காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் ருவன் விஜயவர்தன, அமெரிக்க தூதுவர் ஜூலி சங், கடல் மற்றும் சர்வதேச சுற்றாடல், அறிவியல் அலுவல்கள் பணியகத்தின் பதில் உதவி செயலாளர் ஜெனிபர் லிட்ல்ஜோன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
அரசியல் சவால்கள் மற்றும் இலங்கையின் சுற்றாடல் கொள்கைகளின் முக்கியத்துவம் என்பன இந்தக் கலந்துரையாடலின் போது எடுத்துக் கொள்ளப்பட்ட முக்கிய விடயங்களாக இருந்தன. காலநிலை மாற்றச் சட்டம் மற்றும் சுற்றாடல் சட்டம் போன்ற சட்டமூலங்களை அறிமுகப்படுத்தல் உள்ளிட்ட காலநிலை மாற்றத்திற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அர்ப்பணிப்பு குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், அமெரிக்க- ஆசியா கூட்டாண்மை தொடர்பான விடயங்களும் இதன்போது முன்வைக்கப்பட்டதோடு, எதிர்காலத்தில் அதற்கு தேவையான ஒத்துழைப்பும் கோரப்பட்டது.
தற்போதைய அரசியல் சூழ்நிலை, உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் காலநிலை பிரச்சினைகளின் முக்கியமான தன்மைகளை அமெரிக்கத் தூதுவர் மேலும் வலியுறுத்தினார். சாதகமான முடிவை எதிர்பார்த்து காலநிலை மாற்றத்தில் கவனம் செலுத்தும் இளைஞர்களின் பங்கேற்பின் முக்கியத்துவத்தையும் அவர் விளக்கினார். ஜெனிஃபர் லிட்ல்ஜோன், நடத்தை முறைகளில் செல்வாக்கு செலுத்துவதற்கு காலநிலை மாற்றம் பற்றிய பயனுள்ள செய்திகளை அனுப்புவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இலங்கை காலநிலை தொடர்பான நிகழ்வுகளுக்கு முன்னுரிமை வழங்குதல், காற்றின் தரம், பல்லுயிர் மற்றும் பிளாஸ்டிக் மாசுபாடு தொடர்பான கொள்கைகளில் கவனம் செலுத்துவதன் தேவை தொடர்பிலும் அவர் இதன்போது கலந்துரையாடினார். மின்சார வாகனங்களை (EVs) ஊக்குவிக்கும் உயிர் வெளிப்படைத்தன்மை அறிக்கைகள் மூலம் பாரிஸ் உடன்படிக்கைக்கு இணங்குவது தொடர்பிலும் அவர் விடயங்களை தெளிவுபடுத்தினார்.
இக்கலந்துரையாடலில் சுற்றாடல் காலநிலை மாற்றம் மற்றும் பசுமை நிதி தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி ஆனந்த மல்லவதந்திரியும் கலந்துகொண்டார்.