முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க 200 கோடி ரூபாவை மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் வழங்க வேண்டுமென்று கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.
காத்தான்குடியில் கடந்த ஓகஸ்ட் மாதம் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தமிழில் உரையாற்றிய போது, பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துக் கூறியதாக தெரிவித்தே இந்த கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
2019ஆம் ஆண்டு மே மாதம் அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை வேண்டுமென்றே பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் திரிவுபடுத்தி இவ்வாறு தெரிவித்துள்ளதாகவும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்த உரையின் மூலம் மக்கள் மனதில் தனக்குள்ள மதிப்பை குறைப்பதற்கும், அரசியல் தலைவர் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் என்ற தனது பொது நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க மேலும் குற்றம் சுமத்தியுள்ளார். அநுரகுமார திஸாநாயக்கவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டமைக்காக தேசிய மக்கள் சக்தியின் வழக்கறிஞர் ஊடாக 2 பில்லியன் ரூபா கோரி இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.