஈடுபடும் விமானங்களும் ட்ரோன்களும் காஸா, லெபனான் உள்ளிட்ட வான்பரப்பில் பறந்த வண்ணமுள்ளன.
இவ்வாறான கொதிநிலைக்கு மத்தியில் அமெரிக்கன் விமான சேவை உள்ளிட்ட சில விமான சேவைகள் அடுத்தாண்டு மார்ச், ஏப்ரல் வரை இஸ்ரேலுக்கான விமான சேவையை நிறுத்த எடுத்துள்ள தீர்மானத்திற்கான காரணத்தை அந்நிறுவனங்கள் குறிப்பிடவில்லை என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அப்படியென்றால் நீண்டதொரு யுத்தத்திற்கு இஸ்ரேல் தயாராகிறதா என்ற கேள்வியும் எழவே செய்கிறது. ஏற்கனவே பத்து மாதங்களாக இடம்பெறும் யுத்தம் காரணமாக பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன. உயிரிழப்புக்கள் மாத்திரமல்லாமல் பொருளாதார ரீதியிலான இழப்புக்களும் ஈடுசெய்ய முடியாதவை. குறிப்பாக காஸா, மேற்கரையிலும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த யுத்தம் ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெற்றோரையும் உறவினர்களையும் இழக்க வழிவகை செய்துள்ளது. பெரும்பாலான குடும்பங்கள் சிதைவடைந்துள்ளன.
இந்த யுத்தம் ஏற்படுத்தியுள்ள அழிவுகளும் சேதங்களும் பாதிப்புக்களும் இலகுவில் சீர்செய்து விடக்கூடியவை அல்ல. அதனால் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பினரும் மனித நேயத்துடன் செயற்பட வேண்டும். அதுவே அமைதி சமாதானத்தை விரும்பும் அனைத்து தரப்பினரதும் எதிர்பார்ப்பாகும்.
மர்லின் மரிக்கார்