கோட்டை கொத்தளங்கள்
இடித்தாலும் தன்மீது
தூசு படாது என
நினைக்கும் தூயவள்
நாடகத்தில் சாமரம் வீசும்
வேடங் கூட தாங்கியவள்
ஊருக்கு ராணியாக
தனக்குத் தானே மகுடம்
சூடிய ராசிக்காரி
ஊரின் தகவல் காப்பகம்
முதிர் கன்னிகளின் பட்டியலை
முடிந்து வைத்திருப்பவள்
யார் வீட்டில் எது பூக்குமென
ஏகமாய் அறிபவள்
தைக்கு முன்
பந்தக்கால் நட்டவர்கள்
வெட்டி வைத்த பந்தக்காலை
வேலியில் இட்டவர்கள்
சேர்ப்பு முறிவு மணப்பட்டியல்
இவள் அரிய சேகரிப்பு
தங்கத்தின் சேதாரம்
பார்ப்பவர்கள் போல
மணப் பந்தலில் இருந்தபடி
திருமணத்தின் கலப்பை
கணடறியும் மோப்பக்காரி
ஊரில் தரித்திரம்
தலையெடுத்தோர்
தகிடு தத்தங்கள்
பட்டியலும் இவள் கையில்
நடுநிசியில் நாய் குரைக்கும்
அலையோசை பிடித்து
ஒப்பாரி ஓலம் கேட்குமுன்
விழுந்த, விழப்போகும் சாவுகள்
எங்கென்று கூறும் குறிகாட்டி
பஞ்சாங்கம் பார்க்காமல்
திதி சொல்லும் பரவசக்காரி
இவள் பரம்பரையில் என்றும்
கோடாங்கி குறிசொல்வோர்
எவரும் பிறக்கவில்லை