ரயில் பயணச்சீட்டுகளை இணையத்தளமூடாக பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் pravesha என்ற இணையத்தளத்தை போக்குவரத்து அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.இதற்கமைய ரயில் பயணிகள் இப்போது www.pravesha.lk என்ற இணையத்தளத்தின் மூலம் டிஜிட்டல் ரயில் பயணச் சீட்டுகளை Online ஊடாக பெற்றுக்கொள்ள முடியுமென போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.
ஏதேனும் இரண்டு ரயில் நிலையங்களுக்கிடையே பயணிக்க 2ஆம் மற்றும் 3ஆம் வகுப்பு பயணச்சீட்டுகளை டெபிட் அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம். பயணச்சீட்டின் QR குறியீடு கையடக்க தொலைபேசிக்கு குறுந்தகவல் (SMS) அல்லது மின்னஞ்சல் (email) மூலம் அனுப்பப்படுமெனவும் அவ்வமைச்சு குறிப்பிட்டது.
QR குறியீட்டின் மூலம் பயணிகள் சம்பந்தப்பட்ட திகதியில் மட்டுமே பயணிக்க முடியும்.
இந்த இணையத்தளத்தில் இருக்கை முன்பதிவு வசதிகள் இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால் இந்த இணையத்தளத்தின் மூலம் டிஜிட்டல் பயணச்சீட்டுகளை, பயணிக்க எதிர்பார்க்கும் திகதிக்கு ஏழு நாட்களுக்கு முன்பே பெற்றுக்கொள்ள முடியுமெனவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.