வெப்பம் மண்ணைத்தின்ன
முற்றத்துத் தென்னையின்கீழ்
மூச்சற்றுக் கிடந்தான்
என் ஆருயிர் தோழன்
சற்று முன்னர்வரை மூப்பின்
முதிர்ச்சியால் தள்ளாடி
நின்றிருந்தான்
நான் அருகில் அமர
என் மடிமீது
சாய்ந்துகொண்டான்.
இரக்கம்மிகு ஏக்கத்தின்
பார்வை என் இதயத்தை
பிழந்து நரகத்தின் வேதனையை
ஊற்றி அடைத்தது.
ஆம்! அவன்
மரணிக்கப் போகிறான்
என்பதை என் ஆன்மா
உறுதியாகவே உணர்ந்தது
பதினோர் ஆண்டுகள்
என்னோடிருந்தவன்.
பல முகங்கள்
காலக்கண்ணாடியில்
தோன்றி மறைந்தாலும்
எப்போதும் மாறாத
நேசம் அவனுடையது.
இப்போதும் அதே ஏக்கம்
நிறைந்த கண்களோடு
என்னையே வெறித்துப்
பார்க்கிறான்.
அன்புக்குரிய அத்தனை
வார்த்தைகளும், வார்த்தைகளை
கோர்த்த அகராதிகளும்
அப்பார்வையில்
அடையாளமற்றுப் போயின.
நேசத்தின் ஏக்கம்
எத்தகையதென்பதை
அப்போது அறிந்துகொண்டேன்.
அவன் ஆவியடங்கப்போவதை
அவனது விம்மல் உணர்த்தியது.
மூச்சற்ற வெற்றுடல்
மண்மீது கிடந்தது.
கண்களில் அந்த ஏக்கம்மிகு
பார்வை மட்டும்
நேசத்தின்
நெருடல்களுடன்
தொடர்ந்தது.
நாமிருவரும் அதீதமாய்
நேசிக்கப்பட்டவர்கள்.
பதினோர் ஆண்டுகளாய்
ஒன்றாயிருந்தவர்கள்.
எவ்வித எதிர்பார்ப்புமற்று
இரக்கத்தின் கயிற்றால்
எப்போதும்
கட்டப்பட்டிருப்பான்.
எல்லையற்ற அன்பென்பதை
இப்போதுவரை
வேறெங்கிலும் கண்டுணரேன்…
கண்கள் நீர் பெருக ரணங்களின்
அம்புகளால்
புதைத்துவைத்தோம்.
நாள்முழுதும்
அழுதும் அவன்
நினைவுகள் அடங்கவில்லை.
அடுத்தநாளே சென்று
இரண்டு குட்டிகளை
தத்தெடுத்துக்கொண்டேன்.
அவன் நினைவுகளோடு
இப்போதும்
இவர்கள்
என்னோடிருக்கிறார்கள்.