• மக்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலும் தேவையான அனைத்தையும் வழங்கிய தலைவர்.
• எரிவாயு சிலிண்டரே இந்த சந்தர்ப்பத்தில் இருக்கும் வலுவான சின்னமாகும்.
• சொல்லாமல் சம்பளத்தை அதிகரிப்பவர் ஜனாதிபதி.
ஜனாதிபதி தேர்தல் களத்தில் தற்போதைய ஜனாதிபதிக்கு இணையான தலைவர் இல்லை என நீங்கள் கூறுகின்றீர்களே…?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இணையான எந்தவொரு வேட்பாளரும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவில்லை. இது ஒரு இனத்திற்கோ, மதத்திற்கோ, சாதிக்கோ ஒரு தலைவனைத் தேடும் பயணமல்ல. நாம் ஒரு நாட்டிற்கு தலைவனைத் தேடுகிறோம். இலங்கையின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கு தலைமைத்துவம் தேவை. பல வருட பாராளுமன்றப் பதவியும் இரண்டு வருட ஜனாதிபதி அனுபவமும் கொண்டவர் என்ற வகையில் அவருக்கு இணையானவர்கள் எவருமில்லை. இதனை இலங்கை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிந்தித்துச் செயற்பட வேண்டும். வருங்கால சந்ததியைப் பற்றி சிந்தித்துச் செயற்பட வேண்டும். உலக அளவில் இலங்கையை உயர்த்துவதற்கு அக்கறை காட்ட வேண்டும்.
அவர் செய்த செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த எந்த வேட்பாளராலும் முடியாது என்றா நீங்கள் கூறுகின்றீர்கள்?
ஆம். இலங்கைத் தாய் இருந்தது அதி தீவிர சிகிச்சைப் பிரிவிலாகும். நோயாளி வைத்தியசாலையில் இருக்கும் போது வைத்தியர் மாற்றப்பட்டால் என்ன நடக்கும்? அப்போது நோயாளியின் நோய் தீவிரமாகும். எமது நாட்டின் தலைமைத்துவம் மாறினால் மோசமான நிலை ஏற்படக் கூடும்.
தற்போதைய ஜனாதிபதியின் பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் போதும் கூட அதிகளவான அரச ஊழியர்கள் உள்ளிட்ட பெருமளவானோருக்கு சம்பளத்தை அதிகரிப்பதற்கும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளாரே?
இது மிகவும் முக்கியமான கேள்வியாகும். சர்வதேச ரீதியில் எமக்கு ஆதரவளிக்கும் குழுக்களிடமிருந்து பெறப்படும் தகவல் முறைமையின் ஊடாகவே அவர் இந்த சம்பள அதிகரிப்பை செய்யவுள்ளார். பொதுமக்கள் அவரிடம் கேட்காவிட்டாலும், பொதுமக்களின் சிரமங்கள் தொடர்பில் அவருக்கு இருந்த புரிதலின் காரணமாக மக்களுக்குத் தேவையானதைக் கொடுத்த தலைவர் அவர். பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள 25 இலட்சம் குடும்பங்களின் கணக்கில் 15,000 ரூபாய் வீதம் வைப்பிலிட்டு வருகிறார். இலங்கையின் அரச துறையில் பணியாற்றும் 15 இலட்சம் ஊழியர்களில் நிறைவேற்றுத் தரத்தைச் சேர்ந்த 20,000 பேரின் சம்பளம் 25,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 14,800,000 பேருக்கு சம்பள உயர்வு கிடைக்கவில்லை. இந்தக் குழு பலவீனமடைந்தால், பொருளாதார மாற்றச் சட்டத்தின் இலக்குகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாது. தனியார் துறையில் பணிபுரியும் சுமார் 65 இலட்சம் பேருக்கு ஈ.டி.எஃப்., ஈ.பி.எஃப். ஊடாகவும், செயற்றிறன் அடிப்படையிலும் சம்பளம் அதிகரிக்கப்படுகிறது. அதிர்ஷ்டசாலிகளாக இருப்பது சுயதொழில் செய்பவர்கள்தான். எனவே, இந்த ஏற்றத்தாழ்வு சமநிலையை அடைய வேண்டும். மிகவும் சிரமத்திற்குள்ளாகியிருப்பவர்கள் அரச துறையில் இருக்கும் 15 இலட்சம் பேராகும். ஜனாதிபதி சொல்லாமல் சம்பளத்தை அதிகரிகக் கூடியவர். அவர்களின் சம்பளத்தை 25 ஆயிரம் ரூபாவால் அதிகரித்தல் மற்றும் அரசாங்க இயந்திரத்தில் நிலவும் சம்பள ஏற்றத்தாழ்வுகளை மாற்றவும் தனியான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மிகவும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள தரப்பினரின் சம்பளம் ஜனவரி மாதம் முதல் 25,000 ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டும்.
