• யாருக்கு வாக்களிப்பது என இன்னும் முடிவு செய்யாத 40% பேர் மூலமாக நாம் அலையை உருவாக்க வேண்டும்.
• நாங்கள் வேறுபட்ட மூலோபாய திட்டத்தை முன்வைத்துள்ளோம்.
மக்களின் வேட்பாளர் நீங்களே என்றும், ஏனைய வேட்பாளர்கள் அதிகாரத்தைப் பெறுவதற்காக மட்டுமே போட்டியிடுவதாகவும் நீங்கள் கூறுகிறீர்கள். நீங்கள் எவ்வாறு மக்கள் வேட்பாளரானிர்கள்?
எமது இலங்கையின் அரசியலை நாம் தொடர்ந்து அவதானிப்போமேயானால், அனேகமாக எந்தவொரு வேட்பாளரும் பெரும்பாலும் கொள்கை விளக்கங்களை வழங்கியிருந்தாலும் அவர்கள் வரலாறு முழுவதிலும் அவற்றை நிறைவேற்றியிருக்க மாட்டார்கள்.
நாங்கள் அதற்கு முற்றிலும் வேறுபட்ட மூலோபாய திட்டத்தை முன்வைத்துள்ளோம். நாம் தேர்தல் விஞ்ஞாபனத்திற்குப் பதிலாக மூலோபாயத் திட்டத்தையே முன்வைத்துள்ளோம். இந்த இரண்டுக்கும் இடையிலான வித்தியாசமாக இருப்பது மூலோபாயத் திட்டத்தை முன்வைப்பது எப்படி? எப்போது? என்பதாகும். அவ்வாறு நடக்காவிட்டால் என்னவாகும் என்ற நிலைப்பாடாகும். அவ்வாறு நடக்காவிட்டால் இந்த அறிக்கையை சட்ட ஆவணமாக கருதி சட்ட நடவடிக்கையும் கூட எடுக்கும் நிலை ஏற்படும். இவற்றையெல்லாம் மக்கள் பக்கத்திலிருந்து செய்ய முடியும்.
அதற்குத் தேவையான ஏற்பாடுகள் எங்கே உள்ளன? அவற்றை எவ்வாறு செயற்றிறன்மிக்க வகையில் பயன்படுத்துவது? என்ற விடயங்களை நாம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளோம். இதனால்தான் நான் மக்கள் வேட்பாளர் என்கிறேன்.
மற்றைய வேட்பாளர்கள் மக்களுக்காக நிற்கவில்லை என்றா கூறுகின்றீர்கள்?
ஆமாம். இந்த பிரதான மூன்று கட்சிகளும் சரியான வேலைத்திட்டங்களை இன்னமும் முன்வைக்கவில்லை. எதிர்வரும் நாட்களில் அவர்கள் முன்வைப்பார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம். அவ்வாறு முன்வைக்கப்படும் வேலைத்திட்டங்கள் பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமலேயே முன்வைக்கப்படும் வேலைத்திட்டங்கள் என்பது தெளிவானது. நாங்கள் இரண்டு வரைவுகளை சமர்ப்பித்துள்ளோம். 7 கட்சிகள் இணைந்து தயாரித்த ஆவணத்தை மக்களிடம் கொண்டு சென்று கருத்துகளைப் பெற்றுக் கொண்டோம். தற்போது இரண்டாவது வரைவினை முன்வைத்துள்ளோம். இதனை அறிஞர்கள் மற்றும் நிபுணர்களிடம் சமர்ப்பித்துள்ளோம். மக்களிடமிருந்து வெளிப்பட்ட மூலோபாய திட்டத்தில் இருந்து கொண்டுதான் செயல்படுவோம் என்பது தெளிவாகிறது. ஆனால் மற்றைய வேட்பாளர்கள் அவ்வாறு சிந்திப்பதில்லை. எனது முன்வைப்பானது மக்களுக்கு மகிழ்ச்சியான ஒரு சூழலை உருவாக்குவதற்கேயாகும்.
நீங்கள் ஒரு தொழில் முயற்சியாளர். நாட்டை ஆட்சி செய்வதற்குத் தேவையான அனுபவம், ஆற்றல் உங்களிடம் இருக்கின்றது என நீங்கள் நம்புகின்றீர்களா?
என்னிடத்தில் தொழில் முயற்சி அனுபவங்கள் உள்ளன. அதேபோன்று நான் மறைமுக அரசியலில் ஈடுபட்ட ஒருவராகும். மூன்று ஜனாதிபதி தேர்தல்கள் உட்பட 5 தேர்தல்களில் செயற்பட்டுள்ளேன். அதற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மிகுந்த அனுபவத்தைக் கொண்டவன் நான். மற்றைய எல்லா வேட்பாளர்களை விடவும் நான் முன்னணியில் இருக்கிறேன் என்பதோடு, இந்த விவகாரங்களை நிர்வகிப்பதில் எனக்கு நிறைய அனுபவம் உள்ளது.
நாட்டை ஆட்சி செய்வதற்கான அனுபவம் உங்களிடம் இருக்கின்றது என்றா நீங்கள் கூறுகின்றீர்கள்?
ஒரு ஜனாதிபதியிடம் இருக்க வேண்டிய பாரம்பரியமாகக் கூறப்படும் அரசியல் அனுபவத்தை நான் முக்கியமற்ற ஒரு காரணியாகவே கருதுகிறேன். நான் சுமார் 30 வருடங்களாக தனியார் நிறுவனங்களில் செயற்பட்டிருக்கின்றேன். அதில் நான் நிர்வாகத் திறமையை நிரூபித்த ஒருவனாவேன். மிகவும் கடினமான சூழ்நிலைகளை முகாமைத்துவம் செய்து வெற்றி பெற்றிருக்கின்றேன்.
அந்த அறிவினை அரசியலில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றே நான் நினைக்கிறேன். மறுபுறம், அரசியல் அனுபவம் இல்லை என்பது தைரியம் இல்லை என்பதுதானே.. இந்த அப்பாவித்தனம்தான் அரசியலுக்கு ஏற்பட்ட விதியாகும். தந்திர வேலைகளைச் செய்வதற்கு நான் விரும்பவில்லை. எனது அனுபவத்தை பயன்படுத்தி மக்களுக்கு சிறந்த அரசியலை உருவாக்க வேண்டும் என்பதே எனது நம்பிக்கையாகும்.
மற்றைய முக்கிய வேட்பாளர்கள் மக்களுக்காக சில சில விடயங்களைச் செய்திருக்கின்றார்கள். அவ்வாறு மக்களுக்கு நீங்கள் என்ன செய்திருக்கின்றீர்கள்?
”மனுசத் தெரண” போன்ற பாரிய சமூக நலத்திட்டத்தின் நிறுவனர் நான். இது கிட்டத்தட்ட 6000 கிராமங்களை உள்ளடக்கியது. இவை மக்களின் துன்பத்தை குறைக்கும் வேலைத்திட்டங்கள் தான். பிரபலமாக இல்லாவிட்டாலும் தனிப்பட்ட முறையில் நிறைய பணத்தை பொது வேலைகளுக்காகச் செலவிட்டுள்ளேன். நான் அரசுக்கு வரி செலுத்துபவன். எந்த ஒரு வேட்பாளரும் வரி செலுத்துபவர்கள் அல்ல.
நான் கோடிக்கணக்கான வரியையும், ஈடிஎஃப், இபிஎஃப் வரிகளையும் செலுத்தியுள்ளேன். அவர்களை விட எனக்கு அதிக உரிமை உள்ளது. இலவசக் கல்வியைக் கற்று இங்கு வந்த எனக்கு மற்றவர்களை விட அதிக தகுதிகள் உள்ளன. மற்ற வேட்பாளர்களுக்கு அந்த தகுதிகள் இல்லை. பெட்டிக்கடை ஒன்றையோ செய்யாதவர் நாட்டை ஆட்சி செய்ய முடியாது என்ற ஒரு கூற்று உள்ளது. நான் பெட்டிக் கடையை அல்ல. பல்வேறு துறைகளில் பாரிய 53 முதலீடுகளைச் செய்துள்ள ஒருவன் நான். எனவே மற்றையவர்களுக்கு இணையாக நான் பெற்றுள்ள அனுபவம் மிகப் பெரியதாகும். அதனை இந்த நாட்டுக்காகப் பயன்படுத்தலாம்.
திருடர்களைப் பிடிப்போம், நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்போம். இவை அனேக வேட்பாளர்களின் கோஷங்களாகும். தேர்தல் மேடையில் உங்கள் கோஷம் என்ன?
அவை எதிர்மறையான கோஷங்கள். என்னிடம் நேர்மறையான கோஷங்கள் உள்ளன. நான் முன்வைத்துள்ள வேலைத்திட்டத்தில் அரசியலமைப்பை மாற்றுவது, திருடர்களைப் பிடிப்பது போன்றவற்றை விட முற்றிலும் வித்தியாசமானது. முன்பு அவை அரசியல் முழக்கங்களாக இருந்தன. நாம் சிறு வயதிலிருந்தே ஒவ்வொரு தேர்தலிலும் இந்த கோஷங்களைக் கேட்டிருக்கின்றோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்பது மற்றுமொரு பழைய கோஷம். இன்றும் இது போன்ற மிகப் பழமையான கோஷங்களே உள்ளன. இவற்றைத் தாண்டிய கோஷங்கள் இருக்க வேண்டும்.
தற்போதைய பொருளாதாரச் சவாலுக்கு மத்தியில் நீங்கள் ஜனாதிபதியானால் உங்களுக்கும் பெரிய பணிகள் ஒப்படைக்கப்படும். அதற்கு உங்களிடத்தில் இருக்கும் வேலைத்திட்டங்கள் என்ன?
நாம் அதற்காகவே விஞ்ஞான ரீதியான வேலைத்திட்டங்களை முன்வைத்திருக்கின்றோம். ஏனைய பிரதான மூன்று வேட்பாளர்களும் பேசுவது கடன் முகாமைத்துவத்தைப் பற்றியாகும். சுமார் 100 பில்லியனைத் தான்டிய கடன் எமக்குள்ளது.
கடனைப் பெற்றுக் கொண்டு கடன் முகாமைத்துவத்தைச் செய்ய முடியாது என்ற அடிப்படையின் பிரகாரம் நாம் தேசிய நிதித் திட்டத்தை முன்வைத்துள்ளோம்.
அதற்காகவே தொழில்முயற்சியாளர்களுக்கு அரசாங்கம் ஒன்று தேவைப்படுகின்றது. இப்படிப்பட்ட ஆட்சியில்தான் செல்வத்தை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த முடியும்.
எம். எஸ். முஸப்பிர்