ராஜபக் ஷக்களின் விலகல் தேர்தல் பிரசாரத்தில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?
இது தொடர்பில் என்னால் எதனையும் கூற முடியாது. அவர்கள்தான் ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்நாட்டை ஒப்படைத்தவர்கள். அந்நேரம் யாரும் நாட்டைப் பொறுப்பேற்காத, பொறுப்புக்களைத் தட்டிக்கழித்த சந்தர்ப்பத்திலேயே ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றார்.
ராஜபக் ஷக்கள் வெளியேறியதையடுத்து தாய் வீட்டிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். எதிர்காலத்தில் இந்த நிலையில் முன்னேற்றத்தைக் காண முடியுமா?
ராஜபக் ஷக்கள் இருப்பது அல்லது இல்லாமல் இருப்பதை ஒரு முக்கிய காரணியாக நான் பார்க்கவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 16 முக்கியஸ்தர்கள் இதுவரை எங்களுடன் இணைந்துள்ளனர். இன்னும் வருவார்கள். இந்த தேர்தல் பிரசாரம் முழுக்க முழுக்க மக்களால் மேற்கொள்ளப்படுகிறது.
வரும்நாட்களில் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து இன்னும் பலர் உங்களுடன் இணைந்து கொள்வதற்கான சாத்தியங்கள் உள்ளனவா?
ஆம். நிச்சயமாக உள்ளது. ஏராளமான நடுத்தர, கிராம, உயர்மட்டங்களைச் சேர்ந்த தரப்பினர் எங்களுடன் இணைந்து கொள்ள தயாராக உள்ளனர்.
தற்போதைய ஜனாதிபதியின் வெற்றிக்காக அவரைச் சுற்றித் திரண்டிருப்பது ஐக்கிய தேசியக் கட்சியினரை விட பொதுஜன பெரமுனவினைச் சேர்ந்தவர்களேயாகும். அவர்களுடன் வரவிருக்கும் தேர்தல் திட்டம் எவ்வாறு இருக்கிறது?
அது தவறானது. உதாரணமாக 2022 மே 12ஆம் திகதி இந்நாட்டின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க கடமைகளைப் பொறுப்பேற்ற போது கூறிய விடயம், “நாம் பிரிந்திருந்தது போதும். இந்தப் பிரச்சினையை நான் தீர்த்துத் தருகிறேன். அனைவரினதும் ஒத்துழைப்பும் எனக்கு வேண்டும்” என்பதாகும். பாராளுமன்றத்தின் அனைத்து அரசியல் கட்சிகளினதும் 134 வாக்குகளை அவருக்கு வழங்கி இணக்கப்பாட்டிற்கு வந்தோம். அந்த இணக்கப்பாடு என்னவென்றால், தேசிய கட்டமைப்புக்குள் இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றுபட்டுச் செயற்படுவதாகும். ஒற்றுமையினால் அன்று நாம் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டோம். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட எந்த தடையும் இல்லை. அதற்கான முன்னுதாரணங்கள் வரலாற்றில் உள்ளன.
அரசியல் கட்சித் தாவல்களால் மக்களும், கட்சி ஆதரவாளர்களும் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளார்கள் என நீங்கள் நினைக்கவில்லையா?
சந்திரிகா குமாரனதுங்கவின் ஆட்சிக்காலத்தில் பிரதம நீதியரசர் வழங்கிய தீர்ப்புகளினாலேயே இந்த நிலை ஏற்பட்டது. இவ்வாறான நிலைமை மாற வேண்டும். இதற்கு அரசியலமைப்பில் திருத்தங்கள் தேவை.
எதிர்காலத்தில் சில மாற்றங்கள் செய்யப்படவே வேண்டும். எனக்கு நினைவிருக்கும் வரையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் சுமார் நூற்று முப்பது முறை மாற்றப்பட்டுள்ளது. எனவே, தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அவர் தெரிவு செய்துள்ள தேர்தல் சின்னம் தொடர்பிலும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றனவே? ஏன் அவ்வாறான சின்னம் தெரிவு செய்யப்பட்டது?
அதற்கான அடிப்படை ஒன்றுள்ளது. அரசியல் கட்சிகளின் சின்னங்கள் மக்களுக்கு நினைவில் உள்ளது. அரசியல் கட்சிகளின் சின்னங்களை விட, மக்கள் தாம் பாதிக்கப்பட்டு தேடிச் சென்ற எரிவாயு சிலிண்டர் நன்றாக நினைவில் உள்ளது. அதுவே இந்த நேரத்தில் சக்தி வாய்ந்த அடையாளமாக அது உள்ளது. பொதுமக்களின் மனதில் பதிந்துள்ள சின்னம். மக்கள் இதனைத் தோளில் சுமந்துசென்று வீதியில் இறந்த சம்பவங்களும் உண்டு. மக்களின் இதயங்களில் எரிவாயு சிலிண்டர் உள்ளது.
எம். எஸ். முஸப்பிர்